யாரையாவது இனி ‘மூதேவி’ என்று திட்டுவதற்கு முன்பு யோசியுங்கள்!

Moodevi
Moodevi
Published on

ஸ்ரீ மகாலட்சுமி தாயாரைப் போல அழகான உருவில் இல்லாமல், அமங்கலமான கோலத்தில் இருந்தாலும், உலகில் உள்ள அறுபத்தி நான்கு தரித்திரங்களை விலக்கி வாழ்வில் வசந்தம் ஏற்பட வழிகாட்டும் ‘மூத்த தேவி’ எனப்படும் மூதேவியைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

வாழ்க்கையில் ஒருவர் செய்யும் தீய மற்றும் நல்ல குணங்களை எடுத்துக் காட்டி, அவற்றின் பலாபலன்களை உலகத்தில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மஹாவிஷ்ணு மூதேவியை படைத்தாராம்.

மகாலட்சுமியின் மூத்த சகோதரிதான் மூதேவி. முதலில் பிறந்ததால் இவள் ‘மூத்தோள்’ என அழைக்கப்படுகிறாள். ஒரு சமயம் ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் ‘தங்களில் யார் அழகு?’ என்பதில் சண்டை வர, இருவரும் நாரதரிடம் சென்று முறையிட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
வித்தியாசமான தோற்றத்தில் வேலவன் அருட்கோலத் திருத்தலங்கள்!
Moodevi

நாரதருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், ‘மகாலட்சுமிதான் அழகு’ என்று கூறினால் மூத்த தேவிக்கு கோபம் வந்து தனது வீட்டிலேயே வந்து தங்கி விடுவாளோ அல்லது மூத்த தேவிதான் அழகு என்று கூறினால் மகாலட்சுமி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விடுவாளோ என்று யோசித்து, இரு சகோதரிகளையும் முன்னும் பின்னும் நடந்து காட்டச் சொன்னார்.

இருவரும்  நடக்க, உடனே நாரதர் ‘ஸ்ரீதேவி வரும்போது அழகாக இருக்கிறார். மூத்த தேவி போகும்போது அழகாக இருக்கிறார்’ என்று அவருக்கே உரிய நடையில் பதில் கூறினார். அதனால்தான் மூதேவி வீட்டை விட்டு வெளியேறுவதே நன்மை என்று பலரும் இதற்குத் தவறான அர்த்தம் புரிந்து கொண்டுள்ளார்கள்.

ஆனால், உண்மையிலேயே ஸ்ரீதேவியை போலவே மூதேவியும் அனைவராலும் போற்றப்பட வேண்டியவர்தான். ஏனெனில், நம்முடைய கஷ்டங்களையும் இன்னல்களையும் நம்மிடம் இருந்து வெளியே விரட்டி அடிப்பது மூதேவிதான். இவருக்கு, ‘ஜேஷ்டா தேவி’ என்ற பெயரும் உண்டு.

ஜேஷ்டா தேவியை மனதார பிரார்த்தனை செய்து வழிபட்டாலே மனக் குழப்பம் நீங்கி, நிம்மதி கிடைப்பதோடு, ஆழ்ந்த தூக்கம் பெற்று, வறுமை நீங்கி செல்வம் நம் வீட்டிலே தங்கி விடுமாம். அதேபோல, நெற்கதிர்கள் ஸ்ரீதேவி என்றும் நெற்கதிர்கள் விளைவதற்கு கருப்பு நிறத்தில் உரமாக இருக்கக் கூடியதை மூதேவி என்றும் அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். அதாவது அழுக்கு படிந்த கருப்பான உரத்தை மூதேவிக்கு இணையாக சொன்னதால், மூதேவி அழுக்கு படிந்த சுத்தம் இல்லாத ஒரு தெய்வம் என்று மக்களின் மனதில் பதிந்துவிட்டதாம். ஆனால், மூதேவி விளைச்சலுக்கு அதிபதியாவார். விவசாயத்தின் காவல் தெய்வமும்கூட. இதனால், மூதேவிக்கென்றே சில கோயில்களும் உண்டு.

இதையும் படியுங்கள்:
திருமணத் தடை, பயத்தைப் போக்கும் பஞ்சமுக கஜ சம்ஹார மூர்த்தி!
Moodevi

குறிப்பாக, பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் ஜேஷ்டா தேவி வழிபாடு தமிழகத்தில் இருந்திருக்கிறது. சோழர் காலத்துக்கு பிறகு, ஜேஷ்டா தேவி வழிபாடு மெல்ல குறைந்தாலும், தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ அரசர்களும் இந்த மூத்த தேவிக்கு முன்னுரிமை கொடுத்து வழிபாடு செய்து வந்தது சில கல்வெட்டு குறிப்புகளில் காணப்படுகிறது!

இன்றும் தமிழகத்தில் உள்ள காஞ்சி கயிலாசநாதர் கோயிலில் ஜேஷ்டா தேவிக்கென்று தனிச் சன்னதி இருப்பதோடு, திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் மூத்தோளுக்கு சிற்பங்கள் வைத்து வணங்கப்படுகின்றன. தவ்வை தேவி என்று அழைக்கப்படும் ஜேஷ்டா தேவிக்கு திருப்பரங்குன்றத்தில் குடைவரை கோயில் ஒன்றும் உள்ளது. சப்த மாதா வழிபாட்டிலும் ஜேஷ்டா தேவிக்கு முக்கிய இடமிருப்பதாக கூறுகிறார்கள்.

இனிமேல் வீட்டில் யாரையும் அபசகுனமாகத் திட்ட வேண்டும் என்பதற்காக ‘மூதேவி’ என்று சொல்வதற்கு முன் ஒரு நிமிடம் யோசனை செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com