
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கோவில் 12 ஆழ்வார்களும் பாடல் பாடியதிருத்தலமாக விளங்குகிறது. சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாள் ஏழுமலையான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இந்த கோவில் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரசிதி பெற்ற புனித யாத்திரைகளில் ஒன்றாக உள்ளது.
திருமலை 3000 அடி உயரத்திலுள்ள குளிர்ப் பிரதேசமாக இருந்தாலும் ஏழுமலையான் சிலையின் வெப்பம் மட்டும், 110டிகிரி ஃபாரன்ஹீட்டிற்குக் குறைவதே கிடையாது. இது, இன்றளவும் அதிசயமான நிகழ்வாகவே உள்ளது.
ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் கிடையாது; கொண்டாட்டம் மட்டும் உண்டு. உலகிலேயே அரிதான ஒற்றைக்கண் நீலம் என்ற அரிய ரத்தினக்கல், ஏழுமலையான் கோவிலில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடியாகும்.
வில்வ இலை சிவ அர்ச்சனைக்குரியது. வில்வம் அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படும், ஒரே வைணவ ஆலயம் ஏழுமலையான் கோவில் மட்டுமே.
திருமலைக்கு மலை ஏறி செல்வோருக்கு வாழ்வில் ஏற்றம் வரும் என்பார்கள். அப்படி வாழ்வில் ஏற்றம் தரும் திருப்பதி பயணம் எல்லோருக்கும் ஏற்றம் தரும் வகையில் இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை. குறிப்பாக சிம்மம், தனுசு, கும்ப ராசிக்காரர்கள் திருப்பதிக்குச் செல்லக்கூடாது. சென்றால் கடனாளி ஆகிவிடுவர் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முடி காணிக்கையும் செலுத்துகின்றனர். சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கை செலுத்துகின்றனர்.
உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் இந்து கோவில்களில் திருப்பதி ஏழுமலையான் கோவில் முதலிடத்தை வகிக்கிறது. திருப்பதி ஏழுமலையானின் உண்டியலில் தினந்தோறும் சராசரியாக ரூ. 3 கோடி வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு 2 கோடியே 55 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளதாகவும், 99 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டில் (2024) ரூ.1,365 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. தற்போது ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், கடந்த 3 ஆண்டுகளாக உண்டியல் காணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று திருப்பதி கோவிலில் கடந்தாண்டு 6 கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும், 12.14 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம் போன்ற பிரசித்தி பெற்ற விழாக்களில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. விசேஷ நாட்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை தரிசினம் செய்ய வருவதாக கூறப்படுகிறது.