

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது பழமையான திரு உத்திரகோசமங்கை என்ற அழைக்கப்படும் சிவன் கோவில். இங்கு மங்களநாதர் மற்றும் மங்களேஸ்வரி அம்மன் அருள்பாலிக்கின்றனர்; பார்வதி தேவிக்கு சிவன் வேதங்களை உபதேசித்ததால் இந்த கோவிலுக்கு இந்த பெயர் அமைந்தது. மேலும் இந்த கோவிலில் 2000 ஆண்டுகள் பழமையான இலந்தை மரம் உள்ளது.
உத்திரகோசமங்கை மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்கள் இடையே உள்ளது.இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் முற்பிறவி பாவங்கள், சாப-விமோசனங்கள், ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இது உலகின் முதல் சிவன் கோவில் எனவும், இங்குள்ள ஐந்தரை அடி உயர நடராஜர் திருமேனி மரகதத்தால் ஆனது என்றும் கூறப்படுகிறது. இந்த நடராஜர் மரகதத் திருமேனியுடன் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார். இந்த மரகத பச்சை திருமேனியை மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே காண முடியும்.
மற்றபடி வருடம் முழுவதும் இந்த நடராஜர், சந்தனக் காப்பு அலங்காரத்திலேயே காட்சியளிப்பார்.
மரகதக் கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீரும் என்பது நம்பிக்கை!
எனவே வீதி உலா வருவதற்கும், நித்திய அபிஷேகத்திற்காகவும், பஞ்சலோகத்தால் ஆன மற்றொரு நடராஜர் திருமேனி இங்கு இருக்கிறது. இந்த பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார். இந்த விக்கிரகத் திருமேனியையும் கல்வெட்டுக் குறிப்புகளையும் பார்க்கும் போது, நடராஜர் சிலையும் தொன்மையானது எனப் புலப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்! அதேபோல் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர், இங்கு தனது பள்ளியறையில் அம்பாளுக்காக தனிமையில் நடனம் ஆடினார் என்பது தல வரலாறு.
இங்கே வருடந்தோறும் திருவிழாக்கள் நடந்தாலும், சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம், வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பத்துநாள் விழா, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை விழா, மாசி மகாசிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களாகும்.
ஆருத்ரா தரிசன விழா வருகின்ற ஜனவரி 2-ந்தேதி அன்று நடக்க உள்ளது. அன்றைய தினம் கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதி காலை 8 மணிக்கு திறக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனம் முழுவதுமாக களையப்பட்டு நடராஜருக்கு மாபொடி, மஞ்சப்பொடி, பால், பன்னீர், திரவியம் உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகின்றது. தொடர்ந்து அன்று பகல் மற்றும் இரவு வரையிலும் பச்சை நடராஜர் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
அதனை தொடர்ந்து அடுத்த நாள் ஜனவரி 3-ந்தேதி அதிகாலை 2 மணி முதல் மீண்டும் நடராஜருக்கு 32 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, அதிகாலை 5 மணிக்கு மரகத நடராஜர் மீது சந்தனம் சாத்தப்பட்டு சூரிய உதய நேரத்தில் ஆருத்ரா தரிசன பூஜையும் நடைபெற உள்ளது.
திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி திறந்து பக்தர்கள் மரகத நடராஜரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்ய வருவார்கள் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.