
தமிழ் நாட்டில் மிக முக்கியமான முருகன் கோவில்களில் திருவிடைக்கழி முருகன் கோவிலும் ஒன்று. திருமுறைகளில் இடம் பெற்றுள்ள முருகப்பெருமான் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. முருகனுக்கு மிக முக்கியமான அறுபடை வீடுகளைத் தவிர, அவர் காலடி பட்ட தலங்கள் தமிழ்நாட்டில் இரண்டு மட்டுமே. ஒன்று முருகப்பெருமான் வள்ளியை மணம் புரிந்த வள்ளிமலை. மற்றொன்று, தான் பாப விமோசனம் பெறுவதற்காக, முருகன் தவம் இயற்றிய இந்த திருவிடைக்கழி என்பது மிகவும் சிறப்புக்குரிய விஷயமாகும்.
சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கடையூருக்கு தென்மேற்காக திருவிடைக்கழி அமைந்துள்ளது. திருக்கடையூரிலிருந்து 6 கி.மீ. மயிலாடுதுறையிலிருந்து 21 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு ஒரு புராண வரலாறு உள்ளது.
திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் முடிந்த பின்பு, சூரபத்மனின் இரண்டாவது மகன் இரண்யாசுரன் தன் உருவை மாயையால் சுறா மீனாக மாற்றிக் கொண்டு, பூம்புகார் பகுதியிலுள்ள கீழச்சமுத்திரத்தில் பதுங்கி, அங்கிருந்த அனைத்து உயிர்களையும் துன்புறுத்தி வந்தான்.
முருகப்பெருமான் அவனையும் வைகாசி மாதம் சதயம் நட்சத்திரத்தன்று வதம் செய்தார். இரண்யாசுரன் அசுரனாக இருந்தாலும் சிறந்த சிவபக்தன் என்பதால் முருகனுக்கு இந்த சம்ஹாரத்தால் பாவம் ஏற்பட்டது. அதை நீக்கிக் கொள்ள அன்னை பராசக்தியின் ஆலோசனைப்படி முருகப்பெருமான் திருவிடைக்கழியிலுள்ள குரா மரத்தின் அடியில் உட்கார்ந்து சிவபெருமானை நோக்கி தவமிருந்து பாவம் நீங்கப் பெற்றார்.
முருகப்பெருமானும், லிங்க வடிவ சிவபெருமானும் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அற்புதமான திருத்தலம் திருவிடைக்கழி. சோழ நாட்டு திருச்செந்தூர் என்று போற்றப்படும் தலம் இது. அருணகிரிநாதர் தன் திருப்புகழ் பாடல்களாலும் சேந்தனார் தன் திருவிசைப்பா பாடல்களாலும் துதித்துப் போற்றிய திருத்தலம் இது. அன்று முருகன் பூஜித்த சிவலிங்கம் இன்றும் ஸ்படிகலிங்கமாக முருகப்பெருமான் முன்னே காட்சியளிக்கிறது. முருகப்பெருமான் ஒரு கையில் வில்லுடனும் மறுகையில் வேலுடனும் காட்சி தரும் இடம் திருவிடைக்கழி. இங்கே முருகப் பெருமானின் வாகனம் மயிலுக்கு பதிலாக யானை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கே மற்றொமொரு சிறப்பு தேவி தெய்வானைக்கு தனி சந்நிதி என்பதேயாகும். அவர் இங்கே முருகனை மணம் புரிய வேண்டி தவக்கோலத்தில் அமர்ந்திருக்கிறார். இந்த தலத்தில் தான் தெய்வானைக்கு நிச்சியதார்த்தம் நடந்தது. இதை வெளிப்படுத்தும் விதத்தில் தெய்வானையின் முகம் வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல உள்ள காட்சி உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.
முதல் படை வீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், சிவனருளால் முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி நீங்கியதாலும் இத்தலம் 'விடைகழி' எனப்படுகிறது. குரா மரம் முருகனுக்கு, மகிழ மரம் ஈசனுக்கு என்று இந்த தலத்தில் இரண்டு தல விருட்சங்கள் உள்ளன. இக்கோயில் முசுகுந்த சக்ரவர்த்தியால் கட்டப்பட்டதாக தலபுராணம் கூறியபோதிலும் கோவில் கட்டப்பட்ட காலத்தை சரியாக கணிக்க முடிவில்லை.
இங்குள்ள குரா மரத்தடியில் தான் ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டு தன் தோஷங்கள் நீங்கப்பெற்றார் என்பதால் இது ராகு தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும் என்றும் கூறுகிறார்கள். மொத்தத்தில் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் புனிதத் தலமாக திருவிடைக்கழி முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கே தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை என்று அனைத்து உற்சவங்களும் பெரிய அளவில் சிறப்பாக நடைபெறுகிறது.
தில்லையில் ஸ்ரீ நடராஜருக்கு திருவாதிரைத் திருநாளில் களி நிவேதனம் செய்தவரும், திருப்பல்லாண்டு பாடி திருத்தேரினை தில்லை திருவீதிகளில் ஓட வைத்தவருமான சேந்தனார் பெருமான் இத்தலத்தில் குரா மரத்தின் அடியில் முக்தி பெற்றது ஒரு தைப்பூசத் திருநாளன்று தான். அன்றைய தினம் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.