

மாதந்தோறும் திருவோண நட்சத்திரம் வரும் நாளில் மகாவிஷ்ணுவை நினைத்து மேற்கொள்ளப்படும் நோன்பு திருவோண விரதமாகும். அதிலும் குறிப்பாக ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் கேரளாவில் ஓணம் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணு வாமனராக அவதரித்தது திருவோண நட்சத்திர நாளில்தான். மேலும் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ஹயக்கிரீவர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. திருவோண விரதத்தை ஒருமுறை வாழ்வில் இருந்தால் கூட அத்தனை பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நியதி.
தசாவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்றாகும். இந்த அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் நிகழ்ந்ததால் தான் ஆவணி திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கேரளாவில் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம்தேதி திருவோண நட்சத்திரம் வருகிறது. ஆகஸ்ட் 26-ம்தேதி புதன்கிழமை அதிகாலை 12.25 மணி முதல் மறுநாள் ஆகஸ்ட் 27-ம்தேதி அதிகாலை 2.16 மணி வரை திருவோண நட்சத்திரம் உள்ளது. இதன் அடிப்படையில் கேரளாவில் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26-ம்தேதி (புதன்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தில் விரதம் இருந்து பெருமாளை மனதார வழிபடுவதால் வறுமை நீங்கி குடும்பத்தில் அமைதி மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும், திருமணத் தடைகள் நீங்கும் மற்றும் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் சந்திரனின் ஆதிக்கம் உள்ள இத்தினத்தில் விரதம் இருப்பது மன அமைதியைத் தரும்.
மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தை முன்கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதத்தை தொடங்க வேண்டும் என்பது தான் இந்த விரதத்தின் முக்கியமாக விசேஷமாகும். அன்று இரவில் பெருமாளுக்கு உகந்த மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும்.
திருவோண நாளன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து சுத்தமாக நீராடி சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
பின்னர் பூஜை அறையில் பெருமாள் அல்லது கிருஷ்ணர் படத்திற்கு துளசி, தாமரை மற்றும் மலர்களைச் சாற்ற வேண்டும். பால், தேன் போன்றவைகளால் அபிஷேகம் செய்து, நைவேத்தியம் படைத்து விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது மந்திரங்களைச் சொல்லி விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து அந்த தீர்த்தத்தை நீங்கள் பருகலாம்.
திருவோண நட்சத்திரம் அன்று நாள் முழுவதும் உணவு உட்கொள்ளாமல் அல்லது எளிய உணவை உண்டு விரதம் இருக்கலாம். அதாவது அன்றைய தினம் அதிகாலையில் நீராடி, துளசி தீர்த்தம் மட்டும் உட்கொண்டு, நாள் முழுவதும் பெருமாள் நாமங்களைச் சொல்லி, உபவாசம் அல்லது உப்பு சேர்க்காத உணவை உட்கொண்டு, கோவிலுக்குச் சென்று இந்த விரதத்தை எளிமையாகக் கடைபிடிக்கலாம்.
அன்றைய தினம் முழுமையாக உணவு உட்கொள்ளாமல் (உபவாசம்) இருக்க முடியாதவர்கள் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். இயலாதவர்கள் பகலில் ஒருவேளை மட்டும் உப்பு நீக்கிய (உப்பில்லாத) உணவை உட்கொள்ளலாம்.
பின்னர் வீட்டின் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்வது மிகவும் நல்லது. மாலையில் விளக்கேற்றிப் பெருமாளைத் தொழுதுவிட்டு, இரவு சந்திர பகவானை தரிசனம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்யலாம்.
ஒரு வருடம் (12 மாதங்கள்) தொடர்ந்து இந்த விரதத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். கடன் தொல்லைகள் நீங்கும் மற்றும் செல்வச் செழிப்பு உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி, குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ஐதீகம். தாமதமான திருமணம் விரைவில் கைகூடும்.
குறிப்பாக சந்திர தோஷம் உள்ளவர்கள் இவ்விரதம் இருந்தால் நன்மைகள் பெறுவர். தோஷங்களில் பல வகை உள்ளன. அவற்றில் சந்திர தோஷம் முக்கியமான ஒன்றாகும்.
ஜாதகத்தில் சந்திர தோஷம் இருந்தால், அவர்கள் திருவோண நட்சத்திரத்தன்று திருவோண விரதம் இருந்தால் சந்திர தோஷம் விலகுவதுடன், சந்தோஷமான வாழ்வு அமையும் என்பது ஐதீகம். அனைத்து மாதங்களிலும் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வேண்டி விரதம் இருக்கலாம்.