

மாதத்தில் இரு முறை வரும் ஏகாதசி திதிகள் எல்லாமே முக்கியத்துவம் வாய்ந்த விரத நாட்களாக இந்துக்களால் அனுசரிக்கப்படுகிறது. இதில் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி மிகவும் புனிதமானதாகவும், மங்கலகரமானதாகவும் கருதப்படுகிறது. இது ஆன்மிக பயிற்சிகளுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.
இந்த ஆண்டு அரிய சந்திர வரிசை காரணமாக ஒரே ஆண்டிலேயே இருமுறை வைகுண்ட ஏகாதசி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 10ம் தேதி ஒரு முறை வைகுண்ட ஏகாதசி வந்த நிலையில், தற்போது ஆண்டின் இறுதியில் டிசம்பர் 30ம் தேதியும் வைகுண்ட ஏகாதசி வருகிறது.
இந்த நாளில் வைகுண்ட வாசல் மகாவிஷ்ணு கோயில்களில் அதிகாலை திறக்கப்படுகிறது. இதை பரமபத வாசல் என்றும் சொரக்க வாசல் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த புனித நாளில் விரதம் இருப்பது ஏழு ஜன்மங்களில் நாம் சேர்த்து கொண்ட பாவங்களைப் போக்கும் என்று நம்பப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி சம்பந்தமாக ஒரு புராணக் கதை கூறப்படுகிறது. ஒரு காலத்தில் மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடி தேவலோகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தினர். ஸ்ரீ மகாவிஷ்ணு அவர்களை தோற்கடித்து வேதங்களை மீட்ட பிறகு, மனம் திருந்திய அவர்கள் பகவானிடம் ஒரு வேண்டுகோளை வைக்கின்றனர். தாங்கள் பகவானிடம் தோல்வியுற்ற அந்த ஏகாதசி நாளை வைகுண்ட ஏகாதசியாக அனுசரித்து, வைகுண்டத்தின் வடக்கு வாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு மோட்சத்தை தந்தருள வேண்டும் என்பதே அது. பகவானும் அவ்வாறே வாக்களித்தார்.
அன்று அதிகாலை கோயிலில் வைகுண்ட வாசல் வழியாக உள்ளே நுழைந்து சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள், அன்று முழுவதும் முழுப் பட்டினியாக முழுமையான விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டுமே சாப்பிட்டு அன்று முழுவதும் பகவத் ஸ்மரணையில் ஈடுபடுகின்றனர். எல்லா கோயில்களிலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், பக்தி பாடல்கள், உபன்யாஸங்கள் என்று நாள் முழுவதும் நிகழ்சிகள் நடப்பதால், பக்தர்கள் கோயிலிலேயே தங்கி தங்களை முழுவதும் பக்தியில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். வீட்டில் இருப்பவர்கள் வீட்டிலேயே பூஜை, வழிபாடுகள் என்று செய்கிறார்கள். அது மட்டுமல்ல, அன்றிரவு தூங்காமல் கண் விழித்திருப்பதும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அன்று முழுவதும் பக்தியுடன் பகவான் நினைவிலேயே கழிக்க வேண்டும் என்பதே அதன் சாராம்சம்.
தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தில் அதிகாலை பரமபத வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைவதை மிகப் புனிதமாகக் கருதி ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்ரீரங்கம் வருகின்றனர். அதேபோல திருமலை ஸ்ரீ வேங்கடாசலபதி கோயிலிலும், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலிலும் மிக கோலாகலமாக வைகுண்ட ஏகாதசி வழிபாடு நடைபெறுகிறது.