
ஆழ்வார்திருநகரி ஸ்ரீ ஆதிநாதன் கோயில் நூற்றியெட்டு வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகம் இத்தலத்தில் பெருந்திருவிழாவாக நடைபெறும். அதன்படி, கடந்த மே 31ம் தேதியன்று இக்கோயில் கொடியேற்றம் நடைபெற்றது. அன்று முதல் இத்தலத்தில் நாள்தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. வரும் ஜூன் 4ம் தேதி நாளை மறுநாள் மங்களாசாசன உத்ஸவத்தில் ஒன்பது கருட சேவை நடைபெற உள்ளது.
அன்று மற்ற எட்டு பெருமாள்களும் பல்லக்கில் ஆழ்வார்திருநகரி திருத்தலத்துக்கு வருகை தருவார்கள். ஸ்ரீ ஆதிநாதர் கோயில் முற்றத்தில் நவதிருப்பதி பெருமாள்களுக்கும் திருமஞ்சனம் மற்றும் திருவாராதனம் நடைபெறும். இரவு ஒன்பது மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் நம்மாழ்வாருக்குக் காட்சி தருவார். சுவாமி நம்மாழ்வார் பூப்பந்தல் மண்டபத்தில் எழுந்தருள்வார். அச்சமயம் நவதிருப்பதி எம்பெருமான்களுக்கும் மதுரமான தமிழில் மங்களாசாசனம் நடைபெறும். அன்று இரவு மதுரகவியாழ்வார் முன் செல்ல ஸ்ரீ நம்மாழ்வார் அம்ச வாகனத்தில் எழுந்தருள, ஒன்பது பெருமாள்களும் கருட வாகனத்தில் ஆரோகணித்து கருட சேவை உத்ஸவம் மிகச் சிறப்பாக நடைபெறும்.
நவதிருப்பதி கோயில்களான ஸ்ரீ கள்ளபிரான் - ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீ எம் இடர் கடிவான் - ஸ்ரீ வரகுணமங்கை (நத்தம்), ஸ்ரீ காய்சினவேந்தன் - திருப்புளியங்குடி, ஸ்ரீ தேவர்பிரான் - இரட்டைத் திருப்பதி, ஸ்ரீ செந்தாமரைக் கண்ணன் - இரட்டைத் திருப்பதி, ஸ்ரீ மாயக்கூத்தன் - திருக்குளந்தை (பெருங்குளம்), ஸ்ரீ நிகரில் முகில்வண்ணன் – தென்திருப்பேரை, ஸ்ரீநிக்சோபவித்தன் - திருக்கோளுர், ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் – ஆழ்வார்திருநகரி ஆகியோர் ஒவ்வொருவராக ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருள்வர். அவர்களை மங்களாசாசனம் செய்து வரவேற்பதற்காக கொடி, குடை, ஆலவட்டம் பதாகைகள், திருச்சங்கு போன்றவற்றுடன் யானைகள் முன் வர ஆழ்வார்திருநகரி கோயிலின் முன்புறமுள்ள பூப்பந்தல் மண்டபத்திற்கு நம்மாழ்வார் எழுந்தருள்வார்.
ஒவ்வொரு தல பெருமாள் வரும்போதும் அவர்களுக்குரிய திருவாய்மொழி பாடல் பாடப்படும். தீபாராதனையாகி அந்த பெருமாள் ஆழ்வார்திருநகரி கோயிலுக்குள் எழுந்தருளியிருப்பார்கள். தொடர்ந்து ஒன்பது பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடைபெறும். இரவு பத்து மணியளவில் ஒன்பது பெருமாள்களும் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருள்வார்கள்.
ஆழ்வார்திருநகரி நவ திருப்பதிகளில் குரு ஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் ஆழ்வார்திருநகரியில் அமைந்துள்ளது. ஆழ்வார்திருநகரி என்ற பெருமைமிகு ஊருக்கு திருகுருகூர் என்பது போன்ற பல்வேறு பெயர்களும் உண்டு. ‘குருகு’ என்றால் சங்கு என்று பொருள்படும். ஆற்றில் மிதந்து வந்த சங்கு இத்தல பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் திருகுருகூர்என்ற பெயர் வந்தது என்றும், பெரும் வெள்ளத்தால் உலகமே அழிந்து மீண்டும் உருவானபோது முதலில் உண்டான இடம் இது என்பதால் ஆதிக்ஷேத்திரம் என்றும், நம்மாழ்வார் கோயில் கொண்டிருந்ததால்ஆழ்வார்திருநகரி என்றும் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது
இந்தக் கோயிலில் கருடன் கைகளில் அபய ஹஸ்தம், நாகர், சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். இக்கோயிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல குழல் தூண்களும் கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசை தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கம் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலியும் எக்காள ஒலியும் கேட்கிறது.
ஸ்ரீமந் நாராயணன் ராமபிரானாக அவதரிக்கையில் லட்சுமணனாக உடன் வந்தவர் ஆதிசேஷன். ‘தனது இறுதிக் காலத்தில் காலந்தகனை சந்திக்கும் வேளையில் தம்மிடம் எவரையும் அனுமதிக்க வேண்டாம்’ என தனது தம்பி லட்சுமணனிடம் ராமபிரான் கூறியிருந்தார். அவ்வேளையில் அங்கு துர்வாச மாமுனியை அனுமதிக்க லட்சுமணன் தயங்கவே, அவரை புளிய மரமாக பிறப்பெடுக்கும்படி சபித்துவிட்டார் முனிவர். அவ்வாறு ஆழ்வார்திருநகரி என்னும் இந்தத் திருத்தலத்தில் லட்சுமணன் புளிய மரமாகி விட, அவரது வேண்டுகோளுக்கு இணங்கி ஸ்ரீராமபிரான் பின்னாளில் தாமே நம்மாழ்வாராக அவதரித்து அப்புளிய மரத்தில் காட்சி அளித்ததாகவும் லட்சுமணன் திருப்புளி ஆழ்வாராக இங்கு காட்சி அளித்தமையால் இந்தத் தலம் சேஷ க்ஷேத்திரம் எனவும் வழங்கப்படுகிறது.
இந்தக் கோயிலின் தல விருட்சம் உறங்கா புளிய மரம். இதன் இலைகள் இரவிலும் உறங்காது. உறங்காமல் இவ்வுலகை காக்கும் இந்த உறங்காப் புளிய மரம் லட்சுமணனின் அவதாரமாகவே காட்சி அளிக்கிறது. இந்த புளியமரம் பூக்கும், காய்க்கும். ஆனால், ஒருபோதும் பழுத்ததில்லை. பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் இம்மரத்தைக் காண முடிகிறது. சுவாமி நம்மாழ்வார் தவம் செய்த இந்த மரம் சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானதாகும். ஆனால், இன்றும் செழுமையுடன் உள்ளது. இந்த மரத்தினை சுற்றி முப்பத்தியாறு திருக்கோயில்களின் பெருமாள் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால் இம்மரத்தை தொழுதால் முப்பத்தாறு திவ்ய தேசங்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.
இத்தல இறைவன் பெயர் ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான். இறைவி பெயர் ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி. தல தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகும். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது ஆழ்வார்திருநகரி திருத்தலம்.