

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பல சக்திவாய்ந்த ஆன்மீகத் தலங்கள் அமைந்திருந்தாலும், அதில் மிகவும் தனித்துவமானதும் பக்தர்கள் பலராலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுவதும் "இடுக்கு பிள்ளையார் கோவில்" ஆகும். குறுகிய பாதையைக் கடந்து செல்பவர்களுக்கு நன்மைகளும் நோய்களிலிருந்து நிவாரணமும் கிடைக்கும் என்ற ஆன்மீக நம்பிக்கையின் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர். ஆனால், சமீபகாலமாக பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் நலன் கருதி இங்கு சில புதிய நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இக்கோவிலின் சிறப்புகளையும், ஆன்மீகக் பின்னணியையும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளையும் பற்றி இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.
இடுக்கு பிள்ளையார் கோவிலின் அமைப்பு நேர்கோட்டில் இல்லாத மூன்று வாசல்களை கொண்டது. இதன் பக்கவாட்டில் சுவர் உள்ளது. பக்தர்கள் பின்பக்க வாசல் வழியாக நுழைந்து நடுவாசல் வழியாக தவழ்ந்து முன் வாசல் வழியாக வெளிய வருகிறார்கள். இந்த கோவிலில் நுழைந்து வர சற்று சிரமப்பட வேண்டியிருக்கும்.
இடுக்கு பிள்ளையார் கோவிலில் நுழைந்து வெளிவருவதால் கிடைக்கும் நன்மைகள், பில்லி சூனியம் அகலும், உடல் வலி தீரும். பிற நோய்கள் தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் புதிதாக திருமணம் ஆனா தம்பதிகள் இக்கோவிலில் நுழைந்து வர விருப்பப்படுகிறார்கள்.
ஆரம்பத்திலிருந்தே இக்கோவிலில் கர்ப்பிணிப் பெண்கள் நுழைவதற்கு பாரம்பரியமாக அனுமதி இல்லை. ஏனெனில், குறுகிய பாதையில் வயிற்றுப் பகுதி அழுந்தும்போது தாய்க்கும் சேய்க்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இடுக்கு பிள்ளையார் கோவிலில் சற்று உடல் பருமனாக இருப்பவர்களால் நுழைய முடியாது என்று தோன்றினாலும் உள்ளே நுழைந்தால் இளகி வழிவிடும் என்று நம்பப்படுகிறது. கிரிவலம் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் இக்கோவிலில் நுழைந்து செல்கிறார்கள்.
இருப்பினும் சமீபத்தில் இந்த இடுக்கு பிள்ளையார் கோவிலில் ஆந்திராவை சேர்ந்தவர் சென்று வெளிவர முடியாமல் சிக்கி உயிர் இழந்தார்.
இதனால் இக்கோவிலில் மூச்சு பிரச்சனை உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், வயதானவர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. தற்போது இக்கோவில் நுழைவாயிலில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட இடைவெளி உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்க படுகிறார்கள். பௌர்ணமி நாட்கள் தவிர மற்ற நாட்களில் 6 முதல் 8 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
குகை போன்று இருக்கும் இது போன்ற வழிபாட்டு தளங்களில் வயதான பக்தர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது என்று இந்த விபத்து செய்தியை கேள்விப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆன்மீக நம்பிக்கையும், உடல் ரீதியான நன்மைகளும் நிறைந்த இடுக்கு பிள்ளையார் கோவில் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனினும், ஆன்மீகப் பயணத்தின் போது நமது உடல் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிக மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் வழிமுறைகளைப் பின்பற்றி, தகுதியான நபர்கள் இடுக்கு பாதையில் நுழைந்தும், மற்றவர்கள் வெளியிலிருந்தே இறைவனை தரிசித்தும் அருள் பெறலாம். பாதுகாப்பான வழிபாடே இறைவனின் பரிபூரண அருளைத் தரும் என்பதை உணர்ந்து ஆன்மீகப் பயணத்தைத் தொடர்வோம்!
இக்கோவிலின் பின்னணியில் உள்ள ஆன்மீக அறிவியல் மற்றும் நரம்பு மண்டல அழுத்த முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதன் மூலம், பாரம்பரிய நம்பிக்கைகளின் உண்மையான நன்மைகளைப் புரிந்து கொண்டு, தகுந்த கவனத்துடன் ஆன்மீகப் பலன்களைப் பெற இயலும்.