

பகவான் மகாவிஷ்ணு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவருடைய இரு காதிலிருந்து மது, கைடபர் என்ற அசுரர்கள் தோன்றினர். தேவர்களை இவர்கள் துன்புறுத்த, பகவானிடம் அவர்கள் முறையிட, அசுரர்களுடன் பகவான் போரிட்டார். முடிவில் அசுரர்கள் பகவானிடம் சரணடைந்தார்கள். ‘தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும்’ என்று கூற, வைகுந்தத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.
அவர்கள் பெருமாளிடம், ‘வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களுக்கும், பின்தொடர்பவர்களுக்கும் சாபங்கள் நீங்கி முக்தி பேறு வேண்டும்’ என்றும் வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பவனி வரும் காட்சி இந்த வைகுண்ட ஏகாதசி நாளில் நடைபெறுகிறது.
இன்னொரு புராணக் கதையும் உண்டு. ஒரு சமயம் இறைவனின் நாபி கமலத்தில் இருந்து வெளிப்பட்டதால் பிரம்மனுக்கு அகங்காரம் ஏற்பட்டது. அந்நேரம் திருமால் காதிலிருந்து வெளிப்பட்ட அசுரர்கள் பிரம்மாவை கொல்ல முயன்றனர். ‘அவரைக் கொல்ல வேண்டாம். உங்களுக்கு வேண்டிய வரம் தருகிறேன்’ என்று திருமால் கூற, ‘நீங்கள் என்ன எங்களுக்கு வரம் தருவது. நாங்களே உங்களுக்கு வரம் தருகிறோம் என்றனர் அசுரர்கள். ‘இப்படி அகங்காரத்தோடு இருக்கும் நீங்கள் என்னால் வதம் செய்யப்பட்டு பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்’ என்று பெருமாள் கூற, திகைத்த அசுரர்கள் ‘வதம் செய்யப்பட்டு ஸித்தி அடைய வேண்டும்’ எனக் கேட்டனர்.
அதன்படி அவர்கள் இறந்த பிறகு மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று வைகுண்டத்தில் வடக்கு வாசலை திறந்த திருமால் அதன் வழியாக அவர்களை உள்ளே அனுமதித்தார். உடனே ‘தங்களுக்குக் கிடைத்த பாக்கியம் வைகுண்ட ஏகாதசியன்று திருமாலை தரிசிக்கும் அனைவர்க்கும் கிடைக்க வேண்டும்’ என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
யார் இந்த ஏகாதசி?
தேவர்களையும் முனிவர்களையும் முரன் என்ற அசுரன் துன்புறுத்த, அவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினர். அதை ஏற்று மகாவிஷ்ணு முரனுடன் போரிட்டு வென்றார். பிறகு பகவான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது பெருமாளை கொல்ல வாளை தூக்கியபோது மகாவிஷ்ணு தனது உடலிலுள்ள ஒரு சக்தியை பெண் வடிவில் தோற்றுவித்தார். அவள் அசுரனுடன் போரிட்டு வென்றாள்.
அசுரனை வென்ற பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் சூட்டினார் பெருமாள். ‘அசுரனை வென்ற நாள் ஏகாதசி என்று அழைக்கப்படும். அன்று தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக வரமளித்தார் பெருமாள். அந்த தினமே வைகுண்ட ஏகாதசியாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஏகாதசி திதி மகாவிஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுவதால் ஏகாதசி விரதம் இருந்தால் திருமாலின் அருளை முழுமையாகப் பெற முடியும்.
இந்நாளில் உணவு உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. இரவு முழுவதும் கண் விழித்து புராண நூல்கள் படிப்பது பாடல்கள், பஜனை என்று கழிக்க வேண்டும். மறுநாள் துவாதசியில் அதிகாலை உணவு சாப்பிட வேண்டும். ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் சகல செல்வங்களும் உண்டாகும் பெருமாள் அருள் கிடைக்கும்.