
முருகப்பெருமாள் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவதே வழக்கம். ஆனால் திருப்பரங்குன்றத்தில் ஆண்டுக்கு மூன்று முறை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழாவின்போதும், தை மாதம் தெப்பத் திருவிழாவின்போதும், பங்குனி மாதத் திருவிழாவின்போதும் இங்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
திருவக்கரையில் உள்ள நடராஜர் வழக்கம்போல் இல்லாமல், இடது காலுக்கு பதிலாக வலது காலை தூக்கி, விரித்த சடை இன்றி கூம்பிய சடை முடி கொண்டு, வக்கிரதாண்டவம் புரிகிறார்.
வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் எனும் தலத்தில் உள்ள கோவில் தூணில் தென்புறம் அர்த்த சந்திர வடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால் குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ, அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.
ஸ்ரீ சுப்பிரமணிய எனும் திருத்தலம் மங்களூர் அருகே அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மாதம் ஸ்ரீ சுப்பிரமணியசாமிக்கும், உமா மகேஸ்வரிக்கும் ரதோத்ஸவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த சமயத்தில் தேரை இழுப்பதற்காக வளையும் தன்மை கொண்ட ஒரு பிரம்பை உபயோகிப்பர். தேர் நிலைக்கு வந்தவுடன், அந்த பிரம்பை துண்டுகள் ஆக்கி, வெட்டி, பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கின்றனர். இந்த பிரம்பினை உடலில் தேய்க்க தேய்க்க எந்த வகையான நோயும் குணமாகின்றதாம்.
வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே உள்ள வன்னிவேட்டில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், சனீஸ்வரர் ஒற்றைக்காலில் நிற்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி 18 ஆம் நாளன்று அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த திருநாளில் ஸ்ரீ வெக்காளியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசிப்பதுடன், அருள் பிரசாதமாக தரப்படும் வளையல்களை அணிந்து கொண்டால் விரைவில் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள நயினார் கோவில் எனும் கிராமத்தில் உள்ள நாகநாத சுவாமி கோவிலில் நீண்ட காலமாக மக்கட் பேறு கிடைக்காதவர்கள், குழந்தை பிறந்தால் குழந்தையை காணிக்கையாக தருகிறோம் என்று சிவனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தை பிறந்ததும் நாகநாத சுவாமி காலடியில் குழந்தையை வைக்கிறார்கள். கோவில் நிர்வாகம் குழந்தையை ஏலம் விடுகிறது. குழந்தையின் பெற்றோர்களே ஏலத் தொகையை செலுத்தி விட்டு குழந்தையை பெற்றுக் கொள்கின்றனர்.
கடுக்காய் மரத்தினை ஸ்தல விருட்சமாக கொண்டுள்ள ஒரே தலம் வீரட்டானம் திருக்குறுக்கை ஆகும். இங்கு மன்மதனை சிவபெருமான் நெற்றிக்கண்ணால் எரித்ததன் மூலமாக காமதகனம் செய்தார். ஆகவே இத்தலத்தின் மற்றொரு பெயர் காமதகனபுரம் என்பதாகும்.
காசி விசாலாட்சி கோவிலின் அருகில் உள்ள மீர் கட்டிடத்தில் வராகி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு தினமும் விடியற்காலை 4 மணிக்கு பூஜை ஆரம்பிக்கப்பட்டு 5 மணி வரை நடைபெறுகிறது. பூஜை முடிந்ததும், சூரியன் உதிக்கும் முன் கோவிலை பூட்டி விடுகிறார்கள். அதன் பிறகு தேவியை தரிசனம் செய்ய இயலாது. மறுநாள் காலை 4 மணிக்குதான் கோவில் திறக்கப்படும்.
சீர்காழி விண்ணகரத்தில் 'தவிட்டுப் பானை தாடாளன்' என பெயர் கொண்ட திருமாலை தரிசிக்கலாம். இத்தலம் ஒரு முறை அழியும் போது, தவிட்டுப் பானையில் உற்சவரை வைத்து ஒரு பெண் காப்பாற்றினாராம். ஆகவே அவருக்கு தவிட்டுப் பானை தாடாளன் என்று பெயர் உண்டானது.