
இந்தியாவில் சிறந்து விளங்கும் ஆயிரத்தெட்டு சிவத்தலங்களில் பெருமை வாய்ந்தது திருவிரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில். இக்கோயிலில் மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். பிரம்மன் ஈசனை நோக்கி தவம் செய்ததால் ‘பிரம்மபுரம்’ எனவும் பிரம்மனின் இன்னொரு பெயர் விரிஞ்சன் என்பதால் ‘விரிஞ்சைபுரம்’ எனவும் அதுவே மருவி விரிஞ்சிபுரம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் அருளும் சுயம்பு மகாலிங்க மூர்த்தியின் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் பங்குனி மாதத்தில் விழுவதால் இந்தத் தலம், ‘பாஸ்கர க்ஷேத்திரம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
தனபாலன் என்ற வணிக பக்தனுக்கு வழிகாட்டியதால், ‘வழித்துணைநாதர்’ எனவும் அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் ஈசனின் முடி காண இயலாத பிரம்மன் சிவபெருமான் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவை எடுத்து வந்து ஈசனின் முடியைக் கண்டதாக பொய் கூறியதால் சாபம் பெற்றார்.
பின்னர் சாப விமோசனத்திற்காக சிவனை வேண்டும்போது, திருவிரிஞ்சையில் வாழும் குலவந்திரி மகரிஷி, நந்தினிக்கு மகனாகப் பிறந்து சிவ தொண்டனாக சிவசர்மனாக வளர்ந்து பூஜை செய்தால் சாப விமோசனம் பெறுவாய் என்று சொன்னதால், அதன்படியே மகனாகப் பிறந்து சிவசர்மனாக ஈசனை நோக்கி தினமும் பூஜித்ததால் அந்த பூஜையை ஏற்றுக்கொண்ட ஈசன் திருமுடி சாய்த்து சிவசர்மனுக்குக் காட்சி அளித்தது இந்தத் தலத்தில்தான்.
பிரம்மா, காயத்ரி தேவியுடன் ஈசனை வேண்டி செய்த யாகத்தின் பலனாக க்ஷீர நதியில் பால் பெருகிற்றாம். அதனால் பாலாறு என்ற பெயர் உண்டாயிற்று. இந்த பாலாற்றின் அருகில்தான் இந்தத் தலம் உள்ளது.
இந்தத் தலத்தின் நுழைவாயிலில் ஹேரம்ப விநாயகரும் தண்டபாணி சுவாமி சன்னிதிகளும் உள்ளன. வடமேற்கே மரகதாம்பிகை சன்னிதி உள்ளது. அம்பாள் கருவறை பாதாள அறையுடன் கூடியது. பிராகாரத்தைக் கடந்து மகாமண்டபத்தை தாண்டினால் கருவறையினுள் சுயம்புலிங்க மூர்த்தி வாசம் செய்கிறார். இந்தத் தலத்தின் தல விருட்சம் பனைமரம். மேலும், வெளிப்பிராகாரத்தில், ‘வசந்த நீராட்டக் கட்டம்’ எனும் காலம் காட்டும் கல் உள்ளது.
இந்தக் கல் நடுவில் ஒரு குச்சியை வைத்தால் அதில் குறிக்கப்பட்டிருக்கும் ஒன்று முதல் பன்னிரண்டு வரையிலான எண்களில் நேரத்தினை காட்ட அப்போதைய குச்சியின் நிழல் படுகிறது. இது மிகவும் துல்லியமானதாக உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடிகாரம் கண்டுபிடிக்கும் வாய்ப்பு இல்லாத காலத்திலேயே இந்தக் காலம் காட்டும் கல் அமைக்கப்பட்டுள்ளது.
உயர்ந்து நிற்கும் ஏழு நிலைகள் கொண்ட நூற்றிபத்து அடி ராஜகோபுரம் அதைச் சுற்றி மதில் அழகுக்கு இலக்கணமாக விளங்கும் மதில் சுவர்கள் கொண்டதாக இந்த கோயிலின் அமைப்பு இருக்கிறது. கம்பீரமான கோயில் சுவர் வேறு எந்த கோயிலிலும் காணப்படாத அழகாகும். கீழ் கோபுர வாயில், மேல் கோபுர வாயில், திருமஞ்சன வாயில் என்று முறையே கிழக்கு, மேற்கு, வடக்கு புறங்களில் வாயில்கள் இருந்தாலும் தென்புறம் மட்டும் வாயில் இல்லாமல் மதில் மேல் கோபுரம் மட்டும் உள்ளது.
நாள்தோறும் இரவில் தேவர்கள் பூஜை செய்வதால் அது தேவர்களின் வழியென ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். கோயிலின் உள்ளே இருந்து வெளி மதில் வரையில் ஐந்து பிராகாரங்கள் இருக்கின்றன. மக்கள் தங்களின் தீராத கஷ்டங்களைத் தீர்த்து வைப்பார் மார்க்கபந்தீஸ்வரர் என்று மக்கள் மனதார நம்புகின்றனர்.