
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிா். சிலருக்குத் திருமணம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. அதிலும் சிலருக்கோ கிரக அமைப்புகள் சரியில்லாமல் திருமணம் தடைபடலாம். சிலருக்கு செவ்வாய் தோஷம். ராகு-கேது தோஷம் இப்படி பல வகை தோஷங்கள் இருப்பதும் உண்டு. ஜோதிடரிடம் போய் ஜாதகம் பாா்த்தால் அவர் எந்த வகையான தோஷம் உள்ளது, அதற்கு என்ன விதமான பரிகாரங்கள் செய்யலாம், எந்தக் கோயிலுக்குச்சென்று பகவானை வேண்டிக்கொள்ளலாம் என பலன்கள் சொல்வதும் நடைமுறை!
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம். சீா்காழி தாலுகாவில் மயிலாடுதுறைக்கும் சீா்காழிக்கும் இடையில் அமைந்துள்ள புள்ளிருக்குவேளூா், அதாவது வைத்தீஸ்வரன் திருக்கோயில் சென்று. தீர்த்தக் குளத்தில் நீராட வேண்டும். இக்கோயிலில் அங்காரகனே உத்ஸவ மூா்த்தி. அவர் வழிபட்ட லிங்க மூா்த்தியும் உண்டு. இந்த திருத்தலமானது அங்காரக தோஷ நிவர்த்தி திருத்தலமாகத் திகழ்கிறது.
பிரதி செவ்வாய்க்கிழமைகளில், மாலை வேளையில் அங்காரகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுவது உண்டு. அன்றைய தினத்தில் லிங்கத்தை வணங்கி, அங்கே அருள்பாலித்துவரும் செல்வ முத்துக்குமாரசாமியை வணங்கி, அம்பாள் சன்னிதி வந்து அன்னை தையல் நாயகியை வணங்கி, நமது வாழ்க்கையில் நடைபெறும் கஷ்டங்கள், தோஷங்களை நிவர்த்தி செய்தருள அபிஷேகம் அல்லது அர்ச்சனைகள் செய்து வழிபட்டு, அங்கே விற்பனை செய்யப்பட்டு வரும் தையல் நாயகி திருச்சாந்து உருண்டை விபூதி பாக்கெட்டை வாங்கி வரவேண்டும். அந்த உருண்டை பல்வேறு நோய்களை தீா்க்க வல்லது.
ஆலயத்தில் வாங்கி வந்த மிளகு, உப்பு பொட்டலங்களை கொட்டிவிட்டு, வெல்லம் வாங்கி திருக்குளத்தில் கரைக்க வேண்டும். அப்போது மனமுருகி வேண்டுவதால் வாழ்வில் தரித்திரம், நோய் விலகி விடுவதோடு, அங்காரக தோஷமும் நீங்கும். இதனால் திருமணத் தடை தோஷமும் விலகிவிடும் என்பது ஐதீகமாகும். அதேபோல, அன்றைய தினமே திருமணஞ்சோி கோயிலுக்கும் சென்று பிராா்த்தணை செய்ய வேண்டும்.
இந்தத் திருத்தலமானது மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் சென்று, பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் திருமணஞ்சோி என்ற ஊாில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச்சென்று திருக்கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட்டு, அர்ச்சனை செய்ய திருமணத் தடை மற்றும் தோஷம் விலகும். திருமணத்தடை, இல்லறத்தில் போராட்டம், புத்திரப் பேறு இல்லாத நிலை போன்றவை நிவர்த்தியாக இந்தக் கோயிலில் வழிபடலாம்.
இக்கோயில் திருக்குளத்தில் நீராடி, ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து, பால் பொங்கல் நைவேத்தியம் செய்து, திருக்கல்யானசுந்தரருக்கு அர்ச்சனை செய்து, மாலை சாத்தி வழிபடுவதோடு, ‘திருமணமானதும் மாலையும் கழுத்துமாய் தம்பதி சமேதராய் நாங்கள் வருகிறோம். திருமணத் தடை நீங்க அருள்புாியுங்கள்’ என மனமுருக வேண்டுவதால் திருமணத் தடை நீங்கும். மேலே சொன்ன இரண்டு கோயில்களும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
வேறு எந்தக் கோயிலுக்கும் செல்லாமல் ஒரே நாளில் இந்த இரண்டு ஆலயங்களுக்கும் சென்று பகவானிடம் வேண்டிக்கொண்டால் திருமண தோஷம் மற்றும் தடைகள் நீங்கி விரைவில் வீட்டில் திருமணம் நடைபெறும்.