நாக தோஷம் நீக்கும் திருநாங்கூர் 11 கருட சேவை!

Thirunangur 11 Garuda Seva
Thirunangur 11 Garuda Seva
Published on

யிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அடுத்துள்ளது மணிமாட கோயில் என்று அழைக்கப்படும் திருநாங்கூர் நாராயண பெருமாள் திருக்கோயில். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறுவது வழக்கம். 11 கருட சேவை என்பது 11 ஆலயங்களில் இருந்து வரும் கருட வாகனங்களை குறிப்பதாகும். திருநாங்கூரில் மட்டும் ஆறு திவ்ய தேசங்கள் இருக்கின்றன.

இவை தவிர, அந்த ஊரைச் சுற்றிலும் சுமார் நான்கு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் மேலும் ஐந்து திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. திருநாங்கூருக்கு உள்ளேயே திருக்காவளம்பாடி கோபாலன் கோயில் திரு அரிமேய விண்ணகரம், குடமாடு கூத்தர் ஆலயம், திரு வெண்புருடோத்தம பெருமாள் கோயில், திருச்செம்பொன் செய்கோயில் செம்பொன் ரங்கர் ஆலயம், திருமணிமாடக் கோயில் நாராயண பெருமாள் ஆலயம், திருவைகுந்த விண்ணகரம் வைகுண்டநாதர் கோயில் ஆகியவையும், திருநாங்கூருக்கு வெளியே திருதேவனார் தொகை மாதவப் பெருமாள் கோயில், திருத்தெற்றியம் பள்ளிகொண்ட பெருமாள் கோயில், திருமணிக்கூடம் வரதராஜ பெருமாள் ஆலயம், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில், திருப்பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

மகாவிஷ்ணு தனது பெயரான ஸ்ரீமன் நாராயணன் என்பதையே அஷ்டோத்திர மந்திரமாக மாற்றி அதை உபதேசம் செய்தார். அதாவது தானே குருவாக இருந்து தனது நாமத்தையே மந்திரமாக்கி தன்னையே சீடனாகவும் கொண்டு தனக்கே உபதேசம் செய்துகொண்ட அற்புதமான நிகழ்வு நடந்த தலம் திருநாங்கூர். அதன் மூலம் உலகின் அனைத்து ஜீவராசிகளிலும் தான் நிறைந்து இருப்பதை நாராயணன் உலகுக்கு எடுத்துக்காட்டினார்.

இதையும் படியுங்கள்:
அரக்கி மகிஷி வதத்துக்குப் பிறகு சுவாமி ஐயப்பன் நீராடிய பஸ்ம குளம்!
Thirunangur 11 Garuda Seva

முற்காலத்தில் பிரம்மனுக்கும் ஈசனைப் போலவே ஐந்து தலைகள் இருந்தன. அதனால் சிவனுக்கு இணையாக தன்னையும் கருதி ஆணவம் கொண்டார் பிரம்மன். அதனால் அவரது ஐந்து தலைகளில் ஒன்றை கொய்தார் சிவபெருமான். இதனால் ஈசனுக்கு பிரம்மஹஸ்தி தோஷம் பீடித்தது. அந்த தோஷம் நீங்குவதற்காக திருக்கோகர்ணம் என்ற தலத்தில் திருமாலை நோக்கி தவம் இருந்தார்.

அதைத் தொடர்ந்து சிவபெருமானுக்கு முன்பு தோன்றிய திருமால், பலாச வனத்தில் உள்ள திருநாங்கூர் சென்று பதினொரு ருத்ர தோற்றம் கொண்டு அஸ்வமேத யாகம் செய்யும்படி கூறினார். அதன்படியே இந்தத் தலம் வந்த சிவபெருமான் பதினொரு ருத்ர தோற்றம் கொண்டு யாகம் செய்தார். அந்த யாகம் நிறைவேறும் நேரத்தில் நாராயணர் பிரணவ விமானத்தில் தோன்றி, சிவபெருமானின் தோஷத்தை போக்கினார் என்பது ஐதீகம். அதுவும் பதினொரு ருத்ர தோற்றத்திற்கும் பதினொரு பெருமாள்களாகத் தோன்றி திருக்காட்சி அளித்தார்.

அப்படிப் பெருமாள் கொண்ட பதினொரு கோலங்களே திருநாங்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதினொரு திவ்ய தேசங்களாக அமைந்திருப்பதாக தல வரலாறு கூறுகிறது. ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் பதினொரு கருட சேவையின்போது பதினொரு திவ்ய தேசங்களில் உள்ள பெருமாள்களும் திருநாங்கூர் மணிமாட நாராயண பெருமாள் கோயிலில் ஒன்று கூடுவார்கள். அப்போது அந்த பெருமாள்களுக்கு மங்களாசாசனம் செய்யப்படும். இதற்காக ஆண்டுதோறும் இந்த விழாவில் பங்கேற்க திருமங்கை ஆழ்வார் வருவதாக ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
மருந்து மாத்திரையுடன் சாப்பிடக் கூடாத 6 உணவுகள்!
Thirunangur 11 Garuda Seva

இந்த கருட சேவைக்கு முதல் நாள் நள்ளிரவில் காற்றினால் நெற்பயிர்கள் சலசலக்கும் சத்தம் கேட்பதாகவும் அப்போது திருமங்கை ஆழ்வார் வயல்வெளியில் பிரவேசித்து விட்டதாகவும் பக்தர்கள் கூத்தாடுவார்கள். திருமங்கையாழ்வாரின் கால் பட்ட வயல்வெளியில் அதிகமான நெல் விளையும் என்பதும் இந்த பகுதியில் நிலவும் நம்பிக்கையாக உள்ளது. திருநாங்கூர் மணிமாட கோயிலில் தை அமாவாசைக்கு மறுநாள் பதினொரு மணி முதல் மாலை ஆறு மணிக்குள் ஒவ்வொரு பெருமாளாக தங்க கருட வாகனத்தில் வந்து சேருவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெறும்.

அதன் பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீதி உலா வருவார்கள். மீண்டும் தங்களின் கருட வாகனத்தில் ஏறி தம் இருப்பிடத்திற்குப் புறப்பட்டுச் செல்வார்கள். இந்த கருட சேவை நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நாக தோஷத்தால் ஏற்படும் எந்தக் கெடுதலும் வராது. மேலும், இந்த 11 கருட சேவை பார்ப்பதால் மறுபிறவி கிடையாது என்பதும் ஐதீகம்.

சீர்காழியிலிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருநாங்கூர் திருத்தலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com