

நாம் பணத்தை சம்பாதிக்க பல வழிகளில் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அப்படி சம்பாதித்து முன்னேறியவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், ஒருசிலர் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அவர்கள் பணக் கஷ்டத்தை அனுபவிப்பவர்களாக இருப்பார்கள். அதையும் மீறி பண வரவு ஏற்பட்டாலும் அந்த செலவு நல்ல செலவுகளுக்காக இல்லாமல், வீண் விரயமாக செலவாகிக் கொண்டு இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு பண வசியம் என்பது இல்லாமல் இருப்பதுதான் காரணம். பண வசியத்தை ஏற்படுத்த இன்று வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறையில் கீழ்காணும் பரிகாரத்தை செய்தால் அவர்களால் சிறந்த பலனைப் பெற முடியும்.
மூன்றாம் பிறை என்பது சிவபெருமான் தலையில் இருக்கக்கூடிய சந்திரனை குறிப்பது. இந்த மூன்றாம் பிறை நாளில் சிவ தரிசனம் செய்வதும், சந்திர தரிசனம் செய்வதும் பல மடங்கு பலனை வாரி வழங்கும் என்று நம்பப்படுகிறது.
யார் ஒருவர் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மூன்றாம் பிறையை தரிசிக்கிறார்களோ, அவர்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று எந்தவித குறையும் இல்லாமல் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமையான இன்று மூன்றாம் பிறை தரிசனம் மிகவும் விசேஷமானது. அம்மனுக்கு மட்டுமல்லாமல், வெள்ளிக்கிழமை சுக்ரனுக்கும் உகந்த கிழமையாகையால் இந்த நாளில் செய்யக்கூடிய வழிபாட்டு பரிகாரம் பண வசியத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்தப் பரிகாரத்தை மாலை 6 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்குத் தேவையானது இரண்டு ரூபாய் நாணயமும், கல் உப்பும்தான். இந்தப் பரிகாரத்தை செய்யக்கூடியவர்கள் குளித்து விட்டு செய்ய வேண்டும். அசைவம் தவிர்த்தல் நல்லது.
ஒரு விரிப்பை விரித்து மேற்கு திசை பார்த்தவாறு உட்கார்ந்து கொண்டு, ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பு வைத்துக் கொள்ளவும். இரண்டு ரூபாய் நாணயத்தையும் கையில் வைத்துக் கொண்டு சந்திர பகவானிடம், ‘நிலவு வளர்ந்து முழுமதி ஆவது போல் என்னுடைய வாழ்க்கையிலும் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்றுச் சிறப்பான வாழ்வு வாழ வேண்டும்’ என்று முழு மனதோடு வேண்டிக்கொள்ள வேண்டும். பிறகு ‘ஓம் தத் பூர்ணாய நமஹ’ எனும் மந்திரத்தை 15 நிமிடம் கூற வேண்டும்.
கல்லுப்பு கிண்ணத்தை பூஜை அறையிலும் வைக்கலாம். சமயலறையிலும் வைக்கலாம். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறு நாள் சனிக்கிழமை காலையில் இந்த இரண்டு ரூபாய் நாணயத்தை ஒரு பேப்பரில் மடித்து பணம் வைக்கும் இடத்தில் பத்திரமாக வையுங்கள். கல் உப்பை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றிவிட வேண்டும். மூன்றாம் பிறையும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்த இந்நாளில் நாம் முழு நம்பிக்கையோடு செய்யும் இந்த பண வசியப் பரிகாரம் நல்ல பலனைத் தரக்கூடியதாகக் கருதப்படுகிறது.