சிவனும் சக்தியும் ஊடல் கொண்ட கதை: திருவண்ணாமலை திருவூடல் விழாவின் பின்னணி என்ன?

திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் அன்று அண்ணாமலையார் திருவூடல் திருவிழா நடத்தப்படுகிறது.
அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன்
அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன்
Published on

ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது திருவண்ணாமலை. பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்றத்தலமாகவும் சிறப்புபெற்றது இத்திருக்கோவில். இங்குள்ள அண்ணாமலையார் கோவில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோவில் கட்டடக்கலை வரலாற்றில் உள்ளன.

உலக புகழ்பெற்ற திருவண்ணாமலைத் தலத்தின் இறைவன், மலை வடிவிலும், ஜோதி வடிவிலும் காட்சியளிப்பவர். இங்கு சிவன் அண்ணாமலையார் (அருணாசலேஸ்வரர்) என்றும், அம்பிகை உண்ணாமுலை அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

சிறப்பு வாய்ந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் வருவதை போலவே, ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையாரும் கிரிவலம் வந்து அருள்பாலிப்பது வழக்கம். அதாவது அண்ணாமலையார் திருவூடல் வைபவம் என்று இதனை அழைப்பர். அதில், ஒன்று கார்த்திகை தீபத் திருநாளின் மறுநாள், மற்றொன்று தைப் பொங்கல் திருநாளின் மறுநாள்.

அந்த வகையில் ஆண்டுதோறும், திருவண்ணாமலை திருத்தலத்தில் தைப்பொங்கல் திருநாளுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும் அண்ணாமலையார் திருவூடல் வைபவம் வரும் 16-ம்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்:
திருவூடல் பார்ப்பவருக்கு மறுவூடல் இல்லை!
அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன்

குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை நடக்கும் கணவன் மனைவி இடையேயான ஊடலும் கூடலும் தவிர்க்க முடியாதவை. திருவண்ணாமலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அண்ணாமலையாரும் உண்ணாமலை அம்மனும் கூட இத்தகைய ஊடலை நடத்தியிருக்கிறார்கள் என்று இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது. இதனை ‘திருவூடல் விழா’ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறார்கள்.

‘திருவூடல் விழா’ வைபவம் நடத்துவதற்கான அழகான ஒரு புராண வரலாறு கூறப்படுகிறது. அதாவது, சிவபெருமானின் தீவிர பக்தரான பிருங்கி முனிவர், சிவபெருமானை தவிர வேறு யாரையும் வழிபட மாட்டார். ஒரு முறை பிருங்கி முனிவர், சிவனை வழிபடுவதற்கு கயிலாயமலைக்கு சென்ற போது சிவனும், பார்வதியும் சேர்ந்து அமர்ந்து இருந்தனர். சிவனை மட்டுமே வழிபட நினைத்த பிருங்கி முனிவர், உடனே வண்டு உருவம் கொண்டு, சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வழிபட்டுவிட்டு நகர்ந்தார்.

இதனால் கோபம் கொண்ட பார்வதிதேவி, ‘என்னை வழிபடாத உனக்கு, உன் உடலை இயங்கச் செய்யும் என்னுடைய சக்தி மட்டும் எதற்கு? எனவே என் சக்தியை திருப்பி கொடுத்துவிடு’ என்று கேட்டு வாங்க, அதனால் நிற்கக்கூட முடியாமல் கீழே விழப்போன பிருங்கி முனிவரை சிவபெருமான் கைத்தாங்கலாக பிடித்தார்.

இதனால் சிவனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் உண்டாகி, அவர்களுக்குள் ஊடல் ஏற்பட்டு பார்வதிதேவி, சிவபெருமானை பிரிந்து திருவண்ணாமலை ஆலயத்துக்கு வந்து கதவை பூட்டிக் கொண்டார்.

இதையும் படியுங்கள்:
திருவண்ணாமலைக்கு வந்த முதல் சித்தரை புலிகள் காவல் காத்த அதிசயம்!
அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன்

பார்வதிதேவியின் ஊடலை தணிக்க சுந்தரமூர்த்தி நாயன்மாரை சிவபெருமான் தூது அனுப்பியும் வெற்றி கிடைக்கவில்லை. பக்தனுக்காக பார்ப்பதா? இல்லை என்றால் தாலி கட்டிய மனைவிக்காக பார்ப்பதா என்று சிவபெருமான் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தார். இதனால் சிவபெருமான் தன் பக்தனான பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோல் கொடுத்து அருள்பாலித்துவிட்டு, ஆலயத்துக்கு திரும்பி அன்னையின் கோபத்தை தணித்தார் என்பது வரலாறு..

இந்த நிகழ்வை நினைவுகூறும் பொருட்டு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று இந்த நிகழ்ச்சி திருவண்ணாமலை தலத்தில் நடக்கிறது.வரும் 16-ம்தேதி காலை மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சுந்தரர் ஆகிய மூவரும் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். பின்னர் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை குறிக்கும் வகையில் மாடவீதிகளில் (வீதி உலா)மூன்று முறை சுற்றி வரும் நிகழ்வு நடைபெறும்.

அன்று மாலை திருவூடல் தெருவில் சிவனும், பார்வதியும் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அப்போது, சிவபெருமான் மீது அம்பாள் கோபம் கொள்வது போல் காட்சிகள் அமையும். ஊடல் அதிகமானதும் அம்பாள் கோபத்துடன் புறப்பட்டு கோவில் உள்பக்கம் சென்று தனது சன்னிதி கதவுகளை மூடிக்கொள்வார். இதைத்தொடர்ந்து அவரை சமரசம் செய்யும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

ஆனால் உண்ணாமுலையம்மன் சமரசம் ஆகாததால் அண்ணாமலையார் தனியாக புறப்பட்டு குமரன்கோவில் சென்று அமர்ந்து விடுவார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும்.

The eight lingas of the Tiruvannamalai Giriwala Path
The eight lingas of the Tiruvannamalai Giriwala Path

இதன் ஒரு பகுதியாக அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுவார். அண்ணாமலையார் பின்னால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்று கிரிவலத்தை மேற்கொள்வார்கள். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது. ஏனெனில் ஆண்டுக்கு 2 தடவை மட்டுமே அண்ணாமலையார் தன்னை தானே சுற்றிக் கொள்ளும் வகையில் கிரிவலம் வருவது உண்டு. அதில் தை மாதம் நடைபெறும் இந்த கிரிவலமும் ஒன்றாகும்.

கிரிவல பாதையில் அண்ணாமலையாருக்கு சிறப்புகள் செய்யப்படும். அன்று மாலை அண்ணாமலையார் ஆலயம் திரும்பி உண்ணாமுலையம்மனுடன் சமரசம் செய்து கொள்வார். இதனால் அன்னையின் கோபம் தீர்ந்துவிடும். இறுதியில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் ஒருசேர அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். அந்த காட்சியை காண கண் கோடி வேண்டும்.

தன்னையே நம்பி இருக்கும் பக்தனுக்காக சிவபெருமான் எதையும் தியாகம் செய்வார் என்பதை இந்த உலகத்துக்கு உணர்த்தவே இந்த திருவூடல் திருவிழா நடத்தப்படுவதாக ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
பக்தர்கள் மட்டுமல்ல; பகவானும் கிரிவலம் வரும் திருவண்ணாமலை!
அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன்

'திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை” என்பார்கள். திருவூடல் திருவிழாவை ஆரம்பம் முதல் மறுகூடல் வரை பார்ப்பவர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். கணவன்- மனைவி தம்பதியராக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை பலப்படும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com