இந்த ஆண்டின் ரத சப்தமி நாளை (04-02-2025) அமைந்திருக்கிறது. ஏழு பிறவிப் பாவங்களும் இந்நாளில் நாம் தொலைத்துவிடலாம் என்று சாத்திரங்கள் வழி சொல்கின்றன. தெரிந்து கொள்வோமா..
ரத சப்தமி என்பது தை அமாவாசை முடிந்து வரும் ஏழாம் திதி நாளாகும். அன்று தான் சூரியனின் பிறந்தநாள். காஷ்யப்ப முனிவருக்கும் அதிதி தேவிக்கும் குமாரராய் அவதரித்தார் சூரிய பகவான். அதனால் ரத சப்தமி தினத்தன்று தான் சூரிய ஜெயந்தி.
இதே நாளில் தான் சூரிய தேவர் தன்னுடைய ஏழு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும் ரதத்தினை பூமியின் வட அரைக்கோளத்தின் பக்கமாகத் திருப்புகிறார். வசந்த காலம் அறுவடைக் காலமாக மாறியிருப்பதைக் குறிக்கும் நாளாகும் இந்த ரத சப்தமி நன்னாள். உழவர்கள் இதைப் புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கமும் சில இடங்களில் உண்டு. ரத சப்தமி நாளுக்குப் பிறகு பூமியின் தென்னரைக்கோளப் பகுதியில் வெப்பநிலை அதிகரிக்கத் துவங்கும்.
காம்போஜ பேரரசின் மன்னனான யசோவர்மனின் புத்திரன் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தானாம். அவனைக் குணமாக்க மார்க்கம் தேடி அலைந்த மன்னனுக்கு ஒரு முனிவர், இந்த ரத சப்தமி தினத்தைக் குறிப்பிட்டு அன்றைய தினம் ஏழு எருக்கு இலைகளை அடுக்கி அதன்மேல் அக்ஷதை, துளி பசுஞ்சாணம், சில துளசி இலைகளையும் சேர்த்து உச்சந்தலையில் வைத்துப் புனித நீராடி சூரியனுக்குத் தர்ப்பணம் செய்தால் முற்பிறவிப் பாவங்கள் தொலைந்து புத்திரன் சுகமடைவான் என்று எடுத்துச்சொன்னாராம். அதன்படி அரசன் தன் மகனை நீராட வைத்தானாம். சூரிய தேவருக்குத் தர்பணமும் பூஜைகளும் செய்தானாம். அதன் பலனாக இளவரசன் பூரண குணமடைந்தானாம். ரத சப்தமி தினத்தின் மகிமையை விளக்கும் புராணக் கதை இது.
ஒடிஷாவில் கோணார்க் மற்றும் கஞ்சம் ஆகிய இடங்களில் உள்ள சூரியனார் கோவில்களிலும், குஜராத்தின் மோதேராவில் சாளுக்கிய மன்னன் பீமதேவன் கட்டிய சூரியனார் கோவிலிலும், ஆந்திராவின் அரசவல்லி சூரியன் கோவிலிலும் தமிழகத்தின் பல்வேறு நவக்கிரக தலங்களில் உள்ள சூரியனுக்கான கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
வீட்டில் நாம் எப்படி பூஜிக்கலாம்?
ஆண்கள் மேலே குறிப்பிட்டது போல் எருக்கு இலை ஸ்நானம் செய்யலாம். பெண்கள் ஒரு துண்டு மஞ்சளும் சேர்த்து வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யலாம்.
ஆதித்ய ஹ்ருதயம், சூர்யாஷ்டகம், சூர்ய சஹஸ்ர நாமம் ஆகியவற்றைப் படிக்கலாம். சூர்ய அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிக்கலாம்.
“ஆதித்யாய வித்மஹே மார்த்தண்டாய தீமஹி தன்னோ ஸூர்யঃ பிரச்சோதயாத் ।।,” என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கலாம்.
சூரியனுக்கு உகந்த செந்தாமரை மலர், கோதுமை தானியம், தேங்காய் சாதம் நைவேத்தியம் பண்ணலாம்.
பாவம் போக்குவதோடு காரிய சித்தியும் அளிப்பார் கண்ணுக்குத் தெரியும் கடவுளான சூரிய பகவான்.