

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள திருவதிகையில் அமைந்துள்ள சரநாராயணப் பெருமாள் கோவிலில் உள்ள பள்ளிகொண்ட (சயன) நரசிம்மர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இது ஒரு சிறந்த பிரார்த்தனைத் தலமாகும்.
மூலவர் - சரநாராயணப் பெருமாள் தாயார் - ஹேமாம்புஜவல்லித் தாயார், செங்கமலத் தாயார்
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - கருட தீர்த்தம்
விமானம் - நளினக விமானம்
சயன நரசிம்மர் வீற்றிருக்கும் திருவதிகை தலத்தின் தனிச்சிறப்பு:
இங்குள்ள மூலவர் சரநாராயணப் பெருமாள் சாளக்கிராமத்தால் ஆனவர். அத்துடன் பொதுவாக நரசிம்மர் அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் உள்ள நரசிம்மர் சயன கோலத்தில் தாயாருடன் காட்சி தருவது இத்தலத்தினுடைய சிறப்பாகும்.
இங்குள்ள சரநராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். நிகமாந்த மகாதேசிகரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது. வில்லிபுத்தூரார் எழுதிய மகாபாரதத்தில் அர்ஜுனன் குருசேத்திரப் போர் முடிந்து, பிராயச்சித்தத்திற்காக இங்கு வந்து வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இக்கோவில் பல்லவ அரசர்களால் நிர்மாணிக்கப்பட்டது.
தல பெருமை:
திருமாலின் திவ்ய திருத்தலங்களில் இக்கோவிலில்தான் சயன நரசிம்மர் தெற்கு நோக்கி சயனித்த கோலத்தில் காட்சி தருகிறார். தாயாரும் உடன் எழுந்தருளி இருப்பதால் இது 'போக சயனம்' ஆகும். திருவக்கரையில் வக்ராசுரனை அழித்துவிட்டு, இத்தலத்தில் வந்து ஓய்வெடுக்கும் கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்துள்ளதாக கூறப்படுகிறது. ஈசனைப் போலவே இங்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சயன நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பானக நைவேத்தியம் செய்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
பொதுவாக கருடன் எல்லா கோவில்களிலும் கை கூப்பி நிற்க, இங்கு மட்டும் கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் காணப்படுகிறார். சுமார் 2000 வருடங்கள் பழமையான சரநாராயணப் பெருமாள் கோவில், சிங்கர்குடி, பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய நேர்கோட்டில் உள்ள நரசிம்மர் தலங்களை வணங்கும்போது இத்தலத்திற்கு வந்து இவரையும் வணங்குவது சிறப்பாகும்.
தல வரலாறு:
திரிபுரத்தை எரிக்க சிவனுக்கு விஷ்ணு அம்பாக(சரமாக) இருந்து போருக்கு உதவியதால் விஷ்ணு இத்தலத்தில் 'சரநாராயணப்பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திரிபுரம் எரிக்கும் திருவிழா நாளில், கருட வாகனத்தில் பெருமாள் சரத்துடன் (அம்பு) எழுந்தருளி சரம் தொடுக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாயார் ஹேமாம்புஜவல்லியுடன் இத்தலத்தில் கல்யாண கோலத்தில் சரணநாராயணப் பெருமாளாக காட்சி தருகிறார்.
திருவிழாக்கள்:
சித்திரையில் விசேஷ திருமஞ்சனம், வைகாசியில் வசந்த உற்சவம், ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஊஞ்சல் சேவை, ஆவணியில் ஸ்ரீஜெயந்தி உற்சவம், புரட்டாசியில் பெருமாள் புறப்பாடு, ஐப்பசியில் தீபாவளி உற்சவம், கார்த்திகையில் திருக்கார்த்திகை உற்சவம், மார்கழியில் தனுர்மாத பூஜை, தை மாதத்தில் உள் புறப்பாடு, பங்குனியில் உத்திர திருமஞ்சனம் என மாதந்தோறும் விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
நேர்த்திக்கடன்:
அமாவாசை வழிபாடு இக்கோவிலினுடைய தனிச்சிறப்பாகும். வேண்டுதல்கள் நிறைவேற பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். இது ஒரு பிரார்த்தனை ஸ்தலமாகும். இவரை வழிபட எதிரிகள் தொல்லை, மன சஞ்சலம் மற்றும் மன அழுத்தத்தை போக்கும் என்று நம்பப்படுகிறது.
கோவில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கோவில் எங்குள்ளது?
பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் திருவதிகை அமைந்துள்ளது.
இந்தத் தல வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்வதன் மூலம், உங்களின் நீண்ட நாள் மனக் கவலைகள், எதிரிகள் தொல்லை மற்றும் மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு, வாழ்வில் அமைதியையும் நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறுவதற்கான தெளிவான ஆன்மீக வழிகாட்டுதலைப் பெறுவீர்கள்.