
ஆடி மாதம் வரும் அமாவாசை மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் கோயில் தீர்த்தங்களில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை, மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சில பிரபலமான ஆடி அமாவாசை கோயில்களும் அவற்றின் சில சுவாரஸ்யமான உண்மைகளும்.
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. இவரை மூன்று அமாவாசை தொடர்ந்து வழிப்பட்டால் நோய்கள் குணமாகுவதாகவும், திருமணத் தடைகள் விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இங்குள்ள "ஹிரிதாபதணி" தீர்த்தத்தில் ஆடி அமாவாசை அன்று நீராடினால் மனதால் நினைத்த பாவம் கூட விலகிவிடுமாம்.
இங்கு 'பப்ளி துப்பட்டி' எனப்படும் அங்க அஸ்திரம் சுவாமிக்கு சாத்தப்படுகிறது. இது கோயிலில் மட்டுமே கிடைக்கும். இதை வாங்கி சுவாமிக்கு சாத்தினால் உடம்பில் இருக்கும் நோய்கள் விரைவில் தீரும் என்பது நம்பிக்கை. பெருமாள் ஸ்தலங்களில் இவரை பிணி தீர்க்கும் கடவுளாக 'வைத்திய வீரராகவர்' என அழைக்கிறார்கள்.
ஸ்ரீராமரே தனது பாவத்தை போக்கி கொண்ட இடம் ராமேஸ்வரம் என்பதால் ஆடி அமாவாசை இங்கு சிறப்பானதாகும். அன்று அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன், மற்றும் அனுமருடன் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள் பாலிக்கின்றனர்.
இங்கு தீர்த்தமாட ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அம்மன் சன்னதிக்கு நுழையும் முன் வாயிலில் இரண்டு பெரிய யானைத் தந்தங்கள் பக்தர்களை வரவேற்கின்றன. அந்த தந்தங்கள் இரண்டும் தலா 5 அடி உள்ளது. 20 கிலோ எடை கொண்டது.100 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் இறந்த யானையின் தந்தங்கள் இவை. தமிழ்நாட்டில் வேறு எந்த கோயிலிலும் இப்படி ஒரு அமைப்பை காண முடியாது.
ராமநாதபுரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்புல்லாணி. இங்கு அமைந்துள்ள ஆதிஜெகநாதபெருமாள் ஆலயத்தில் ஆதிஜெகந்நாதர் (அமர்ந்தகோலம்), சயனராமர் (கிடந்தகோலம்), பட்டாபிராமர் (நின்றகோலம்), அரசமர பெருமாள், பட்டாபி ராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம். ஆடி அமாவாசை நாட்களில் இங்கே மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர். பொதுவாக பெருமாள் தலங்களில் சுவாமி, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் தாயாருடன் இணைந்து காட்சி தருவார். ஆனால், இங்குசுவாமி வெள்ளி தோறும் தாயாருடன் காட்சி தருகிறார். அன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.
சொரிமுத்தையனார் கோவில் நெல்லையில் இருந்து 45 கிமீ தொலைவில் பாபநாசத்துக்கு அருகிலுள்ளது. இங்கே ஆடி அமாவாசை அன்று அகத்தியர் தீர்த்தமாடியதன் நினைவாக அவருக்கு இங்கே சன்னதி உள்ளது. இங்கு மட்டுமே சுவாமிக்கு செருப்பு காணிக்கையாக செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இங்கு மட்டுமே பூக்குழி இறங்கும் விழா நடைபெறுகிறது. அன்று இக்கோவிலில் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ஜமீன்தார் அவர்கள் ராஜ உடையில் தோன்றி விழாவுக்கு சிறப்பு சேர்ப்பார்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோடியக்கரை அமிர்தகடேசுவரர் கோவில். நவகோடி சித்தர்கள் இன்றும் இத்தலத்தில் வாழ்வதாக நம்பப்படுகிறது. இக்கோடிக்கரைக் கடலில் ஒருமுறை நீராடினால், சேதுவில் நூறு முறை நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி, தை மாத அமாவாசைகளில் கடலில் நீராட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் செந்திலாண்டவர் சுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த வழிபட்டு பின்னர் முருகப்பெருமானின் அருளை பெறுவர். ஒரு தெய்வத்திற்கு ஒரு உற்சவர் மட்டுமே கோயிலில் இருக்கும். ஆனால், திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகன் கோயிலில் மட்டும் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவருக்குமே தனி சன்னதிகள் இருப்பது தனிச்சிறப்பு. வேறெங்குமில்லாத வகையில் பன்னீர் இலையில் வைத்து விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. இத்தலத்தில் நான்கு வேதங்களும் பன்னீர் மரமாக மாறி செந்தில் ஆண்டவரை வழிபடுவதாக ஐதீகம்.
வத்றாயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் விரதமிருந்து நடைபயணம் மேற்கொண்டு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் வழிபடுவர். ஆடி அமாவாசை அன்று இங்குள்ள அன்னதான மடத்தில் இங்கு வாழ்ந்த கோரக்கர் சித்தரின் பெயரில் பிரசாத மாவு வழங்கப்படுகிறது.
அரிசி, சர்க்கரை, நெய், தேன், ஏலம், சுக்கு கலந்த மாவை லிங்கமாக வடிவமைத்து பூஜை செய்வார்கள். வழிபாட்டிற்கு பின்னர் இந்த மாவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை சாப்பிட தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. எந்த இடத்திலேயும் இல்லாத அளவுக்கு சதுரகிரி மலையில் மட்டும் தான் இரட்டை லிங்கங்கள் ஒரே இடத்தில் காணப்படுகிறது.