நாளைய தினம்... தவறவிடக்கூடாத கார்த்திகை சஷ்டி வழிபாடு! அடுத்த சஷ்டிக்குள் நினைத்தது நடக்கும்...
வாழ்க்கையில் நமக்கும் என்ன குறை, கஷ்டம் இருந்தாலும் அது தீர வேண்டும் என்றால் முருகப்பெருமானை வழிபட்டாலே போதும் ஓடோடி வந்து அருள் புரிவான் கந்தன். சஷ்டி என்பது முத்துக்குமரனுக்கு உரிய நாள். இந்த நாளில் விரதம் இருந்து முருகப்பெருமான் வழிபாடு செய்வதால் நம் பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் கார்த்திகை மாதம் அற்புதமான மாதம். அதனால் முருக பக்தர்கள் யாரும் நவம்பர் 26-ம்தேதியை (நாளை) மறந்தும் தவற விட்டு விடாதீர்கள். ஏனெனில் நாளை கார்த்திகை மாதம் வருகின்ற மிகவும் சக்தி வாய்ந்த மாத சஷ்டி வருகின்றது. கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டி வாழ்க்கையில் வளர்ச்சியை தரக் கூடியதாகும். இந்த மாதத்தில் கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்கிழமை மட்டுமின்றி எந்த நாளிலும் முருகனை நினைத்து வழிபட்டாலும், கார்த்திகை விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இது மகா கந்த சஷ்டி விரதம் முடிந்து வரும் சஷ்டி மற்றும் தைபூசத்திற்கு இடையில் வரும் மாத சஷ்டி விரதம் என்பதால் இந்த நாளில் இந்த ஒன்றை மட்டும் செய்வதினால் நீங்கள் 48 நாட்கள் விரதம் இருந்த பலனை அடையலாம்.
அனைவராலும் 48 நாட்கள் விரதம் இருக்க முடியாது என்பதால் இந்த நாளன்று (நாளை) விரதம் இருப்பதினால் ஒரு மண்டல காலம் விரதம் இருந்ததற்கு சமமான பலன் கிட்டும். இது போல் நீங்கள் நாளை முருகனுக்கு விரதம் அனுஷ்டித்து எது வேண்டிக்கொண்டாலும் அது அடுத்த சஷ்டிக்குள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
நவம்பர் 25-ம்தேதி இரவு (இன்று) 10.36 மணி அளவில் மாத சஷ்டி திதி ஆரம்பித்து மறுநாள் (நவம்பர் 26-ம்தேதி) இரவு 10.48 மணி அளவில் முடிகிறது. இந்த நேரத்தில் நீங்கள் முருகனை நினைத்து மௌன விரதம் இருந்தால் நீங்கள் நினைத்தவை அனைத்தும் கட்டாயம் அடுத்த சஷ்டிக்குள் நிறைவேறும்.
அதேபோல் கடன் இருப்பவர்கள் இந்த நாளில் கடனில் ஒரு பங்கை மட்டும் செலுத்தினால் விரைவில் கடன் தொல்லையில் இருந்து முழுவதுமாக முடிவுக்கு வரலாம்.
குழந்தை இல்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள் ‘ஓம் சரவண பவ’ என்று 108 முறை எழுதி முருகனுக்கு மாலை செய்து அணிவித்தால் கூடிய சீக்கிரம் உங்களுக்கு நல்ல செய்தி வரும்.
அதேபோல் நாளை தினம் அதிகாலையில் எழுந்து நீராடிய பின்னர் வீட்டின் பூஜையறையில் முருகனின் படத்திற்கு செவ்வரளி பூ போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர் விரதத்தை தொடங்க வேண்டும்.
அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்கலாம். அப்படி உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் சாப்பிட்டும் விரதம் அனுஷ்டிக்கலாம். நாளை தினம் முழுவதும் மனத்தூய்மையுடன் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து கந்தபெருமானை வணங்குங்கள். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமண வரம் கைகூடும். கேட்ட வரங்களைத் தந்திடுவான் கந்தன்.
சொந்த வீடு வாங்கும் விருப்பம் தள்ளிப்போகிறதே என்று கவலைப்படுபவர்கள், முருகப்பெருமானுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்களது வேண்டுதல்கள் நிறைவேறும்.

