ஏன் இங்கு ஏர் பூட்டி உழுவதில்லை? - ராமேஸ்வரம் மணல் லிங்கம் சொல்லும் ரகசியம்!

lord-rama-temples
lord-rama-temples
Updated on

தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், ராமாயண காலப் புகழ் பெற்றது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற இத்தலம் காசிக்கு நிகரானது. நினைத்தாலே முக்தி தரும் தலம்.இங்குள்ள ராமநாதேஸ்வரர் கோயிலில் உள்ள மூலவர் லிங்கம் மணலாலானது. ஸ்ரீராமர் மணல் எடுத்துக் கொடுக்க, சீதா பிராட்டியார் அதை லிங்கமாக உருவாக்கினார் என்பது புராணம்.அருகில் இருப்பது அனுமன் கொண்டு வந்த லிங்கம்.எனவே இந்தப் பகுதியில் ஏர் கொண்டு உழமாட்டார்கள். மண் எடுத்து சூளை போடுவதும் இல்லை.

செங்கல்பட்டு அருகே உள்ள மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயிலில் ராமநவமி விழா விசேஷமாக நடக்கும்.அந்நாளில் காலையில் இத்தலத்தில் ராமர் கோடலி முடிச்சுடன் பஞ்ச கச்ச அலங்காரம், ஒரு வஸ்திரம் மட்டும் அணியும் ஏகாந்த அலங்காரம், மதியம் திருவாபரண அலங்காரம், மாலையில் புஷ்பங்களுடன் வைர முடி தரித்த அலங்காரம், இரவில் முத்துக் கொண்டை, திருவாபரணத்துடன் புஷ்ப அலங்காரம் என ஒரே நாளில் ராமர் ஐந்து வித அலங்காரங்களில் அருள்பாலிக்கிறார்.

திருவாரூர் மாவட்டம் வடுவூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோதண்டராமர் கோயில், "தென்னக அயோத்தி" என்று அழைக்கப்படும் பஞ்சராமர் தலங்களில் ஒன்றாகும். இங்கு கையில் வில்லேந்திய கோதண்டராமர் சீதை, லட்சுமணர் மற்றும் ஹனுமனுடன் காட்சி தருகிறார். இத்தல ராமர் பார்ப்பவர்களை பரவசம் கொள்ளும் வகையில் மந்தகாச புன்னகையுடன் காட்சி தருகிறார்.

ராவண வதம் முடித்து அயோத்தி திரும்பும் வழியில், முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ராமர் தன் விஸ்வரூப ரூபத்தை தானே சிலையாக வடித்ததுதான் இந்த சிலை என்கிறார்கள். இத்தலத்தில் ஸ்ரீராம நவமி திருவிழா மிகவும் சிறப்பாகக் 10 நாட்கள் கொண்டாடப் படுகிறது. 9-ஆம் நாளன்று தேரோட்டம். திருத்தேரில்... ராமாயணக் காட்சிகளை சின்னஞ்சிறிய சிற்பங்களாக வடித்திருப்பது கொள்ளை அழகு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள நெடுங்குன்றம் என்ற இடத்தில் ராமபிரான் மிக அரிதான திருக்கோலத்தில் யோக நித்திரை நிலையில் எழுந்தருளியுள்ளார். கருவறையில் வலப்புறத்தில் லட்சுமணன் நின்ற கோலத்தில் வில் அம்போடு காட்சி தருகிறார். இடதுபுறத்தில் சீதாபிராட்டியார் அமர்ந்த திருக்கோலத்தில் வலது கையில் தாமரை ஏந்தி காட்சி தருகிறார். நடுவில் ராமபிரான் பத்மாசனத்தில் அமர்ந்த அமைப்பில் காட்சி தருகிறார்.

இதையும் படியுங்கள்:
பாற்கடல் அமிர்தமும் வெங்காயத்தின் தோற்றமும்!
lord-rama-temples

கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் கோவிலில் ஸ்ரீ கோதண்ட ராமர் சீதா தேவி, லட்சுமணர் சமேதமாக காட்சியளிக்கிறார். இந்த ராமரை தரிசித்தாலே நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இக்கோவிலின் ஆச்சர்ய நிகழ்வாக ஒவ்வொரு மாதமும் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் காலையில் சூரியனின் ஒளி கோதண்ட ராமரின் காலை தொட்டு செல்கிற முறையில் சோழர்கள் காட்டியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. இக்கோவிலில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபட்டால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சேலத்தில் உள்ள அயோத்தியப்பட்டினம் நகரில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவில் பல நூற்றாண்டுகள் பழமையான கோயிலாகும் . ராமரின் கால்தடம் இங்கு உள்ளதாகக் கூறப்படுகின்றது. ராவணனை வென்று அயோத்தி திரும்பிய ராமர் இங்கு ஓய்வெடுத்ததாகவும் கூறப்படுகின்றது. இங்கு வந்த ராமர், அன்னை சீதை, இலக்குவன், ஆஞ்சனேயர், விபீஷணன், சுக்ரீவர் ஆகியோருடன் வந்தார். அவர்கள் அனைவரின் சிலைகளையும் இங்கே காணலாம். இத்தலத்தில் மட்டுமே ராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கின்றனர்.

சென்னை அச்சிறுப்பாக்கம் அருகிலுள்ள மதூர் மாதவப்பெருமாள் கோயிலில்,100 கோடி ராமநாமம் எழுதப்பட்ட புத்தகங்களை வைத்து தூண் ஒன்றை எழுப்பியுள்ளனர். பக்தர்கள் இந்த தூணை ராமபிரானாகவே பாவித்து வழிபடுகின்றனர். எனவே இங்கு ராமருக்கு சன்னதி இல்லை. தூண் எதிரில் ஆஞ்சநேயருக்கு சன்னதி உள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாதவப்பெருமாளை வணங்கி, இந்த தூணை சுற்றி வந்து வழிபடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பாவ புண்ணியக் கணக்கும் 'சிபில் ஸ்கோரும்': விதியை வெல்லும் நல்வினைகள்!
lord-rama-temples

வேதாரண்யம் அருகே பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியில் அருள்மிகு ராமசாமி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இதன் கிழக்கு கோடியில் இருக்கும் வனப்பகுதியில் ராமர் பாதம் ஓர் அடையாளமாக விளங்குகிறது. ராமபிரான் இவ்வழியாக தென் திசை நோக்கி பயணம் செய்து ராமேஸ்வரத்தில் அணை கட்டியதாக வரலாறு. பஞ்சபாண்டவர்கள் வனவாசம் இருந்தபோது இவ்விடத்தில் ராமரை வழிபட்டதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com