
தைப்பூசம் என்பது தமிழ் நாட்காட்டி மாதமான 'தை' மற்றும் இந்து ஜோதிடத்தில் நட்சத்திரமாக இருக்கும் 'பூசம்' என்ற தமிழ் வார்த்தையின் கலவையிலிருந்து வந்தது.
தைப்பூசம் போர் மற்றும் வெற்றியின் கடவுளான முருகப்பெருமான் சூரபத்மன் என்ற அரக்கனை வென்றதை நினைவுகூரும் நன்றித் திருவிழாவாகும். முருகப்பெருமான் சுப்ரமணியர், சரவணன், சண்முகன், ஆறுமுகன், தண்டபாணி, கந்தன், வடிவேலன் என்றும் அழைக்கப்படுகிறார்.
செவ்வாய் கிழமை முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய் கிரகத்திற்கும் முருகனுக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உண்டு.
ஜோதிடத்தில், செவ்வாய் கிரகம் துணிச்சல், வீரம், வெற்றி, நிலம், சொத்து போன்றவற்றைக் குறிக்கிறது. செவ்வாய்க்கிழமை என்பது செவ்வாய் கிரகத்திற்கு உரிய நாள். முருகன், தமிழ் கடவுள்களில் வீரம் மற்றும் யுத்த திறன்களுக்கான கடவுளாக திகழ்கிறார். எனவே, கல்வி, வேலை, திருமணம், வியாபாரம் போன்ற துறைகளில் வெற்றி பெற, நோய், கடன், எதிரிகள் போன்ற துன்பங்களில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
குறிப்பாக, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், அந்த தோஷத்தின் தீய விளைவுகளில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடுவது நல்லது. இதனாலேயே முருக பக்தர்களின் மனதில் செவ்வாய் கிழமை தனி இடத்தைப் பிடித்துள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த செவ்வாய்கிழமையில் முருகனுக்கு உகந்த தைப்பூச திருவிழா வருகிறது (11-02-2025). இன்றைய நாளில் முறையாக விரதம் அனுஷ்டித்து முருகனை வேண்டிக்கொண்டால் வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி திருமண தடை, குழந்தை வரம் வேண்டுவோருக்கு செவ்வாய்கிழமையில் வரும் தைப்பூச நாளில் முருகனை விரதம் இருந்து வழிபட உகந்த நாளாகும்.
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடி தூய்மையான ஆடை அணிந்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் பூஜை அறையில் உள்ள முருகனுக்கு மலர்களில் அலங்காரம் செய்து நைவேத்தியம் படைத்து, கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உணவு அருந்தாமல் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். மனதை அலைபாய விடாமல், யாரையும் கடும் சொற்களால் திட்டாமல் அன்றை தினம் முழுவதும் முருகனின் பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
தைப்பூசம் அன்று சில பக்தர்கள் வேண்டுதல்கள் நிறைவேற காவடி, பால்குடம், பாத யாத்திரை போன்ற வழிபாடுகளை செய்கிறார்கள். ஒருசிலர் தைப்பூசத்திற்கு 48, 11, 3, நாட்கள் விரதம் அனுஷ்டிப்பார்கள். முருகப்பெருமான் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மஞ்சள், பச்சை நிறம் உகந்தது என்பதால் தைப்பூசம் அன்று காலையில் இந்த நிற ஆடைகளை அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வர வேண்டும். அதே போல் மாலை 6 மணிக்கு மேல் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகனை மனமுருகி பிரார்த்தனை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
தைப்பூசம் அன்று அசைவ உணவு, மது, சிகரெட், போதை பொருட்கள் உபயோகிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
திருமண தடை, செவ்வாய் தோஷம், குழந்தை பாக்கியம், தொழிலில் தடை போன்ற பிரச்சனைகள் தீர இந்த வருடம் செவ்வாய்க்கிழமையில் வரும் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது நிச்சயம்.