

மார்கழி மாத பகுள பஞ்சமியன்று முக்தியடைந்த ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழா இன்று ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை திருவையாறில் நடைபெற இருக்கிறது. பகுள பஞ்சமி தினமாகிய ஜனவரி 7ம் தேதியன்று நாட்டின் பல பகுதிகளிலிருந்து வரும் கர்நாடக இசைக்கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியும் இசைக்கருவிகளில் இசைத்தும் ஸ்ரீ தியாக பிரம்மத்திற்கு அஞ்சலி செலுத்துவர்.
ஸ்ரீ தியாகராஜர் 1767ம் ஆண்டு திருவாரூரில் ராமபிரம்மம் - சீதம்மா தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். சிறு வயதிலேயே சமஸ்கிருத மொழி பயின்று அதில் தேர்ச்சி பெற்றார். பின்பு சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்றார். சங்கீதத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றவுடன் இவர் கீர்த்தனங்கள் இயற்றத் தொடங்கினார். அபார ராம பக்தி கொண்ட தியாகராஜர் ராமபிரான் மேல் எண்ணற்ற கீர்த்தனங்கள் இயற்றியிருக்கிறார். இவருடைய கீர்த்தனங்கள் பாவத்துடன் கேட்பவர் உள்ளத்தை உருக்கும் விதமாக அமைந்திருக்கும். எல்லாமே பக்தி ரசம் நிறைந்த கீர்த்தனங்கள்.
ஒரு சமயம் மகான் ஒருவர் இவரை ராம நாமத்தை 96 கோடி முறை ஜபிக்கும்படி கூறினார். அதன்படியே இவர் 21 ஆண்டுகளில் 96 கோடி ராம நாமம் ஜபித்து முடித்தார். இதனால் இவர் வாழ்க்கையில் பல முறைகள் இவருக்கு ஸ்ரீ ராமரின் தரிசனம் கிடைத்தது. எண்ணற்ற கீர்த்தனங்களை இயற்றிய இவர், பிரகலாத பக்தி விஜயம், நவுகா சரித்திரம் முதலிய இசை நாடகங்களையும் இயற்றியுள்ளார். நாரத பஞ்சரத்னம், ஸ்ரீரங்க பஞ்சரத்னம், லால்குடி பஞ்சரத்னம், திருவொற்றியூர் பஞ்சரத்னம், கோவூர் பஞ்சரத்னம் ஆகிய கிருதிகளையும் இவர் இயற்றியுள்ளார்.
1847ம் வருடம் ஜனவரி 6ம் தேதி ஸித்தியடைந்த ஸ்ரீ தியாகராஜருக்கு திருவையாறில் ஒரு சமாதி அமைக்கப்பட்டது. அந்த சமாதியருகே முதன் முதலில் பெங்களூர் நாகரத்தினம்மா என்னும் கர்நாடக இசைப் பாடகி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்காக ஒரு கோயில் கட்டி 1940ல் தியாகராஜ ஆராதனையை தொடங்கி வைத்தார். 1949ம் ஆண்டு முதல் பஞ்சரத்ன கிருதிகளை கோரஸாகப் பாடி ஸ்ரீ தியாகராஜரை ஆராதிக்கும் வழக்கம் வந்தது. இந்த ஆராதனை விழா தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற இசை விழாவாக விளங்குகிறது. தெலுங்கு, கன்னட மாநிலங்களில் மார்கழி மாதத்தை 'புஷ்ய' என்று அழைக்கிறார்கள். ஆதலால், இது 'புஷ்ய பகுள பஞ்சமி ஆராதனை விழா' என்றும் அழைக்கப்படுகிறது.
காலை எட்டு மணியளவில் முதலில் நாதஸ்வர வித்வான்களின் சேர்ந்திசையையடுத்து, 'சேதுலாரா' என்னும் பைரவி ராகக் கீர்த்தனத்தை புல்லாங்குழல் வித்வான்கள் சேர்ந்து இசைப்பார்கள். அப்பொழுது ஸ்ரீ தியாகராஜர் விக்கிரகத்திற்கு அபிஷேகம் ஆரம்பிக்கப்படும். தொடர்ந்து எதிரெதிர் வரிசைகளில் அமர்ந்திருக்கும் ஆண்கள், பெண்கள் என்று அனைத்து சங்கீத வித்வான்களும் சேர்ந்து 'பஞ்ச ரத்ன' கீர்த்தனங்கள் என்று ஸ்ரீ தியாகய்யர் இயற்றிய ஐந்து பாடல்களை கோரஸாகப் பாடுவார்கள்.
இவை, 'ஜெகதாநந்தகா' என்னும் நாட்டை ராகப் பாடல், 'துடுகு கல' என்னும் கௌள ராகப் பாடல், 'சாதிஞ்சனே' என்னும் ஆரபி ராகப் பாடல், 'கனகன ருசிரா' என்னும் வராளி ராகத்தில் அமைந்த பாடல் கடைசியாக 'எந்தரோ மஹானுபாவுலு' என்னும் ஸ்ரீராகப் பாடலாக உள்ளது. இந்த வரிசையில் பஞ்சரத்ன கீர்த்தனங்கள் பாடப்படுவது ஒரு பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வு நேரலையாக பல வருடங்களாக அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருவதால் ஆராதனை விழாவுக்குப் போக முடியாத சங்கீத ரசிகர்களும் வீட்டிலிருந்தபடியே பஞ்சரத்ன கீர்த்தனங்களை கூடவே பாடி
ஸ்ரீ தியாகராஜர் என்னும் ஒப்பற்ற மகானுக்கு இசை அஞ்சலி செலுத்தலாம்.
இந்த வருடம் ஸ்ரீ தியாகராஜர் ஸித்தியடைந்த பகுள பஞ்சமி திதி 07.01.2026 (புதன் கிழமை) அன்று வருகிறது. ஸ்ரீ தியாகப்ரம்ம மஹோத்ஸவ குழுவால் கொண்டாடப்படும் இந்த விழா இன்று 03.01.2026 அன்று ஆரம்பித்து 07.01.26 அன்று ஆராதனை விழாவோடு நிறைவடைகிறது.