Para Thathuva Perumal
Srirangam Perumal

திருவரங்க ரகசியம்: பர தத்துவம் குறித்து பட்டர் நடத்திய பாடம்!

Published on

‘பூலோக வைகுண்டம்’ என்று போற்றப்படும் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) க்ஷேத்ரத்தில், கூரத்தாழ்வானின் புதல்வராக அவதரித்தவர் பராசர பட்டர். இவர் வைணவப் பரம்பரையில் சிறந்த ஆச்சார்யனாக விளங்கினார். அவருக்கு பல சிஷ்யர்கள் இருந்தனர். அவர்களுக்கு நித்தமும் தனது இல்லத்தில் பாடங்கள் சொல்லித் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் பராசர பட்டர்.

அவர் பாடங்கள் கற்றுத்தரும் சமயத்தில், நித்தமும் வீதியில் மிக்க தேர்ந்த வித்வான் என்று கருதப்படும் ஒருவர், வழக்கமாகப் போவது உண்டு. அவர் வருகிறார் என்றால் தெருவே அமர்க்களப்படும். ஆனால், பராசர பட்டர் மட்டும் அவரை ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டார். அவர் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு உஞ்சவிருத்தி அந்தணர், ஒரு பித்தளை சொம்பினை எடுத்துக்கொண்டு உஞ்சவிருத்தி பிக்ஷைக்காக பாடிக் கொண்டு வருவார். அனைவர் இல்லங்களிலும் அவருக்கு பிக்ஷை இடுவார்கள். அப்படி அவர் பராசர பட்டர் இல்லத்தருகில் வரும்பொழுது, பட்டர் அவரைக் கூப்பிட்டு நலம் விசாரித்து, பிக்ஷை அளித்து அனுப்பும் வழக்கத்தினைக் கொண்டிருந்தார்.

இதையும் படியுங்கள்:
அசுரர்களை நடுங்கச் செய்த நவராத்திரி போர்: மகிஷாசுரமர்தினி தோற்ற வரலாறு!
Para Thathuva Perumal

‘மிக்க தேர்ந்த அறிஞர் ஒருவர் வீதியில் போகும்போது அவரைக் கண்டுகொள்ளாமல் அமர்ந்திருக்கும் தனது ஆசான், இந்த ஏழை உஞ்சவிருத்தி அந்தணர் வரும்பொழுது மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறாரே என்ன காரணம்’ என்கிற சந்தேகம் பட்டரின் சிஷ்யர்களுக்குள் இருந்து வந்தது. சிஷ்யர்கள் தங்களின் சந்தேகத்தை பட்டரிடமே கேட்டார்கள். அதற்கு பட்டர், "உங்கள் சந்தேகத்திற்கு உண்டான பதிலை, நாளை தெளிவாகக் காட்டுகிறேன்" என்றார்.

அடுத்த நாள் சிஷ்யர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தபொழுது, தெருவில் அந்த வித்வான் வருவது தெரிந்தது. உடனே பட்டர் எழுந்து சென்று அந்த வித்வானை தன்னுடைய இல்லத்திற்கு வரும்படி அழைத்தார். வித்துவான் வந்தவுடன் அவருக்கு இருக்கை தந்து குசலம் விசாரித்த பின்பு, தனக்கு ஒரு சந்தேகம் இருப்பதாக பட்டர் அவரிடம் கூறினார். அதற்கு அந்த வித்வான், "என்ன சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள், பதில் கூறுகிறேன்" என்றார். அப்பொழுது பட்டர், ‘பர தத்துவம் என்பதன் அர்த்தம் என்ன?’ என்று கேட்டார்.

வித்வான் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார். "உங்களுக்கு அர்த்தம் தெரியாதா? எனக்கும் இதே இடத்தில்தான் அந்த சந்தேகம் வருகிறது. பர தத்துவம் என்றால் என்ன என்று யாரிடம் போய்க் கேட்பது? எனக்கு எதுவுமே புரியவில்லை. என் சந்தேகம்தான் உங்களுக்கும் இருக்கிறதா? சரியாய்ப் போச்சு” என்று கூறிவிட்டு, கிளம்பி விட்டார்.

