
திருஅண்ணாமலையார் கோவில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் என்றும் அறியப்படும் தலம், சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இதனால் இம்மலையை எல்லா நாட்களிலும் மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு (பவுர்ணமி) நாளில் வலம் வருதல் சிறப்பானதாக கருதப்படுவதால் தவறால் கடைபிடிக்கின்றனர்.
அண்ணாமலை - ‘அண்ணா’ என்ற சொல்லுக்கு நெருங்க இயலாதது என்று பொருளாகும்.
பிரம்மாவினாலும் திருமாலினாலும் சிவபெருமானின் அடியையும், முடியையும் நெருங்க இயலாததால் இம்மலையை அண்ணாமலை என்று அழைக்கின்றனர். முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது நம்பிக்கையாகும்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆனி மாத பிரம்மோற்சவம், சித்திரை வசந்த உற்சவம், கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி விழா போன்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் சிறப்பு வாய்ந்தவை.
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவத்தையொட்டி நேற்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு மேல் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியின் எதிரில் பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை மாதத்தில் இக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த நாட்களில் திருவண்ணாமலையே விழாக்கோலமாக காட்சியளிக்கும். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வணங்குவார்கள். இந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவ விழா இன்று (1-ந் தேதி) தொடங்கி 10-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், மாலையில் வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெறும். அதுமட்டுமின்றி இன்று (1-ந் தேதி) முதல் வருகிற 9-ந் தேதி வரை இரவில் மண்டகப்படி நிகழ்ச்சி நடக்கிறது. சிறப்பு நிகழ்ச்சியான தீர்த்தவாரி 10-ம்தேதி அய்யங்குளத்திலும், இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படியும், இரவு 11 மணிக்கு மேல் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. அத்துடன் இந்த ஆண்டிற்கான சித்திரை மாத வசந்த உற்சவம் நிறைவு பெறும்.