

மார்கழி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி தேவதேவாஷ்டமி என்று பெயர். அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடைப்பட்ட 8-ம் நாள் தேய்பிறை அஷ்டமி, பைரவரின் காவல் தெய்வ சக்தியை வெளிப்படுத்துகிறது.
இந்த ஆண்டின் முதல் காலாஷ்டமி, ஜனவரி 10-ம்தேதி (நாளை) சனிக்கிழமை காலை 8.25 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஜனவரி 11-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.22 மணிக்கு முடிகிறது.
பொதுவாக தேய்பிறை அஷ்டமி என்பது ஆன்மிக ரீதியாக மிகவும் சக்திவாய்ந்த ஒரு திதியாகும். சிவபெருமானின் உக்கிர வடிவமான கால பைரவருக்கு உகந்த நாள். அவர் காலத்தின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். நமது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் சக்தி கொண்டவர். இந்த நாளில் கால பைரவரை வழிபட்டால் அநியாயமாக நமக்கு தொல்லை கொடுக்கும் எதிரிகளின் பலம் குறையும்.
வாழ்க்கையில் இந்த பிரச்னை நமக்கு நீங்கவே நீங்காது என்று நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், அதுபோன்ற பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் பைரவரை தொடர்ந்து தேய்பிறை அஷ்டமி நாட்களில் வழிபாடு செய்து கொண்டே வந்தோமேயானால் கண்டிப்பாக அந்த பிரச்னைகள் நீங்கும்.
காலத்தில் வந்து நமக்கு அருளக்கூடியவர், காலனையும் வெல்லக்கூடியவர், மிகப்பெரிய ஆற்றல் படைத்தவர் காலபைரவர் தான் காசிக்கு இன்றும் காவலாக இருந்து அருள்புரிகிறார் என்பதிலிந்தே தெரியும் காலபைரவர் எப்போற்பட்ட காவல் தெய்வமாக இருந்து நம்மைகாக்கக்கூடியவர் என்று.
இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த நாளில் தெரியாமல் கூட இந்த மூன்று தவறுகளை செய்து விடாதீர்கள். அப்படி செய்தால் கால பைரவரின் கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள்.
* காலபைரவரின் வாகனம் நாய். எனவே தேய்பிறை அஷ்டமி அன்று நாய்களுக்கு தீங்கு விளைவிப்பது மிகப்பெரிய பாவமாக கருதப்படுகிறது.
* அசைவ உணவை இந்த நாளில் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
* இந்த நாள் கேடுகளை அழிக்கும் நாள் என்பதால், எதிர்மறை எண்ணங்களை மனதில் கொள்ளக்கூடாது. மனதில்,பொறாமை, மற்றவருக்கு கெடுதல் ஏதும் நினைக்கக்கூடாது.
செய்யக்கூடாதவை..
* திருமணம், புது வீடு வாங்குதல், கிரகப்பிரவேசம், புதிய தொழில் தொடங்குதல் போன்ற சுப காரியங்கள் செய்யக்கூடாது. பொதுவாக, தேய்பிறை காலம் வளர்ச்சி குன்றுவதைக் குறிப்பதால், அஷ்டலட்சுமிகளின் அருட் பார்வை இருக்காது.எனவே புதிய வேலைகளைத் தொடங்குவது போன்ற முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
* மருத்துவ பரிசோதனை, உடல்நலப்பிரச்சனைகளுக்கு மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
* தேய்பிறை அஷ்டமி திதி அழிக்கும் தன்மை கொண்ட நாள் என்பதால் புதிய செயல்களைத் தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
செய்ய வேண்டியவை...
* பைரவர் காலில் எலுமிச்சம்பழம் வைத்து அர்ச்சித்து, வீட்டுக்கு எடுத்து வருவது நோய்கள், பீடைகளை நீக்கும்.
* தேய்பிறை அஷ்டமி நாளில் குறிப்பாக ராகு காலத்தில், பைரவரை வழிபாடு செய்தால் தீய சக்திகளை விலக்கி, செல்வத்தையும், மகிழ்ச்சியையும் தரும். எனவே, அன்றைய நாளில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, சிவப்பு நிற மலர்கள் சாற்றி, நெய் தீபம் ஏற்றி பைரவரை வழிபடுவது நல்லது.
* எலுமிச்சை பழம், தேங்காயில் நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். வெள்ளை பூசணிக்காயில் நல்லெண்ணெய் ஊற்றி திரியில் குங்குமத்தை தடவி அந்த திரியில் தீபம் ஏற்றலாம்.
* தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் எவ்வளவு பெரிய கடன் தொகையில் சிக்கி இருந்தாலும் இதிலிருந்து உடனடியனாக மீண்டு விடுவார்கள். தொழில் மாற்றம் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டாலும் பைரவரை மனதார வழிபட்டு செவ்வரளி மலர் சாற்றினால் இழந்த செல்வாக்கை மீண்டும் அடையலாம். பகைவர்கள் தொல்லை நீங்கும்.
* அன்னதானம் செய்தல், கருப்பு நாய்களுக்கு உணவளித்தல், ஏழைகளுக்கு உதவுதல் போன்றவை செல்வத்தையும், நன்மையையும் பெருக்கும்.
* தேய்பிறை அஷ்டமி நாளில் காலையில் சிவபெருமானையும் மாலையில் பைரவரையும் தரிசனம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
* அன்றைய தினம் உங்களுக்கு பைரவருக்கான மந்திரம் எதும் தெரியவில்லை என்றாலும், பைரவாய நமஹ என்று சொல்லிக்கொண்டிருந்தாலே போதும்.
* கோவிலுக்கு போக முடியாதவர்கள் வீட்டின் நெய் தீபம் ஏற்றி வைத்து அதன் எதிரில் அமர்ந்து பைரவருக்கான போற்றிகள், அஷ்டோத்திர நாமாவளி, பைரவர் அஷ்டகம் படிக்கலாம். இதை படிப்பது அற்புதமான பலன்களை கொடுக்கும். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் அல்லது பஞ்சாமிர்தம் வைத்து வழிபாடு செய்வது மிகவும் விசேஷம்.
* பைரவருடைய அருள் கிடைக்க தெருவில் அனாதையாக திரியும் நாய்களுக்கு உணவளிப்பது, தெருவில் திரியும் நாய்களை அடாப் செய்து வளர்க்கும் நபர்களுக்கு உதவி செய்யலாம், அடிப்பட்ட நாய்களுக்கு ஏதாவது உதவி செய்வது, மருத்துவ உதவி செய்வது இதையெல்லாம் செய்தால் பைரவருடையை அருள் நிச்சயமாக நமக்கு கிடைக்கும்.
ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். மனது ஒன்றி அன்புடன் இந்த விஷயங்களை செய்து பைரவரை வழிபட்டால் மட்டுமே உங்களது வாழ்க்கை மேன்மேலும் வளர்ச்சியடையும் என்பது நிச்சயம்.