
மதுரை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முக்தீஸ்வரர் கோயில் 2000 ஆண்டுகள் பழைமையானது. சிவனின் 64 திருவிளையாடல்களில், இரண்டாவது திருவிளையாடல் நடந்த இடம்தான், ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோயில். மதுரையில் உள்ள பஞ்ச தலங்களில் வாயு தலமாகவும், சூரியனுடைய ஒளிக்கதிர்கள் இறைவனை பூஜிக்கும் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது ஸ்ரீ முக்தீஸ்வரர் ஆலயம்.
ஒரு சமயம் துர்வாச முனிவர், சிவ பூஜையை முடித்துவிட்டு பிரசாதமான மலர் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அந்த மலர் மாலையை தனது வாகனமான ஐராவதத்தின் (தேவலோகத்தின் வெள்ளை யானை) மீது வைத்தார். ஆனால், அந்த மாலையின் மகிமையை அறியாத ஐராவதம், தன்னுடைய தும்பிக்கையால் அந்த மலர் மாலையை கீழே வீசி காலால் மிதித்தது. இதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர், தேவேந்திர பதவியை துறக்கும்படி இந்திரனுக்கும், தெய்வீகத் தன்மையை இழந்து காட்டு யானையாகத் திரியும்படி ஐராவத யானைக்கும் சாபம் கொடுத்தார். சாபம் பெற்ற ஐராவதம் பல நூற்றாண்டுகள் காட்டு யானையாக அலைந்து திரிந்தது. பின்பு வில்வ வனமாக இருந்த தற்போது கோயில் உள்ள இங்கு சிவ பூஜை செய்து வழிபட்டது. இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அதற்கு முக்தி அளித்தார்.
பிற்காலத்தில் இவ்விடத்தில் திருமலை நாயக்கரின் அண்ணனான முத்துவீரப்ப நாயக்கர் கோயில் எழுப்பினார். அவரது பெயராலேயே இத்தல ஈசன், 'முத்தீஸ்வரர்' என்று அழைக்கப்பட்டார். மேலும் 'ஐராவதேஸ்வரர்' என்றும் 'இந்திரேஸ்வரர்' என்றும் அழைக்கப்பட்டார். அந்தப் பகுதியும் ‘ஐராவதநல்லூர்' என்றும் மாறியது. இப்பகுதி மக்கள் சிவபதம் அடைந்தவர்களுக்காக சிவன் சன்னிதியில் 'முக்தி விளக்கு' ஏற்றி வழிபடுகின்றனர். இதன் காரணத்தினால் தற்பொழுது இத்தல இறைவன் 'முக்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஈசனுக்கு முக்தீஸ்வரர் என்றும் அம்பாளுக்கு மரகதவல்லி என்றும் திருநாமங்கள். இந்த ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்று அம்பிகை, ஈசன் ஆகிய இருவரின் சன்னிதியையும் தரிசனம் செய்யலாம். எழில் கொஞ்சும் திருவடிவுடையாளாகத் திகழும் மரகதவல்லித் தாயாரை வேண்டிக்கொண்டால் செல்வ வளம் சிறக்கும் என்பது நம்பிக்கை.
கோயில் பிராகார கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி அமைந்துள்ளார். சிவனுக்கு முன்புறம் உள்ள தூணில் கையில் வீணையை ஏந்திக் கொண்டு, வீணா தட்சிணாமுர்த்தியாக இவர் வீற்றிருப்பது தனிச் சிறப்பாகும். இவரை வணங்கி வேண்டினால் கல்வி, கேள்வி மற்றும் இசை ஞானம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோயில் மகா மண்டபத்தில் உள்ள 26க்கும் மேற்பட்ட தூண்களில் பல்வேறு தெய்வ சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது வியப்பிற்குரியது.
பெரும்பாலான சிவாலயங்களில் ஆண்டுக்கு சில விநாடிகள் மட்டுமே சூரிய ஒளிக்கதிர்கள் சுவாமியை வழிபடுவதை காணலாம். ஆனால், இந்த சிவாலயத்தில் மார்ச் 10 முதல் 21ந் தேதி வரை, செப்டம்பர் 19 முதல் 30ந் தேதி வரை என மொத்தம் 24 நாட்கள் தொடர்ச்சியாக சூரியக்கதிர் சுவாமியை பூஜிக்கிறது. முக்தீஸ்வரர் சிலை மீது விழும் சூரிய ஒளி அன்றைய தினம் சுமார் 20 நிமிடங்கள் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. சூரிய பகவான் இங்கு சிவனை வழிபடுவதால் கோயிலில் நவகிரகங்கள் இல்லை. கொடி மரமும் இல்லை.
காலை நேரத்தில் கருவறைக்கு எதிரே உள்ள துவாரங்கள் வழியாக சூரியக்கதிர்கள், கருவறைக்குள் ஊடுருவுகின்றன. முதலில் மஞ்சள் நிறத்திலும், பின்பு கண்கள் கூசும் வகையில் வெள்ளொளியாகவும் தெரியும். சூரிய பூஜையின் 15 நிமிட இடைவெளியின்போது கோயில் சார்பில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம் செய்யப்படும். இந்த நிகழ்வு இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மொத்தம் 24 நாட்கள் நடக்கும் இந்த அற்புத தரிசனத்தைக் கண்டால் நம் மனதின் பிணிகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.
பொதுவாக, கோயில்களில் ஒரு மரம் தல விருட்சமாக இருக்கும். இந்தக் கோயிலில் கிழுவை, நெல்லி, மாவிலங்கை மற்றும் வில்வம் ஆகிய நான்கு வகையான மரங்கள் உள்ளன. வில்வ மரத்தடியில் சித்தி விநாயகர் சன்னிதி உள்ளது. இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், நாம் நினைத்த காரியங்கள் வெற்றி அடையவும் இங்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இங்குள்ள நந்தி பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார். இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் நந்தி பகவானுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.