

சிவன் கோவில்கள் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து தான் அமர்ந்திருக்கும் ஆனால் திருவண்ணாமலை கோவிலில் மட்டுமே பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும்.
இதற்கு ஒரு கதை உள்ளது முகலாயர்கள் காலத்தில் அண்ணாமலையார் கோவிலுக்கு பேராபத்து வந்தது. அதனை அண்ணாமலையாரே தன் பக்தனான வீரேகிய முனிவர் வாயிலாக எதிர்கொண்டார். முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவ பக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்றனர்.
முகலாய அரசன் நாங்கள் வெட்டி சாப்பிடும் காளைகளை நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் எனக் கேட்டான். அதற்கு அந்த ஐவர் இந்த காளை இறைவன் சிவபெருமானின் வாகனம் அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும் பாக்கியம் என்றனர்.
அதற்கு அரசன் உம் சிவன் இந்த அண்ணாமலையார் உண்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் வந்து சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச் சொல் என்று கூறி வெட்டிவிட்டான்.
உடனே பதறிய ஐவரும் அண்ணாமலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாக வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் நமச்சிவாய என ஜெபித்துக் கொண்டு இருக்கிறான் அவனைதேடி இங்கு அழைத்து வாருங்கள் என்றார்.
உடனே வடக்கே அந்த ஆத்ம பக்தனை தேடிச்சென்ற அந்த ஐவரும் நமச்சிவாய என்ற மந்திரத்தை சத்தைக்கேட்டு அவ்விடம் சென்று பார்த்தபோது பதினைந்து வயது பாலகன் ஒருவனை கண்டனர் ஐவரும் இந்த சிறுபாலகனா பக்தன் என ஏளனம் செய்தபோது அருகே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரையும் தாக்கம் முற்பட்டது.
அந்த சிறு பாலகன் நமச்சிவாய மந்திரம் கூறி புலியை வென்று அவர்களை காப்பாற்றினான். ஐவரும் நடந்ததை கூறி அச் சிறுபாலகனை அழைத்துச் சென்றனர். அண்ணாமலையார் கோவிலுக்கு ஐவருடன் வந்தடைந்த அந்த பாலகன் அரசனைக் கண்டு தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாக கூறினான். உடனே அண்ணாமலையார் மூலஸ்தானம் சென்று நமச்சிவாய மந்திரம் கூறி அந்த மாட்டினை இணைத்து உயிர் பெறச் செய்தான்.
அதை நம்ப மறுத்த முகலாய அரசன் நீ ஏதோ சித்து வேலை செய்கிறாய் எனக் கூறி நம்ப மறுத்தான். சரி உனக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்கிறேன். நீ இதில் வென்றால் இந்த கோவிலை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நான் வென்றால் இடித்து விடுவேன் என கூறினான். அதற்கும் சளைக்காத அந்த சிவபாலகன் அண்ணாமலையார் மேல் வைத்த நம்பிக்கையில் போட்டிக்கு சம்மதிக்க அரசன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை அண்ணாமலையருக்கு படையுங்கள் அவருக்கு சக்தி இருந்தால் அந்த மாமிசத்தை பூவாக மாற்றட்டும் எனக் கூறினான்.
அவன் ஆணைப்படி வீரர்கள் மாமிசத்தை படைக்க முற்பட்டனர் அண்ணாமலையார் அருகே மாமிசத்தை வைத்ததும் மாமிசம் பூக்களாக மாறியது அதில் பல ரக பூக்களும் தட்டும் முழுவதும் நிரம்பி வழிந்தது இதனைக் கண்டு ஐவரும் பாலகனும் ஓம் நமச்சிவாய அண்ணாமலைக்கு அரோகரா என போற்றிப் பேரானந்தம் அடைந்தனர்.
இதனையும் நம்பாதஅந்த அரசன் கடைசியாக ஒரு போட்டியை அறிவித்தான். அண்ணாமலையார் கோவில் பெரிய நந்தியை பார்த்து இந்த உயிர் இல்லாத நந்தி சிலைக்கு உயிர் கொடுத்து காலை மாற்றி மடித்து வைத்து உட்கார வைத்துவிட்டால் உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இந்த கோவிலை சிதைக்கும் முயற்சியையும் கொள்ளையடித்த நகைகளையும் அண்ணாமலை யாரிடமே ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்றான்.
உடனே நமச்சிவாயம் மந்திரம் கூறிய அந்த பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் பெரிய நந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர். கருணை கடலான அண்ணாமலையார் உடனே பெரிய நந்திக்கு உயிர் கொடுத்து வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமருமாறு உத்தரவிட்டார். அன்று முதல் அண்ணாமலையார் கோவிலின் பெரிய நந்தி மட்டும் வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார்.
அரசனும் அண்ணாமலையாரை வணங்கி அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான். அன்று அங்கு வந்த பாலகன் இன்று வீரேகிய முனிவர் என அழைக்கப்படுகிறார். அவர் வாழ்ந்த ஊர் சீநந்தல் எனும் கிராமம் அண்ணாமலையார் கோவிலுக்கு வடக்கே இருப்பதாலேயே பெரிய நந்தியின் முகம் வடக்கு பக்கம் லேசாக திரும்பி காணப்படுகிறது. திருவண்ணாமலை கோவிலின் அதிசய பெரிய நந்தியின் வரலாறு இதுதான்.