

திருமலையில் அருள்பாலிக்கும் வேங்கடாசலபதியை தரிசித்த பிறகு பக்தர்கள் தேடுவது அவரின் பிரசாதமான திருப்பதி லட்டைத்தான். திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025ம் ஆண்டில் 13.52 கோடி லட்டுகள் விற்பனையாகி, முந்தைய ஆண்டுகளை விட மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. டிசம்பர் 27, 2025 அன்று ஒரே நாளில் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனையாகி, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத ஒரு நாள் சாதனையை படைத்துள்ளது.
இந்த லட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது ஆச்சர்யமான ஒன்று. காஞ்சிபுரம் நீர்வளூரை பூர்வமாகக் கொண்ட சீனிவாச ஆச்சாரியார் 1942ம் ஆண்டு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பெருமாளின் எல்லா ஆபரணங்களுக்கும் பொறுப்பாளராக இருந்தார். பின்னர், அவருக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக நகை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, லட்டு தயாரிக்கும் கைங்கரியத்தை எடுத்துக் கொண்டார். சீனிவாச ஆச்சாரிக்கு பின்னர் அவரது மகன் ரமேஷ் மேற்பார்வையில் தமிழகத்தைச் சேர்ந்த 225 குடும்பங்கள் இந்த லட்டு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ஆரம்பத்தில் மெட்ராஸ் மாகாணத்தின் கட்டுப்பாட்டில் இருந்த திருப்பதி லட்டின் வடிவம் தற்போது வரை 6 முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டின் எடை 175 கிராம் எடை கொண்டதாகும். ஆரம்ப காலத்தில் கொடுக்கப்பட்டு வந்த பெரிய அளவிலான லட்டும் தற்போது குறைந்த அளவிலேயே தயாரிக்கப்படுகிறது. இதற்கு கல்யாண லட்டு என்று பெயர். திருக்கல்யாண உத்ஸவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இந்த லட்டு, பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக விறகு அடுப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போதுதான் மாறியுள்ளது. லட்டின் தரத்தை பரிசோதிக்க அடிக்கடி ஐதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டும் வருகிறது.
310 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த லட்டு பிரசாதம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தனியே ஒரு துறை அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 'பொட்டு' என்னும் மடைப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது. திருமலையில் வேங்கடாசலபதிக்கு ஆகம விதிப்படியே நைவேத்தியம் படைக்கப்படுகின்றன. அங்கு தயாராகும் ஒவ்வொரு பிரசாதமும் குறிப்பிட்ட அளவுப்படியே தயாராகின்றன. அதில் திருப்பதி லட்டும் ஒன்று. அந்த அளவீட்டு முறையை 'திட்டம் (dittam)' என்கிறார்கள். 'ஒரு படி'க்கு என்று கணக்கு. ஒரு படிக்கு 51 லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
ஒரு லட்டின் எடை 175 கிராம். ஒரு படி லட்டு தயாரிக்க என்னென்ன கலக்கப்படுகிறது? 1.8 கிலோ கடலை மாவு, 1.6 கிலோ நெய், 4 கிலோ சர்க்கரை, 300 கிராம் முந்திரிப் பருப்பு, 160 கிராம் கிஸ்மிஸ் பழம், 80 கிராம் கல்கண்டு, 40 கிராம் ஏலக்காய். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் நாள் ஒன்றுக்கு 3.5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அதில் நெய் மட்டும் 11,500 கிலோ முதல் 13,000 கிலோ வரை பயன்படுத்தப்படுகிறது. பெரிய தொட்டி போன்ற சல்லடையில் சலிக்கப்பட்ட மாவில் ஒரு பக்கம் பூந்தியும், ஒரு பக்கம் சர்க்கரை பாகும் தயாரிக்கப்படுகிறது. இவை ஒன்றாகக் கலந்து லட்டாக மாறுவது இயந்திரங்கள் மூலமாகத்தான்.
சரியான பக்குவத்தில் மேடையில் கொட்டி உடனடியாக உருட்டப்பட்டு அதற்கான இட்லித்தட்டு போன்ற எவர்சில்வர் ட்ரேயில் வைக்கப்படுகிறது. ட்ரேயில் வரும் லட்டு ஒரு பக்கம் எடுத்து அடுக்கப்படுகிறது. காலியான எவர்சில்வர் ட்ரேக்கள் உடனடியாக சுடுநீரில் சுத்தமாகிறது. இப்படித் தொடர்ந்து பரபரப்பாக லட்டு தயாரிக்கும் பணி நடக்கிறது. தினமும் இரண்டு ஷிஃப்ட்களாக கிட்டத்தட்ட 600 சமையல் நிபுணர்கள் சேர்ந்து இந்த லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். தினமும் முதலில் தயாரிக்கப்படும் குறிப்பிட்ட அளவிலான லட்டுகள் முதலில் ஏழுமலையானுக்கு பிரசாதமாகப் படைக்கப்பட்டு, அதற்கு பிறகு தயாரிக்கப்படும் லட்டுக்கள் மட்டுமே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
ஏழுமலையானுக்கு பிரசாதமாகப் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும் இந்த லட்டு பிரசாதம் மிகவும் கவனமுடனேயே தயாரிக்கப்படுகிறது. சமையல் தெரிந்த அனைவரும் இந்த லட்டு தயாரிப்பிற்கு பணி அமர்த்தப்படுவது கிடையாது. பரம்பரை பரம்பரையாக இதற்கென பணியில் இருக்கும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த கைதேர்ந்தவர்களால் மட்டுமே இந்த லட்டு தயாரிக்க முடியும். அப்படி லட்டு தயாரிக்கும் பணி செய்பவர்கள் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, இடுப்பில் சுத்தமான வேஷ்டி உடுத்தி, பாரம்பரிய முறைகளை பின்பற்றியே லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
ஈரத்துணி உள்ள பையில் லட்டை சேர்த்து வைத்தாலோ, காற்று புகாத பிளாஸ்டிக் பையினுள் லட்டை வைத்தாலோ அது கெட்டுப்போகலாம். மற்றபடி திருப்பதி லட்டு 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையும் குறையாது.