திருப்பதி ஏழுமலையானும் மண்பானை தயிர் சாதமும்: புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டு ரகசியம்!

வறுமையிலும் வாடாத பக்தியும்... மண்பானை நைவேத்தியத்தின் பின்னுள்ள ஆரோக்கிய நன்மைகளும்!
தயிர் சாதம் - Tirupati Balaji History
தயிர் சாதம் - Tirupati Balaji History
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

புரட்டாசி மாதம் என்றாலே எங்கும் கோவிந்தனின் புகழ் பாடல்தான். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சளாடை உடுத்தி, நாமம் தரித்துக்கொண்டு பெருமாளை மனதில் நினைத்து வழிபடுவார்கள். திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொள்பவர்களும் உண்டு.

புரட்டாசி மாதத்தில்தான் திருவேங்கடமுடையானுக்கு பிரம்மோற்சவம் நடைபெறும். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் கூற, திருப்பதி பாலாஜிப் பெருமாளோ தனக்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதத்தைக் கொண்டுள்ளார். அதிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை மிகவும் உகந்த நாளாக போற்றப்படுகிறது. அன்று பெருமாளுக்கு தளிகைப் படையல் செய்வது வழக்கம். அந்தப் படையலில் ஐந்து வகை சாதங்களுடன் மண் சட்டியில் தயிர் சாதமும் வைத்து படைக்கும் பழக்கம் உள்ளது. மண்சட்டில் தயிர் சாதம் வைக்கும் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா?

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மண்பானையில் தயிர் சாதம் நைவேத்தியம் செய்யும் வழக்கம், திருமலையில் வாழ்ந்த பீமய்யா (பீமன்) என்ற ஏழைக் குயவர் மற்றும் தொண்டைமான் சக்கரவர்த்தியின் வரலாற்றுடன் தொடர்புடையது.

இதையும் படியுங்கள்:
கோவில் பிரசாதங்களின் தனித்துவ சுவைக்கும் மணத்திற்கும் இதுதான் காரணமா?
தயிர் சாதம் - Tirupati Balaji History

புரட்டாசி மாதத் தளிகையில் முக்கியத்துவம் பெறும் மண்பானை தயிர் சாதம் தலைமுறை தலைமுறையாக வீடுகளில் செய்து வரும் பழக்கமாக இருந்தாலும், பலருக்கும் குறிப்பாக இந்த தலைமுறையினருக்கு இதை ஏன் செய்கிறோம் என்பது பற்றிய விவரம் தெரிவதில்லை. அதைப் பற்றி தெரிந்துகொள்வோமா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலைக் கட்டிய தொண்டைமான் சக்கரவர்த்தி, தினமும் பெருமாளுக்கு தங்கப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தார். அதே சமயம் திருமலையின் அடிவாரத்தில் குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற ஏழைக் குயவர் (மண்பாண்டம் செய்பவர்) வாழ்ந்து வந்தார். அவர் தீவிர பெருமாள் பக்தர் என்றாலும், வறுமையின் காரணமாக அவரிடம் தங்கப் பூக்களோ அல்லது ஆடம்பரமான பூஜைப் பொருட்களோ இல்லை.

இதனால் அவர்தான் மண்பண்டம் செய்யப் பயன்படுத்தும் களிமண்ணையே சிறுசிறு பூக்களாக செய்து, பெருமாளின் நாமத்தைக் கூறி மனம் உருகி வழிபட்டு வந்தார். மேலும் தன்னிடம் இருந்த எளிய உணவான மண்பானை தயிர் சாதத்தை பெருமாளுக்கு அன்போடு படைத்து வந்தார்.

தங்கப் பூக்களை மாற்றிய களிமண் பூக்கள்:

ஒருநாள் தொண்டைமான் சக்கரவர்த்தி வழக்கம்போல் பெருமாளுக்கு தங்கப் பூக்களால் அர்ச்சனை செய்துவிட்டுச் சென்றார். மறுநாள் காலை அவர் வந்து பார்த்த பொழுது, தான் அர்ச்சனை செய்த தங்கப் பூக்கள் எல்லாம் விலகி, அதற்கு பதிலாக களிமண்ணால் ஆன பூக்கள் பெருமாளின் திருவடிகளில் இருப்பதைக் கண்டார். மன்னனுக்கு ஒரே ஆச்சரியம் மற்றும் வருத்தம் உண்டானது. நம் பூஜையில் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டதா? என்று கண் கலங்கினார்.

அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய ஏழுமலையான், "மன்னனே வருந்தாதே! இங்கே களிமண் பூக்களால் என்னை பூஜக்கும் பீமய்யா என்ற பக்தன் இருக்கின்றான். அவனது தூய்மையான பக்திக்கு நான் மகிழ்ந்து, அவன் சமர்ப்பித்த களிமண் பூக்களையும், மண்பானை தயிர் சாதத்தையும் ஏற்றுக்கொண்டேன்" என்று கூறி அருளினார்.

தயிர் சாதம் - Tirupati Balaji History
தயிர் சாதம் - Tirupati Balaji HistoryImage credit: Gemini

மண்பானை நைவேத்திய மரபு:

மன்னன் தொண்டைமான் உடனடியாக பீமய்யாவைத் தேடிச்சென்று அவனது உன்னதமான பக்தியைக் கண்டு வியந்து பாராட்டினார். அந்த பக்தரை கௌரவிக்கும் வகையில் இன்றளவும் திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் மண்பானையில்தான் தயிர் சாதம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

பீமய்யாவுக்கு பெருமாள் காட்சியளித்து அருள்புரிந்த நாள் ஒரு புரட்டாசி சனிக்கிழமை விடியற்காலை ஆகும். இதன் காரணமாகவே புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் பக்தர்களின் வீடுகளில் மண் பானையில் தயிர் சாதம் வைத்து வழிபடும் மரபு உருவானது.

ஆன்மீகம் மட்டுமின்றி இதற்குப் பின்னால் ஒரு ஆரோக்கியக் காரணமும் உண்டு. புரட்டாசி மாதம் என்பது வெயிலும் மழையும் கலந்த ஒரு மாறுபட்ட பருவகாலமாகும். இந்த நேரத்தில் மனித உடலில் பித்தம் மற்றும் உஷ்ணம் (சூடு) அதிகரிக்கும். மண்பானையில் வைக்கப்பட்ட தயிர் சாதம் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும், செரிமானத்தையும் தந்து ஆரோக்கியத்தைக் காக்கும் என்பதால் நம் முன்னோர்கள் இதை விரத உணவாக வகுத்தனர்.

இதையும் படியுங்கள்:
பக்தனுக்காக தலைசாய்த்த பெருமாள்! கரூரின் அதிசயம் - தான்தோன்றிமலை திருத்தலம்!
தயிர் சாதம் - Tirupati Balaji History
logo
Kalki Online
kalkionline.com