முழுக்குகளில் இத்தனை வகைகளா? ஆன்மிக நீராடலின் மறைக்கப்பட்ட ரகசியங்கள்!

சமுத்திர ஸ்நானம் முதல் மார்கழி நீராடல் வரை நம் முன்னோர் வகுத்த ஆன்மிக ரகசியம்.
புனித நீராடல் - Sacred Bath
புனித நீராடல் - Sacred Bath
ரெ. ஆத்மநாதன்

ரெ.ஆத்மநாதன், பொருளாதாரம், இதழியல்-மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவரது 4 நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. அனுபவம் மிக்க எழுத்தாளர்.ஆக்கபூர்வமான கட்டுரைகள், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது எழுத்துகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. கடந்த பல வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

‘புறந்தூய்மை நீரான் அமையும்’ என்பது தெய்வப் புலவரின் வாக்கு. உடல் சுத்தமானால்தான் உள்ளமும் ஓரளவுக்குச் சுத்தமாகும். கூடவே உண்மையும் உளத்தில் தங்கினால் அது மனத்தை மேலும் தூய்மையாக்கும். அதன் மூலம் வாழ்க்கை உயர்ந்து, மனிதர்கள் உயர்நிலையை எய்துவர். ஊக்கமும் உற்சாகமும் மனதை நிறைத்து மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழ வழி வகுக்கும்! அமைதியான வாழ்வே அனைத்து உயிர்களின் அல்டிமேட் கோல்! அதற்கு எளிதான வழி ஆன்மிக முழுக்குகளே.

புனித நீராடல் என்பது-அதாங்க முழுக்கு- உடல் தூய்மையைத்தாண்டி, ஆன்மிகத் தூய்மையுடன், பாவ விமோசனம் பெற்று இறைவனை நெருங்குவதற்கான ஓர் இயற்கை வழி முறையாகும். நமது இந்தியப் பண்பாட்டிலும், உலகின் பிற மத நிகழ்வுகளிலும் புனித நீராடல் என்பது நேரம் மற்றும் நோக்கத்தைப் பொறுத்துப் பல வகைகளாகப் பிரித்துக் கூறப்பட்டுள்ளன.

நீர் நிலைகளின் அடிப்படையிலான முழுக்குகள், காலத்தின் அடிப்படையிலானவை, சடங்கு மற்றும் ஆன்மிக நோக்கங்களுக்கானவை மற்றும் பாவ நிவர்த்தி தரும் பரிகார முழுக்குகள் என்று புனித நீராடலை, கட்டில் கால்கள் போன்று நான்காக வகைப்படுத்தியுள்ளார்கள் ஆன்றோர்.

நீர் நிலைகளின் முழுக்குகள்

கடல் நீராடல் (சமுத்திர ஸ்நானம்) அமாவாசை, பௌர்ணமி, கிரகண காலங்கள் மற்றும் மாசி மகம் போன்ற நாட்களில், இராமேஸ்வரம், கன்னியாகுமரி, பூரி, கோடிக்கரை (வேதாரண்யம்), பூம்புகார் போன்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று அங்குள்ள கடலில் நீராடுவது. இது பித்ரு தோஷத்தைப் போக்குவதாக நம்பப்படுகிறது.

நதி நீராடல் (தீர்த்த ஸ்நானம்) கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி போன்ற புகழ் பெற்ற நதிகளில் நீராடுவது. கும்ப மேளா, மகாமகம், துலா ஸ்நானம் (ஐப்பசி மாத ஆற்று நீராடல்) ஆகியவை பிரபலமானவை.

தீர்த்தக் குள நீராடல் கோயில்களின் உள்ளேயும், வெளியேயும் உள்ள புஷ்கரணிகளில் நீராடி, பாவங்களைப் போக்குதல். இராமேஸ்வரத்தில் உள்ள 22 புஷ்கரணிகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

அருவி நீராடல் குற்றாலம் போன்ற மேலிருந்து கொட்டும் அருவிகளில் வரும் மூலிகை நீரால் உடல் சோர்வும் மனச் சோர்வும் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.

புனித நீராடல் - Sacred Bath
புனித நீராடல் - Sacred Bath

காலத்தின் அடிப்படையிலான முழுக்குகள்

பிரம்ம முகூர்த்த ஸ்நானம் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் (மணி 4.30-6.00) குளிர்ந்த நீரில் குளிப்பது. மன ஒருமைப் பாட்டையும், புத்துணர்ச்சியையும் தருவதுடன் நோய் எதிர்ப்பாற்றலையும் உடலில் கூட்டும்.

