

அனைத்து சிவாலயங்களிலும் திருவாதிரை விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு கடவுளும் அவதரித்த நாளில் அந்தந்த கடவுளுக்கு ஜயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். பிறப்பில்லாத ஆதி கடவுளான சிவனின் ஜன்ம நட்சத்திரம் என்று தனியாக இல்லாத குறையைப் போக்கவே, ‘திருவாதிரை நட்சத்திரமாக நான் இருப்பேன்’ என்று சிவன் சொன்னதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, ‘நட்சத்திரங்களில் நான் திருவாதிரை’ என்று கூறியிருப்பதில் இருந்தே, அந்த நட்சத்திரத்திற்கான சிறப்பை அறியலாம். ‘ஆதிரை’ என்பது அக்னியை போன்ற ஒளியை வெளிப்படுத்தும் ஒரு நட்சத்திரமாகும். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும்தான் ‘திரு’ என்னும் அடைமொழி வழங்கப்பட்டுள்ளது. திருவாதிரையை வடமொழியில் ‘ஆருத்ரா’ என்று கூறுவார்கள்.
சிவபெருமான் ஆதியும், அந்தமும் இல்லாதவர் என்றாலும், இந்த ஆதிரை நட்சத்திரத்தின் ஒளிப்பிழம்பு தன்மையை சிவபெருமானின் அம்சமாகக் கருதி இத்தினத்தை திருவாதிரையாகக் கொண்டாடுகின்றனர். சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர். இந்த தினத்தில் சிவபெருமானை தரிசிப்பது ‘ஆருத்திரா தரிசனம்’ என்றழைக்கப்படுகிறது. சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சிதம்பரம் மற்றும் திருவாரூரில் நடராஜப் பெருமானை மற்றும் தியாகராஜர் பெருமானை தரிசக்க தேவர்கள் ஒன்று கூடுவதாக ஐதீகம் உண்டு. மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆடியது ஆனந்தத் தாண்டவ நடனம். இந்த ஆனந்தத் தாண்டவ தரிசனத்தைக் காண்பது பெரும் பேறாகும். மார்கழி திருவாதிரை தினத்தில்தான் பதஞ்சலி முனிவருக்கும், ஆதிசேஷனுக்கும் தனது திருநடன தரிசனத்தைக் காட்டினார் தில்லை நடராஜ பெருமான். திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழி திருவாதிரை அமைகின்றது.
தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து பெரும் வேள்வி ஒன்றை நடத்தினர். அதாவது, அவர்களின் கோட்பாட்டின்படி, கர்மத்தை மட்டும் செய்தால் போதுமானது. கடவுள் என்பவர் கிடையாது என்பதுதான். அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டி கயிலைநாதன், பிட்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனி பத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினர். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித் தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர்.
சிவனார் மத யானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவற்றைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்ரா தரிசன நாள் ஆகும். ‘திருவாதிரைக்கு ஒருவாய் களி’ என்றொரு புகழ் பெற்ற வாசகம் உண்டு. களி என்பது ஆனந்தம் என்றும் பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித், ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும்.
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த பட்டினத்தாரிடம் கணக்குபிள்ளையாக வேலை பார்த்து வந்தவர் சேந்தனார். பட்டினத்தார் துறவறம் மேற்கொண்ட உடன், அவரிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் சூறை விட்டார். இதைக் கேள்விப்பட்ட சோழ மன்னர், சேந்தனாரை சிறையிலடைத்தார். அதையறிந்த பட்டினத்தார் சேந்தனாரை சிறையிலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் வேண்டினார். உடனே சிறைக் கதவுகள் திறந்து சேந்தனார் விடுதலை பெற்றார். சிறையிலிருந்து வெளியில் வந்த சேந்தனார், சிதம்பரத்திற்கு வந்து அங்கு விறகு வெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தானும் சாப்பிடுவார்.
ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின. அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே, அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால், சோதனையாக யாரும் அன்று வரவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி, நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டுக்கு வந்தார்.உடனே மகிழ்ச்சியடைந்த சேந்தனார் சமைத்த களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் சாப்பிட்டதோடு மிச்சமிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தபோது நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள் இருந்தன. உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டுபிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்கு வந்திருந்தார்.
சிவனை தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழை காரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனம் வருந்தினார். அப்போது அசரீரியாக ‘சேந்தா நீ பல்லாண்டு பாடு’ என்று கேட்டது. சேந்தனார் இறைவன் அருளால் ‘மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல’ என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே’ என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. இதைப்பார்த்த அரசனும் அமைச்சர்களும் சேந்தனாரின் கால்களில் விழுந்து வணங்கினர். அரசர் தாம் கண்ட கனவை சேந்தனாருக்குத் தெரிவித்தார். அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்று அறியப்படுகிறது.
திருவாதிரை தினத்தில் அரிசி மாவு, வெல்லம் மற்றும் பருப்புகளை கொண்டு செய்யப்படும் திருவாதிரை களியை சுவாமிக்கு படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.