இதையும் படியுங்கள்:
குபேரனுக்கு நிதி தந்து அருள்பாலித்த ஈசன்! நீங்களும் செல்வந்தர் ஆக வேண்டுமா?
Para Thathuva Perumal

அவர் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் வழக்கமாக வரும் உஞ்சவிருத்தி அந்தணர் வந்தார். அவர் வருவதை அறிந்த பட்டர், வாசலுக்கு ஓடிப்போய் எப்பொழுதும் போல் பிக்ஷை அளிப்பதை அளித்துவிட்டு, தனது இல்லத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். அந்தணரும் அழைப்பை ஏற்று பட்டரின் இல்லத்திற்குள் வந்தார். அவரை அமரச் செய்து, தனக்கு ஒரு சந்தேகம் இருப்பதாக அவரிடமும் கூறினார்.

‘தானோ ஒரு அரைகுறை. தனக்கு எதுவும் தெரியாதே. மெத்தப் படித்த இந்த பட்டர் தன்னிடம் என்ன கேட்டுவிடுவாரோ’ என்கிற பயத்தில் அந்த அந்தணர், ‘கேளுங்கள், தெரிந்தால் சொல்கிறேன்’ என்கிற பாவனையில் லேசாக தலையை ஆட்டினார்.

"பர தத்துவம் என்றால் என்ன அர்த்தம்?" என்று முதலில் வித்வானிடம் கேட்ட அதே கேள்வியை அந்தணரிடமும் பட்டர் கேட்டார். உடனே உஞ்சவிருத்தி அந்தணருக்குக் கோபம் வந்துவிட்டது. "நாசமாய்ப்போச்சு. என்னது? இதற்குக் கூடவா அர்த்தம் தெரியாமல் இத்தனை நாட்கள் இத்தனை மாணாக்கர்களை வைத்துக் கொண்டு பாடம் நடத்தி வருகிறீர்கள்? உங்களை நான் மெத்தப் படித்தவர், மேதாவி என்றல்லவா நினைத்திருந்தேன். இதற்குக் கூட அர்த்தம் தெரியாமல் இருக்கும் ஒரு ஆச்சார்யன் இல்லத்தில் நான் காலடி எடுத்து வைத்ததையே மிகவும் பாவமாகக் கருதுகிறேன். இதோ பள்ளிகொண்டிருக்கிறானே திருவரங்கன் அவன்தான் எல்லோருக்கும் பரமாத்மா. அவன்தான் பர தத்துவம்" என்று கூறிவிட்டு சடக்கென்று எழுந்து விட்டார்.

இதையும் படியுங்கள்:
மகிஷாசுரமர்த்தினி: விசித்திர கோலத்தில் காட்சி தரும் தமிழகத்தின் துர்கையம்மன் அருட்கோலங்கள்!
Para Thathuva Perumal

அவரை ஆசுவாசப்படுத்தி அமரச் செய்த பட்டர், அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார். தனது சிஷ்யர்களையும் நமஸ்காரம் செய்யச் சொன்னார்.

அவர் சென்ற பிறகு, பட்டர் தனது சிஷ்யர்களிடம், "எத்தனை சாஸ்திரங்கள் படித்து இருந்தாலும், பகவானை உணரவில்லை என்றால் படித்ததற்கு அர்த்தமே இல்லை. அத்தனையும் வீண். ஆனால், எதுவுமே படிக்காவிட்டாலும் கூட பகவானை உணர்ந்தால் எல்லாம் படித்தவர்களுக்கு ஈடாவார்கள் என்று உபநிஷத்து கூறுகிறது. இப்பொழுது புரிகிறதா?” என்று கேட்டார்.

அந்தர்யாமியாக இருந்துகொண்டு, எப்பொழுதும் நம்மை ரட்சிக்கும் ரட்சகன் எம்பெருமான் ஒருவன்தான். அந்த ரட்சகனே பர தத்துவம் என்பதை உஞ்சவிருத்தி அந்தணர் அழகாக உணர்த்தினார்.

logo
Kalki Online
kalkionline.com