

கந்தா.. கந்தா.. என்று கவிபாடி தொழுதோர்க்கு இந்தா.. இந்தா.. என்று வரங்களை அள்ளித்தருபவன் முருகப்பெருமான். அவனுக்கு உகந்த நாள் வைகாசி விசாகம். சிவபெருமான், சூரபத்மனை அழிக்க ஆறு முகங்களுடன் முருகனை உருவாக்கிய நாள்.
வைகாசி விசாகம் முருகப்பெருமான் அவதரித்தத் திருநாளாக, வைகாசி மாதம் பெளர்ணமி விசாக நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் முக்கிய இந்து பண்டிகையாகும். இந்நாளில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், விரதம், மற்றும் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் போன்றவை சிறப்பாக நடைபெறும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், குறிப்பாக திருச்செந்தூர் மற்றும் வடபழனியில் இவ்விழா விமரிசையாகக் கொண்டாடப்படும்.
கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் பாராயணம் செய்யலாம். இனிப்பு அப்பம் நைவேத்தியம் படைத்து தீபமேற்றி வழிபட வேண்டும்.
இந்தாண்டு முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகம், வைகாசி மாதம் 16-ம்தேதி, அதாவது மே 30-ம்தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
விசாக நட்சத்திரம் : மே 29ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 10.38 மணிக்கு தொடங்கி மே 30-ந்தேதி சனிக்கிழமை மதியம் 1.20 மணி வரை உள்ளது.
பௌர்ணமி திதி : மே 30-ம்தேதி சனிக்கிழமை மதியம் 11.59 மணிக்கு தொடங்கி மே 31-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.16 மணி வரை உள்ளது.
27 நட்சத்திரங்களிலும் விசாக நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் நாம் முறையாக விரதம் அனுஷ்டித்து வழிபாடுகளை மேற்கொண்டால் முன்னேற்றங்கள் படிப்படியாக வந்து கொண்டேயிருக்கும். அந்த அடிப்படையில் வைகாசி விசாகத்தன்று வள்ளல் முருகப்பெருமானை உள்ளத்தில் நினைத்து வழிபட்டால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும்.
விசாக திருநாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி தூய ஆடை அணிந்து வீட்டை சுத்தம் செய்த பின்னர், இல்லத்து பூஜையறையில் குத்து விளக்கேற்றி வைக்க வேண்டும். அலங்கார மேடையில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் படத்தையும் வைத்து செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து, நைவேத்தியம் படைத்து பாராயணங்கள் பாடி வழிபாடு செய்யலாம்.
காலை மற்றும் மாலையில் அருகில் உள்ள சிவன் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவேண்டும்.
அன்றைய தினம் அன்னதானம், தயிர் சாதம், வடை, மோர், பானகம், குடை, செருப்பு போன்றவற்றை ஏழைகளுக்குத் தானம் செய்யலாம்.
முருகப்பெருமானின் அருளை பெற நீங்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க திட்டமிட்டால் அந்தந்த நாட்களுக்கு ஏற்ப எப்போது தொடங்க வேண்டும் என்று பார்க்கலாம்.
11 நாட்கள் விரதம் :
நீங்கள் முழுமையாக 11 நாட்கள் விரதம் இருப்பவர் என்றால், வரும் மே 20-ம்தேதி (புதன்) அன்று தொடங்கி முருகனை விரதம் இருந்து வழிபடலாம்.
6 நாட்கள் விரதம் :
கந்த சஷ்டி போல 6 நாட்கள் மட்டும் விரதம் இருக்க விரும்புவோர், மே 25-ம்தேதி (திங்கட்கிழமை) முதல் விரதத்தை தொடங்கலாம்.
3 நாட்கள் :
நீங்கள் 3 நாட்கள் மட்டும் விரதம் இருக்க விரும்பினால், மே 28-ம்தேதி (வியாழக்கிழமை) முதல் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
இந்த நாட்களில் ஒரு வேளை உணவு அல்லது பால், பழங்கள் மட்டும் உட்கொண்டு ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை உச்சரித்து முருகனை வழிபடுவது சிறந்தது. இந்த விரத நாள்களில் அசைவம் சாப்பிட கூடாது. சிகரெட், புகையிலை போன்ற போதை வஸ்துக்களை தொடக் கூடாது. யாரையும் கடுஞ்சொற்களால், மனம் புண்படும்படி பேசக்கூடாது. குறிப்பாக வைகாசி விசாகம் அன்று மௌன விரதம் அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பானது.
கடைசியாக மே 30 வைகாசி விசாகம் அன்று மாலையில் முருகன் கோவிலில் வழிபாடு செய்த பின்னர் உங்கள் விரதத்தை முழுமையாக நிறைவு செய்யலாம்.
வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமான வழிபடுவதன் மூலம் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க இயலும். பகை விலகும். பாசம் பெருகும். செல்வம் பெருகும். தொல்லைகள் அகலும். அன்றைய தினம் இயன்றவரை அன்னதானம் செய்யலாம்.
விசாகத்தன்று வேலவனை வழிபட்டால் வெற்றி கிடைக்கும்.
குமரனை வழிபட்டால் குறைகள் தீரும்.
கந்தனை வழிபட்டால் கவலைகள் அகலும்.
சண்முகனை வழிபட்டால் சந்தோஷங்கள் சேரும்.