கார்த்திகை மற்றும் மார்கழி நீராடல் மழை மாதமான கார்த்திகையிலும், குளிர் காலமான மார்கழியிலும் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது உற்சாகத்தை உடலில் மேம்படுத்தும் உன்னத செயல். மார்கழி மாதப் பாவை நோன்பு உயர்வான பலன்களைத் தருவது; ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து கடைப் பிடிக்கப்பட்டும் வருவது.

கிரகண கால நீராடல் சூரிய,சந்திர கிரகணங்கள் பிடிக்கும் முன்பும், நீங்கிய பின்பும் நீராடித் தூய்மையைப் பாதுகாத்தல்.

எண்ணெய் முழுக்கு(அப்யங்க ஸ்நானம்) தீபாவளிப் பண்டிகையன்று அதிகாலையில் எண்ணைய் தேய்த்து இளஞ்சூடான வெந்நீரில் குளிப்பதும், உடற் சூட்டைத் தணிக்க வாரந்தோறும் எண்ணைய்க் குளியல் மேற்கொள்வதும் மிகவும் நன்று.

சடங்கு மற்றும் ஆன்மிக நோக்கங்களுக்கான முழுக்குகள்

அவப்ருத ஸ்நானம் பெரிய யாகங்கள் மற்றும் கோயில் உற்சவ நிகழ்ச்சிகளின் இறுதியில் யாகம் செய்தோரும், உற்சவ மூர்த்திகளும் நிறைவாக நீராட, அவர்களுடன்  பக்தர்களும் மேற்கொள்ளும் நீராடல் இது.

மஞ்சள் நீராடல் கோயில் திருவிழாக்களின் நிறைவிலும், மங்களகர நிகழ்ச்சிகளின்போதும் மஞ்சள் கலந்த நீரில் குளித்தலும், தெளித்துக்கொள்ளலும் இதன் பாற்படும்.

தீட்சை/ஞான ஸ்நானம்(Baptism) கிறிஸ்தவ மதத்தில் ஒருவரை ஆன்மிக ரீதியாகப் புனிதப்படுத்தி புனித வாழ்விற்குள் சேர்க்கும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. புனித நீரில் குளித்தல் அல்லது தெளித்துக்கொள்ளல்.

வுளூ மற்றும் குஸ்ல் (Ghusl) இஸ்லாமிய சமயத்தில் அன்றாடத் தொழுகைகளுக்கு முன்னால் முகம் மற்றும் கை, கால்களைக் கழுவிக் கொள்ளலும் (வுளூ), முழு உடலைத் தூய்மைப்படுத்தும் குளியலும் இறை வழிபாட்டின் தூய்மைக்கு அச்சாரம் வகுப்பன.

புனித நீராடல் - Sacred Bath
புனித நீராடல் - Sacred Bath

பாவப் போக்கல் மற்றும் பரிகார முழுக்குகள் 

சங்கல்ப ஸ்நானம் ஒரு குறிப்பிட்ட வேண்டுதலுக்காகவோ அல்லது அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களைப் போக்கும் விதமாக வேத மந்திரங்களை ஓதியபடி நீராடுதல்.

தீட்டுக் கழித்தல் நீராடல் பிறப்பு, இறப்பு நிகழ்வுகளுக்குப் பிறகு தீட்டைக் கழித்து உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக்கொள்ளும் விதமான சடங்குகள் ரீதியான நீராடல்.

மன உறுதியும், குறையாத தன்னம்பிக்கையுமே வெற்றியாளர்களின் ஆயுதங்கள். அவற்றை வளர்ப்பதே இந்த முழுக்குகளின் அடிப்படை. குளிர்காலங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பாற்றலும் வளர்ச்சியடைந்து, ஆரோக்கியத்தின் அரணாக விளங்குகிறது.

‘நீரின்றி அமையாது உலகு’ என்ற பொன்மொழி என்றைக்கும் போற்றப்படுவது. அந்நீரால் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்ளவே இவ்வளவு முழுக்குகளையும்  வகைப்படுத்தி வைத்துள்ளார்கள், வாழ்வின் நுணுக்கமறிந்த நம் முன்னோர். அவர்கள் வழியைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்!

கடை முழுக்கு, முடவன் முழுக்கு என்றெல்லாம் எத்தனை வகை முழுக்குகள் நம்மிடையே!

அத்தனையும் ஆனந்த வாழ்வின் வழிகாட்டல்கள்தானே!

இதையும் படியுங்கள்:
நாம் உண்மையில் வாழ்கிறோமா? வாழ்க்கையைத் தொலைக்கும் அவசர உலகம்!
புனித நீராடல் - Sacred Bath