
ஆந்திர மாநிலத்தில் சித்தூர் வட்டத்தில் முற்காலத்தில் திருக்காரிக்கரை என்றழைக்கப்பட்ட கிராமம் தற்போது இராமகிரி என்றழைக்கப்படுகிறது. இங்கு ஸ்ரீகால பைரவர் மற்றும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீவாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் லிங்கத்தின் எதிரில் ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் அருளும் ஒரே சிவாலயம் இதுவே.
இராமகிரி ஆலயத்தில் முதலில் தோன்றி அருள்பாலித்தவர் ஸ்ரீகாளிகாதேவி சமேத ஸ்ரீகால பைரவர். இதனாலேயே இத்தலத்தை கால பைரவ ஷேத்திரம் என்று அழைக்கிறார்கள். இத்தலத்தில் மிகவும் அபூர்வமான நந்தி தீர்த்தம் அமைந்துள்ளது.
முற்காலத்தில் காளிங்கு மடுகு என்ற பெரிய நீர்த்தேக்கம் இப்பகுதியில் இருந்தது. இராவண வதத்தினால் வந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ஒரு சுயம்பு லிங்கத்தைக் கொண்டு வந்து இராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்ய விரும்பிய ராமபிரான் ஆஞ்சநேயரிடம் 'காசியிலிருந்து சுயம்பு லிங்கத்தைக் கொண்டு வரும்படி' கூறுகிறார். இப்பகுதியின் வழியாக ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்த அனுமனைக் கண்ட கால பைரவர் தன் ஞான திருஷ்டியால் அவர் செல்லும் நோக்கத்தை உணர்ந்து காசியிலிருந்து கொண்டு வரவிருக்கும் சுயம்பு லிங்கத்தை திருக்காரிக்கரையில் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தார்.
ஆஞ்சநேயர் சுயம்பு லிங்கத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்த போது காலபைரவர் திருக்காரிக்கரையில் இருந்த அனைத்து நீர் நிலைகளும் வற்றிப் போகச் செய்து அனுமனுக்கு தாகம் ஏற்படச் செய்தார். காலபைரவர் மாடு மேய்க்கும் சிறுவனாகத் தன் உருவத்தை மாற்றிக் கொண்டார். ஆஞ்சநேயருக்குத் தாங்க முடியாத தாகம் ஏற்பட தாகத்தைத் தணித்துக் கொள்ள தண்ணீரைத் தேடி அலைந்தார். அப்போது எதிரே தென்பட்ட சிறுவன் உருவத்தில் இருந்த காலபைரவரிடம் இப்பகுதியில் நீர்நிலை ஏதேனும் உள்ளதா என்று கேட்க அதற்கு கால பைரவர் உருவில் இருந்த அச்சிறுவன் நீர் நிறைந்த காளிங்க மடுகுவிற்கு ஆஞ்சநேயரை அழைத்துச் சென்றார்.
ஆஞ்சநேயர் அச்சிறுவனிடம் “சிறுவனே. இந்த சுயம்பு லிங்கத்தைச் சற்று நேரம் வைத்திருப்பாயாக. இதை எக்காரணத்தைக் கொண்டும் கீழே வைக்கலாகாது. நான் தாகத்தைத் தணித்துக் கொண்டு வந்து சுயம்பு லிங்கத்தைப் பெற்றுக் கொள்கிறேன்” என்று கூறி நீர் அருந்தச் சென்றார். இதற்குள் சிறுவன் வடிவில் இருந்த காலபைரவர் காளிங்க மடுகுக் கரையில் ஏற்கெனவே நிர்ணயம் செய்திருந்த இடத்தில் சுயம்பு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.
தண்ணீரை அருந்தித் திரும்பிய ஆஞ்சநேயர் காசியிலிருந்து கொண்டு வந்த சுயம்புலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு கோபம் கொள்கிறார். கோபத்தோடு அந்த லிங்கத்தை நகர்த்தத் தன் வாலை லிங்கத்தின் மீது சுற்றி இழுக்கப் பார்க்கிறார். பிரதிஷ்டை செய்யப்பட்ட சுயம்பு லிங்கம் அசைய மறுக்கிறது. லிங்கத்தின் மீது வாலைச் சுற்றிய தன் குற்றத்திற்காக ஆஞ்சநேயர் மன்னிப்பு கோருகிறார்.
தான் கொண்டு வந்த சுயம்பு லிங்கம் இங்கே பிரதிஷ்டை ஆனதற்குக் காரணம் இந்த காளிங்க மடுகுதான் என்று நினைத்து உடனே காளிங்க மடுகின் மேல் சினம் கொண்டு அருகிலிருந்த காரிகிரி என்ற மலையைப் பெயர்த்தெடுத்து காளிங்க மடுகின் மீது போட்டு “இந்த மலைப்பிரதேசம் இனி வனப்பிரதேசமாகப் போகக் கடவது என்று சபித்தார்”. அந்த காரிகிரி மலையே இப்போது நாம் இராமகிரியில் காணும் பெரிய மலையாகும்.
காளிங்க மடுகுவை மலை மூடியிருந்தாலும் அதில் உற்பத்தியாகி ஊற்றாக வெளிப்படும் நீர் ஆலயத்திற்கு வெளியில் உள்ள திருக்குளத்திற்கு ஒரு நந்தியின் வாய் வழியாக வந்து கொண்டே இருக்கிறது. இந்த நீர் காலம் காலமாக கணநேரமும் இடைவிடாது வந்து கொண்டேயிருப்பது ஒரு அதிசயமாகும்.
சிவலிங்கத்தை வாலால் இழுக்க ஆஞ்சநேயர் முயற்சி செய்ததால் மூலவர் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவலிங்கத்தில் அனுமன் வாலினால் சுற்றிய தழும்புகள் இருப்பதையும் எதிரில் ஸ்ரீஆஞ்சநேயர் சிவபெருமானை வழிபடும் நிலையில் விளங்குவதையும் காணலாம். இராமகிரி சென்னை திருப்பதி சாலையில் நாகலாபுரத்திற்கும் பிச்சாட்டூருக்கும் இடையில் அமைந்துள்ளது.