
பெரம்பலூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது செட்டிகுளம். இங்குள்ள மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில். இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான் வேலுக்கு பதிலாக கையில் செங்கரும்பை ஏந்தியபடி காட்சி தருகிறார். இந்த சிறப்பு வேறு எந்த முருகன் கோயிலிலும் இல்லாதது.
திருச்சி மாவட்டம், லால்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில், திருமங்கலத்தில் உள்ளது சாமவேதீஸ்வரர் கோயில். இக்கோயில் கருவறை சுற்றுப் பிராகாரத்தில் ஒரு சிறிய சன்னிதியில் முருகப்பெருமான் கல்யாண சுப்ரமணியன் என்ற பெயரில் நின்ற கோலத்தில் தெய்வானையுடன் அருள்பாலிக்க, வள்ளி மட்டும் தனியாக மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். இது வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாதது.
பொதுவாக, கோயில்களில் முருகப்பெருமானை 6 கரங்களோடு, 12 கரங்களோடு அருள்பாலிக்க பார்த்திருப்பீர்கள். 11 தலை, 22 கரங்களுடன் கூடிய முருகனை பார்த்து இருக்கிறீர்களா? அப்படிப்பட்ட முருகப்பெருமான் ராமநாதபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் அருள்பாலிக்கிறார். மற்ற கோயிலில் பிரணவ மந்திரத்தின் பொருள் கேட்கும் சிவனின் மடியில் முருகன் உட்கார்ந்து இருப்பது போன்ற சிலைகள் இருக்கும். ஆனால், இங்கு முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்தின் பொருள் சொல்ல, அதை சிவன் நின்று கொண்டு கேட்கும் கோலத்தைக் காணலாம்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள வெம்பக்கோட்டை அருகில் உள்ள துலுக்கன்குறிச்சி எனும் ஊரில் முருகப்பெருமான், ‘வாழைமர முருகன்’ என்ற வித்தியாசமான பெயரில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள வாழைமர பாலசுப்ரமணியர் ஆலயத்தில் முருகப்பெருமான் வாழை மரத்துடன் அருள்பாலிக்கிறார். 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான இந்தக் கோயிலின் தல விருட்சமும் வாழைமரம்தான்.
சென்னை - புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கத்தில் இருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ள செய்யூரில் உள்ளது கந்தசுவாமி கோயில். 27 பூத வேதாள கணங்கள் வணங்கும் கோயில் இது. மற்ற ஆலயங்களில் முருகப்பெருமானுடன் சேர்ந்தே காட்சி தரும் வள்ளி, தெய்வானை இங்கே தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்கள்.
சேலம் - கள்ளக்குறிச்சி சாலையில் 54 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுக்கோட்டை. இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது வட சென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயில். இங்கே முருகப்பெருமான் குழந்தை வடிவில் மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்திலும். உத்ஸவர் வள்ளி, தெய்வானையுடன் கிரகத்தில் குடும்ப நிலையிலும், தண்டாயுதபாணி துறவற கோலத்திலும் காட்சி தருகின்றனர். ஒரே முருகன் தலத்தில் மூன்று கோலங்களிலும் முருகப்பெருமான் காட்சி தரும் அபூர்வத்தை இங்கு தரிசிக்கலாம்.
நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடி என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்குள்ள முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மேல் அமர்ந்து காட்சி தருகிறார். இம்மூவரும் அமர்ந்திருக்கும் மயிலுக்கு தரையிலிருந்து ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே என்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. பெரும்பாலான கோயில்களில் முருகன் அமர்ந்திருக்கும் மயிலானது வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால், எட்டுக்குடியில் மட்டும் மயில் இடது பக்கம் திரும்பியிருப்பது விநோதம்.
சேலம், உடையார்பட்டிக்கு அருகில் உள்ளது கந்தாஸ்ரமம். இங்கு முருகப்பெருமானுக்கு தண்டாயுதபாணி தோற்றம். எதிரில் அம்பிகை 18 கரங்களுடன் கருணையே வடிவாக முருகனைப் பார்த்தவண்ணம் காட்சி தருகிறார். இவர் சக்தி வடிவம், கந்தன் ஞான வடிவம். எனவே, விசேஷ நாட்களில் முருகனுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்கிறார்கள். வலப்புறம் ஆணாகவும், இடப்புறம் பெண்ணாகவும் முருகனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே அமைந்துள்ளது செஞ்சேரிமலை மந்திரகிரி ஸ்ரீ வேலாயுதசாமி திருக்கோயில். இந்தக் கோயில் மூலவராக வேலாயுத சுவாமியும், உத்ஸவராக முத்துக்குமாரரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் 12 கைகளுடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து வடக்கே 5 கி.மீ. தொலைவில் பைம்பொழில் என்ற இயற்கை எழில் சூழ்ந்து, பசுமை படர்ந்துள்ள இடத்தில் சிறிய மலை மீது அமைந்திருக்கிறது அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில். பொதுவாக, சிவன் கோயிலில்தான் சப்த கன்னியர்கள் இருப்பது வழக்கம். ஆனால், இங்கு சப்த கன்னியர்களுக்கும் சன்னிதி இருப்பது சிறப்பு.