
சிவபெருமானை தரிசிப்பதற்கு முன்பு, நந்தியின் அருளையும், அனுமதியையும் பெற்றால் மட்டுமே சிவ வழிபாட்டின் முழுப் பலனையும் பெற முடியும். பிரதோஷ காலத்தில் நந்திக்கே முதல் அபிஷேகமும், பூஜையும் செய்யப்படுகின்றன. அதன் பின்னரே சிவனுக்கான பூஜைகள் நடைபெறும். சில வித்தியாசமான நந்தி கோயில்கள் சிலவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.
திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது முறப்பநாடு கைலாசநாதர் கோயில். இந்தக் கோயிலில் மட்டுமே குதிரை முக நந்தியை காண முடியும். இது நவ கைலாச தலங்களில் ஐந்தாவது தலமாகும். இங்கு சுவாமிக்கு எதிரே வீற்றிருக்கும் நந்தியெம்பெருமான், வழக்கத்திற்கு மாறாக குதிரை முகத்துடன் காட்சித் தருகிறார். காசியில் கங்கை நதி வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்கிறது. இதை தட்சிண கங்கை என்பர். அதேபோல் இக்கோயிலில் உள்ள இடத்தில் தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இங்கு குளித்தால் கங்கையில் குறித்ததற்கும் ஈடானது என்கிறார்கள்.
ராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலில் உள்ள அதிகார நந்தி வாகனம், விக்கிரகம், உத்ஸவர் ஆகிய மூன்று சிறப்புகளைப் பெற்று இருப்பது வேறு கோயில்களில் இல்லாத சிறப்பு. மேலும், இது தங்கத்தாலானது. பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டின்பொழுது நந்தி தேவர் சுவாமிக்கு புறங்காட்டாமல் சுவாமிக்கு பின்புறமாக சுவாமியை முன்னோக்கியவாறு செல்வது இங்கு மரபு.
திருக்கழுக்குன்றத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து 14 கிலோ தொலைவிலும் உள்ளது திருநிலை பெரியாண்டவர் ஆலயம். இங்கு மனித வடிவிலான நந்தி தேவர் கைகூப்பிய நிலையில், சிவன் சன்னிதி எதிரில் இருப்பதைக் காணலாம். பிரதோஷ நேரத்தில் இவருக்கு துளசி மாலை சாத்தி, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வீரட்டேஸ்வரர் ஆலயம். இதற்கு கொருக்கை திருத்தலம் என்றும் பெயர். நந்தி எப்போதும் சுவாமிக்கு முன்னால் இருப்பதுதான் வழக்கம். ஆனால், இங்கு சுவாமிக்கு பின்னாலும் ஒரு நந்தி உள்ளது. இது வேறு எங்கும் இல்லாத அமைப்பு. மேற்கு நோக்கிக் காட்சி தரும் இவர், தீர்க்கவாகு முனிவரால் வழிபாடு செய்யப்பெற்றவர்.
தஞ்சை, திருவிடைமருதூர் ரிஷிபுரீஸ்வரர் கோயில், மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு ரிஷிபுரீஸ்வரர் மற்றும் ஞானாம்பிகை அம்மன் ஆகியோர் மூலவர்களாக உள்ளனர். இந்தக் கோயில் 2000 ஆண்டுகள் பழைமையானது. இங்கு கருவறையை நோக்கிய அழகிய நந்தியைக் காணலாம். நந்தியின் காதுகளில் இருந்து அடையாளம் தெரியாத திரவம் வெளியேறுவது இங்கே தனிச் சிறப்பு.
சென்னைக்கு மேற்கே 25 கி.மீ. தொலைவில், பூந்தமல்லியை அடுத்து உள்ள திருமழிசையில் அமைந்துள்ளது ஒத்தாண்டேஸ்வரர் கோயில். இறைவியின் திருநாமம் குளிர்ந்த நாயகி. கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். பொதுவாக, சுவாமிக்கு எதிராக நந்தி இருப்பது வழக்கம். ஆனால், இங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் இடையே நந்தி இருப்பதைக் காணலாம். இக்கோயிலில் மூன்று நந்திகள் உள்ளன.
பொதுவாக, சிவன் கோயில்களில் சிவனுக்கு எதிரே மேற்கு நோக்கிதான் நந்தி அமர்ந்து காட்சியளிக்கும். ஆனால், ராஜபாளையம் அருகே தென்காசி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் சொக்கநாதன் புத்தூரில் உள்ள தவநந்தி கண்டஸ்வரர் கோயில் நந்தியானது அமர்ந்த நிலையில் வடக்கு நோக்கி சிவபெருமானை பார்த்தவாறு காட்சியளிக்கிறார். இதுபோன்று வேறு எந்தக் கோயிலிலும் காண முடியாது.
பொதுவாக, சிவாலயங்களில் சிவனுக்கு முன்புதான் நந்தி இருக்கும். ஆனால், மதுரையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள திருவாதவூர் திருமறைநாதர் ஆலயத்தில் வேதநாயகி அம்மன் முன்பு நந்தி இருப்பதைக் காணலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி என்ற கிராமத்தில் உள்ள ஊன்றீசுவரர் கோயிலில் இறைவன் முன்பு அமர்ந்திருக்கும் நந்தியின் வலது கொம்பு உடைந்த நிலையில் காணப்படுகிறது.
காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோயில். திருமால் வழிபட்டு பேறு பெற்ற தலம் என்பதால், இத்தலம் 'திருமாற்பேறு' என்றானது. இங்கே வாயிலைக் கடக்கும்போது இடப்புறம் நந்தி தேவர் நின்ற கோலத்தில் காட்சி தருவதை தரிசிக்கலாம்.
சிவாலயங்களில் சிவன் முன்பாக நந்தி பகவான் அமர்ந்திருப்பார். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நந்தி வேறு எங்கும் இல்லாத நிலையில் எழுந்து நின்ற நிலையில் காட்சி தருகிறார். இறைவன் புறப்பட்டால் தாமும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி நிற்பதாக ஐதீகம்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவில் அமைந்துள்ளது அருள்மிகு ரிஷபேஸ்வரர் கோயில். கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயிலில் ஒரு அற்புதமான நந்தி சிலை உள்ளது. வருடா வருடம் பங்குனி மாதம் 3ம் தேதி மட்டும் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தி சிலையின் மீது பட்டு சிறிது நேரம் நந்தியின் சிலை பொன்னிறமாக மின்னுகிறது. இந்த நிகழ்வானது பெரும்பாலும் மாலை வேலையில் மட்டுமே நிகழ்கிறது. இந்த அதிசயத்தைக் காண வருடா வருடம் பக்தர்கள் அங்கு திரண்டு நந்தியின் அருளைப் பெறுகின்றனர்.