நாம் அனைவரும் சிறு வயதில் இருந்து பல திகில் கதைகளைக் கேட்டிருப்போம். பேய்கள், மந்திரவாதிகள் அல்லது தீய சக்திகள் பற்றி பல விஷயங்களை மற்றவர் சொல்லக் கேட்டு பயந்திருப்போம். அந்த வகையில் இந்தியாவில் மிகவும் மர்மமான மற்றும் சக்தி வாய்ந்த கோயிலாகக் கருதப்படும் கோயில் எது என்று உங்களுக்குத் தெரியுமா? இதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ராஜஸ்தானில் உள்ள இந்தக் கோயில் இந்தியாவில் மிகவும் பயமுறுத்தும் கோயிலாக அறியப்படுகிறது. மெஹந்திபூர் பாலாஜி கோயில் இந்தியாவின் பெரும்பாலான கோயில்களைப் போலல்லாமல் மிகவும் மர்மமான கோயிலாகக் கருதப்படுகிறது. இந்த இடம் மனம் பலவீனமானவர்களுக்கு ஏற்றதல்ல என்று கூறப்படுகிறது. சிலர் இந்தக் கோயில் மக்களை ஈர்க்கும் ஒரு காந்த ஈர்ப்பு என்றும் கூறுகின்றனர். இந்த பழங்கால கோயில், அதன் தனித்துவமான சடங்குகளுக்கு மட்டுமல்ல, பக்தர்களை ஈர்க்கும் சக்திக்காகவும் அறியப்படுகிறது.
இந்தக் கோயில் ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தீய சக்திகள், சூனியம் மற்றும் விவரிக்க முடியாத நோய்களால் அவதிப்படுபவர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்றால் அவற்றிலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது. பக்தர்கள் பலரும் தங்கள் நோய்களில் இருந்து குணமடையவே மெஹந்திபூர் பாலாஜி கோயிலைத் தேடி வருகிறார்கள்.
இந்தக் கோயில் தெய்வீக சக்தியைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயிலுக்குச் சென்றால் வாழ்க்கையின் அனைத்துப் பிரச்னைகள், நோய்கள். சிக்கல்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மெஹந்திபூர் பாலாஜி கோயில் பேய் விரட்டுதலுக்கு பெயர் பெற்றது. இந்தக் கோயிலில் பக்தர்களுக்கு ‘ஜாதுய் சிகிச்சை’ அல்லது ‘தெய்வீக சிகிச்சை’ வழங்கப்படுகிறது. இது தீய ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. பகவான் மகாவிஷ்ணு, ஹனுமன் மூலம் தீய சக்திகளிடமிருந்து தனது பக்தர்களை தனிப்பட்ட முறையில் பாதுகாக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்தக் கோயிலுக்குச் சென்ற பின்னர், விவரிக்க முடியாத பல மாற்றங்களை அனுபவித்ததாக பக்தர்கள் பலர் கூறுகின்றனர்.
மெஹந்திபூர் பாலாஜி கோயிலுக்கு வருபவர்கள் கடுமையான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். இந்தக் கோயிலுக்கு செல்வதற்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது.
மற்ற கோயில்களைப் போலல்லாமல், பக்தர்கள் பிரசாதத்தை சாப்பிடவோ, வீட்டிற்கு எடுத்துச் செல்லவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கு பதிலாக, அவர்கள் அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்து செல்ல வேண்டும். இது கோயிலின் பழக்க வழக்கங்களில் ஆழமாக வேரூன்றிய ஒரு சடங்காகும்.
அர்ஜி, சவாமணி மற்றும் தர்காஸ்ட் போன்ற சடங்குகள் மூலம் தீய சக்திகள் அல்லது பேய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தக் கோயில் பிரபலமானது. இந்த சடங்குகளுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள பைரவ் பாபாவின் சிலையை வழிபட்டு விட்டு தங்கள் வேண்டுதலை நிறைவு செய்கின்றனர்.