வைணவத் திருத்தலங்களில் பகல் பத்து, இராப்பத்து உத்ஸவங்களின் விசேஷம்!
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவ திருத்தலங்களிலும் திவ்ய தேசங்களிலும் இராப்பத்து, பகல் பத்து என்று உத்ஸவங்கள் கொண்டாடப்படுகின்றன. இவ்விழாவின்போது திருமால் விதவிதமான அலங்காரங்களில் விதவிதமான வாகனங்களில் திருவீதி உலா வருவார்.
இதில் பகல் பத்து என்பது மார்கழி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதி முதல் தசமி திதி வரையான பத்து நாட்களுக்கு நடைபெறும் திருவிழாவாகும். தசமிக்கு மறுநாளான வளர்பிறையின் ஏகாதசி திதி முதல் தேய்பிறையின் பஞ்சமி திதி முடிய பத்து நாட்கள் விழாவிற்கு இராப்பத்து என்று பெயர்.
பகல் பத்து உத்ஸவத்தின் முதல் நாள் நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். இன்று முதல் 20 நாட்களுக்கு முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். பகல் பத்தின் பத்தாவது நாள் பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
இவ்விழாவில் முதல் ஆயிரம் திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருமொழி, திருக்குறுந்தண்டகம், திருநெடுந்தாண்டகம் என இரண்டாயிரம் திருப்பல்லாண்டு பாடப் பெறுகிறது. தமிழகத்தில் ஆழ்வார் திருநகரி,
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று திவ்ய தேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியையொட்டி அரையர் சேவை நடைபெறுகிறது.
திருமாலுக்கு 108 திவ்ய தேசங்கள் இருந்தபோதிலும் பூலோக வைகுண்டம் என வைகுண்டத்திற்கு இணையாக திருமால் வாசம் செய்யும் தலங்களாக சொல்லப்படுவது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலும், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலும்தான்.
பகல் பத்து உத்ஸவ நாட்களான வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்கள் பெருமாளுக்கு பல அலங்காரங்கள் செய்து ஆழ்வார்களின் பாசுரங்கள் பாடப்படும். அதேபோல இராப்பத்து எனப்படும் வைகுண்ட ஏகாதசிக்கு பிந்தைய பத்து நாட்கள் திருவாய்மொழிப் பாடல்கள் இசைக்கப்படும். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்படும் நம்பெருமாள், அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசலில் (பரமபத வாசலில்) எழுந்தருள்வார்.
இந்த உத்ஸவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாடெங்கிலுமிருந்து வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்ரீரங்கத்திற்கு பரமபத வாசல் வழியாக பெருமாளை தரிசிக்க வருகை தருவது வழக்கம்.

