
கடந்த 2012-ம் ஆண்டு பாப்பின்ஸ் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை பார்வதி நாயர், 2014-ம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.
என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை பார்வதி நாயர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.
‘என்னை அறிந்தால்’ படத்தின் நடிகர் அருண் விஜய்க்கு மனைவியாக இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் மூலம் பிரபலமான இவருக்கு இந்த படம் பெயர் சொல்லும் படமாக அமைந்தது மட்டுமில்லாமல் திருப்பு முனையாகவும் அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர் அதிகமான மலையாள படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தமிழில் பார்த்திபன் இயக்கத்தில் உருவான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில், அவர் ஒரு வித்தியாசமான ரோலில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகை பார்வதி நாயர் தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம் வந்த கொண்டிருக்கிறார். சமூக வலைதளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகை பார்வதி நாயருக்கு ட்விட்டரில் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பாலோவேர்களும், இன்ஸ்டாகிராமில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை நடிகை பார்வதி நாயர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
என் வாழ்க்கையின் அன்புடன் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க உற்சாகமாக இருப்பதாக நடிகை பார்வதி நாயர் கூறியுள்ளார். ஒரு விருந்தில், தற்செயலாக ஆஷ்ரித் அசோக்கை சந்தித்தாகவும், அதன் பிறகு நாங்கள் பேச ஆரம்பித்தோம் என்றும் பிறகு திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் நாங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம் என்றும் கூறியுள்ளார்.
எங்கள் திருமணம் மலையாளி மற்றும் தெலுங்கு இரண்டும் கலந்ததாக இருக்கும் என்று நடிகை பார்வதி நாயர் கூறினார். கேரளாவைச் சேர்ந்த பார்வதி மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆஷ்ரித் இவர்களின் திருமணத்தை அவர்களது குடும்பத்தினர் சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
எங்கள் திருமணம் மற்றும் உணவு இரண்டும் மலையாளி மற்றும் தெலுங்கு பாரம்பரியம் கலந்ததாக இருக்கும். பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கும் ஹல்தி, மெஹந்தி போன்ற திருமணத்திற்கு முந்தைய அனைத்து விழாக்களும் சென்னையில் நடைபெறும். இருப்பினும், திருமணத்திற்குப் பிந்தைய வரவேற்பை கேரளாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் நடிகை பார்வதி நாயர் கூறியுள்ளார்.
இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.