திருமலை திருப்பதியில் தினமும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடைபெறுவது மரபு. ஆனால், மார்கழி மாதம் முழுவதும் திருமலை ஆலயத்தில் அதிகாலையில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்களையே பாடுகின்றனர். பன்னிரண்டு ஆழ்வார்களின் ஆண்டாள் மட்டுமே பூமி தேவியின் அம்சமாக பிறந்தவர். மற்ற ஆழ்வார்கள் தங்களை நாயகியாகவும் இறைவனை நாயகனாகவும் வைத்து பாசுரங்கள் பாடினாலும் ஆண்டாள் இயல்பிலேயே பெண்ணாக இருந்த காரணத்தினால் ஆண்டாள் தன்னை நாயகியாகவும் இறைவனை நாயகனாகவும் பாவித்து பாடிய பாசுரங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகத் திகழ்கின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்ட ஆண்டாள், இறைவனிடம் ஆழ்ந்த அன்பு கொண்டதுடன், இறைவனே தனக்கு கணவராக அமைய வேண்டும் என்று விரும்பினாள். அந்த எண்ணமே, பெரியாழ்வார் வடபத்ரசாயிக்கு அணிவிக்க தொடுக்கும் மாலையை அவர் அறியாமல் சூடிப்பார்த்து அழகு பார்த்தாள். அவள் சூடிய மாலையே பிறகு வடபத்ரசாயிக்கு அணிவிக்கப்பட்டது.
இறைவனை கணவனாக அமையவேண்டி மார்கழி மாதம் பாவை நோன்பு அனுசரித்து திருப்பாவை பாசுரங்களைப் பாடி வழிபட்டாள். பின்னர் தன்னை ஸ்ரீரங்கநாதர் ஏற்றுக்கொண்டால் கள்ளழகருக்கும் வேங்கடவனுக்கும் வேண்டிக்கொண்டாள். ஆண்டாள் தான் விரும்பியபடியே ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமாகிவிட்டாள்.
ஆண்டாள் வேண்டிக் கொண்டதை நிறைவேற்றும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவித்த மலர் மாலை சித்திரை மாதம் பௌர்ணமி அன்று கள்ளழகருக்கும், புரட்டாசி மாத பிரம்மோத்ஸவத்தின்போது வேங்கடேச பெருமாளுக்கும் சகல மரியாதைகளுடன் எடுத்துச் செல்லப்பட்டு சமர்ப்பிக்கப்படுகின்றன.
மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் திருப்பாவை பாசுரங்கள் பாடுவது வழக்கம். அதேபோல், திருமலை வேங்கடவன் திருக்கோயிலிலும் மார்கழி மாதம் சுப்ரபாதத்திற்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்களே பாடப்படுகின்றன.
‘ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் சூடுவேன்’ என பெருமாள் விரும்பி ஏற்றுக்கொண்டதால் ஆண்டாளை சிறப்பிக்கும் விதமாக மார்கழியில் சுப்ரபாதத்திற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடல்களைக் கேட்டு பெருமாள் துயில் எழுகிறார். திருப்பதி திருத்தலத்தில் மட்டும் மார்கழி மாதத்தில் பெருமாளுக்கு நடைபெறும் பூஜைகள், படைக்கப்படும் பிரசாதங்கள் என அனைத்துமே மாறும். திருப்பதியில் அதிகாலையில் பாடப்படும் சுப்ரபாதம் மட்டுமல்ல, இரவு நடை சாத்தப்படுவதற்கு முன்பு நிறைவாக நடைபெறும் ஏகாந்த சேவையிலும் மாற்றம் உண்டு.
ஏகாந்த சேவையின்போது வழக்கமாக போக சீனிவாச மூர்த்திக்குதான் பூஜை நடத்தப்படும். ஆனால், மார்கழி மாதத்தில் மட்டும் போக சீனிவாசருக்கு பதிலாக ஸ்ரீ கிருஷ்ணருக்குதான் உபச்சாரங்கள் நடத்தப்பட்டு அவரை தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடுவார்கள். பகவான் கண்ணனுக்கு விருப்பமான மாதம் மார்கழி என்பதால் இந்த சிறப்பு பூஜை நடைபெறும். மார்கழி மாதம் முழுவதும் பெருமாளுக்கு செய்யப்படும் அலங்காரங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் கிளிகளும் சேர்ந்து அலங்கரித்து வைக்கப்படும்.
மார்கழி மாதத்தில் சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே கடவுள்கள் கண் விழிப்பதாக ஐதீகம். பெருமாளுக்கு பிரம்ம முகூர்த்த வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருப்பதியில் ஆண்டாளுக்கு இப்படியாக சிறப்புகள் நடைபெறுவதால்தான் காலையில் சுப்ரபாதத்திற்கு பதிலாக திருப்பாவை பாடி பெருமாள் துயில் எழுகிறார்.
திருப்பதியில் மட்டும் என்ன, நாமும் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படும் அவற்றை மார்கழி மாதம் தினசரி பாடலாம். மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதம். இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்சிகளும் நடத்தப்படாமல் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, செல்வ செழிப்பை பெறுவார்கள். அதிகாலை எழுந்து வீட்டை சுத்தம் செய்து நீராடி கோலமிட்டு திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாட வேண்டும். மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி இல்லங்களிலும் மற்றவர் உள்ளங்களிலும் ஆண்டாளை நினைத்து இறையருள் பெறலாம்.