வாதநோய் தீர்க்கும் வாதவூர்: திருமறைநாதரின் மகிமை!

thiruvatavoor-temple
thiruvatavoor-temple
Updated on

ரம்புகளுக்கு இரத்த ஓட்டம் நின்று போனால் தசைகள் இயங்காமல் போய்விடும். அதனால் வாதநோய் ஏற்படுகிறது. இத்தகைய வாதநோய்களுக்கு தீர்வளிக்கும் இடமாக விளங்கும் தலங்களில் ஒன்றுதான் திருவாதவூர் திருத்தலம். மாணிக்கவாசகர் அவதரித்த தலம் இது. வாதவூர் என்றதும் வாதநோய் போக்கும் தலம் மட்டும் அல்ல. வாதம் செய்து வேதத்தின் உட்பொருளை அறிந்த ஊர் என்று கொள்ளவேண்டும். இத்தல ஈசன் வேதநாயகன் என்றும் திருமறை நாதர் என்றும் அழைக்கப் படுகிறார்.

சனிபகவானுக்கு ஒருமுறை முனிவர் ஒருவரால் முடக்கு வாதம் ஏற்பட்டது. இத்தல திருமறை நாதனை வழிபட்டதால் நோய் தீர்ந்தது. இங்கு சனிபகவான் தனிச் சன்னதியில் ஒரு காலை மடக்கியும், ஒரு காலை தொங்க விட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார். கை கால்களை அசைக்க முடியாதவர்கள் நடக்க முடியாதவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட வேண்டும்.

மேலும் மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அந்த எண்ணையை வீட்டிற்கு எடுத்துச் சென்று கை கால்களில் 48நாட்கள் தொடர்ந்து தேய்க்க வாதநோய் குணமாவதாக தெரிகிறது. வாதநோய் குணமான பிறகு இந்த ஆலயத்திற்கு வந்து அன்னதானம் செய்து வழிபடும் பக்தர்கள் ஏராளம்.

மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர். அவர் சிவன் மீதுள்ள பக்தியால் மன்னன் கொடுத்த பொற்காசுகளை ஆவுடையார் கோவில் பணிக்காக செலவிட்டார். இவருக்கு திருவாதவூரில் தனிக்கோவில் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றுவருகின்றன. அவரை தரிசித்துவிட்டு சிறிது தூரம் சென்றால் 5 நிலை ராஜகோபுரம் கொண்ட சிவாலயம் உள்ளது. இதுதான் திருமறை நாதர் வீற்றிருக்கும் தலம். திருமாலுக்கு ஈஸன் மறையின் பொருளை உபதேசித்ததால் திருமறை நாதர் என பெயர் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:
தமிழகக் கோயில்களின் அறியப்படாத அதிசயங்கள்: ஒரு ஆன்மீகப் பயணம்!
thiruvatavoor-temple

பசுவின் குளம்பு பதிந்த சுயம்புத் திருமேனியுடன் விளங்கும் எம்பெருமானை திருமால், சனீஸ்வரன் பிரம்மன், அக்னி பகவான், வாயு தேவன் வழிபட்டு நற்பேறு பெற்றார்கள். ஆரவல்லி அம்பிகை கிழக்கு பார்த்து அருளுகிறார். இவர் பிரம்மனின் வேள்வித் தீயில் தோன்றியதாக தலபுராணம் கூறுகிறது. தாமரைத் தடாகத்தில் உள்ள ஒரு மலருக்கு பசுவொன்று பால் சொரிந்து அபிஷேகம் செய்து வந்தது இதைப் பார்த்த திருமால் அங்கே சிவலிங்கம் இருப்பதைக்கண்டு அதற்கு பூஜை செய்தார். இதன் வாயிலாக பிருகு முனிவரின் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றார்.

இந்த தலத்தின் விருட்சம் மகிழ மரம். இக்கோவிலில் நடக்கும் ஆவணி மூலத் திருவிழா சிறப்புக்குரியது. இந்த விழா நரியை மாணிக்கவாசகருக்காக இறைவன் பரியாக மாற்றியதை நினைவுபடுத்துகிறது. மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 9கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com