வையகம் போற்றும் வைரமுடி சேவை!

Vaiyagam Potrum Vairamudi Sevai!
Vaiyagam Potrum Vairamudi Sevai!https://asrams.chinnajeeyar.org

ர்நாடக மாநிலம், மேல்கோட்டையில் அருளும் திருநாராயண பெருமாள் கோயிலில் இன்று இரவு வையகமே வியந்து பார்க்கும் வைரமுடி சேவை நடைபெற உள்ளது. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நடைபெற்று வருகிறது இந்த வைர முடி சேவை. திருநாராயண பெருமாள் வைரமுடி (வைர கிரீடம்) சூட்டி வரும் அந்த அழகைக் காண்பதற்காகவே லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு தேசங்களிலிருந்தும் இன்று மேல்கோட்டை என்றழைக்கப்படும் திருநாராயணபுரத்திற்கு வருகை தருவார்கள்.

வைரமுடி பாற்கடலிலிருந்து பாருலகத்திற்கு வந்ததே ஒரு சிலிர்ப்பூட்டும் கதைதான். ஒரு சமயம் ஸ்ரீமன் நாராயணனுக்கும் தாயாரான லக்ஷ்மி தேவிக்கும் சிறு ஊடல் ஏற்பட்டதன் விளைவாக தாயார் பூலோகத்திற்கு கோபித்து கொண்டு போய்விட்ட சமயம் அது. அன்றைய தினம் பாற்கடலில் பரந்தாமன் தனியாக பாம்பணை மேல் துயில் கொண்டிருக்க, என்றுமே இல்லாத திருநாளாக தினமும் காவல் காக்கும் ஜய, விஜயர்களுக்கு பதில், கருடன் அன்று பெருமாளின் வாயிற்காவலனாகப் பணி செய்ய நேர்ந்தது. அந்த சமயத்தில் பிரகலாதனின் மகனான விரோசனன் திருப்பாற்கடலுக்கு வந்தான். பகவான் மீது அலாதி பக்தி கொண்டவன் பிரகலாதன் என்றால், அவனது மகனான விரோசனனோ, அதற்கு நேர்எதிராக பகவானின் மீது விரோதம் கொண்டவனாக இருந்தான்.

திருப்பாற்கடலில் சென்று பெருமாளை தரிசித்து விட்டு வந்த விரோசனன், பகவானுக்கும், கருடனுக்கும் தெரியாமல் பகவானிடமிருந்து வைர கிரீடத்தை திருடி எடுத்துச் சென்று விட்டான். விரோசனன் அவ்விடத்தை விட்டு சென்ற பிறகு கருடன் உள்ளே சென்று திருமுடி (வைர கிரீடம்) இல்லாத வைகுண்டபதியை பார்த்து ஆச்சரியமுற்றான்.

வைரமுடியை திருடிச்சென்றது விரோசனன்தான் என்பதை வினதையின் மகனான கருடன் புரிந்து கொண்டு விட்டான். ”பெருமாளே, இதோ இப்போதே சென்று வைர கிரீடத்தை எப்பாடுபட்டாவது கண்டுபிடித்து உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்கிறேன்” என்றான் கருடன். அதற்கு பெருமாள் உடனே, ”கருடா, நீ என்னைப் பிரிந்து சென்ற எனது நாயகியையே இன்னும் கண்டுபிடித்து கொடுக்கவில்லையே… எப்படி இந்த வைர கிரீடத்தை கண்டுபிடிப்பாய்?” என்று கேட்கிறார்.

கருடனோ அதற்கு, “பெருமாளே, பிராட்டி இருக்கும் இடத்தைப் பற்றி இந்த அடியேனுக்கு, ஒரு சிறு துப்பு நீங்கள் கொடுத்தீர்களானால் நிச்சயம் நான் பிராட்டியை கண்டுபிடித்து உங்களிடம் சேர்த்து விடுவேன். அதனால் ஏதாவது துப்பு கொடுங்கள்” என்று கேட்க, அதற்கு பெருமாளோ, “தாயார் இருக்கும் இடத்தில் தெளிவு இருக்கும். எங்கே உனக்கு தெளிவு கிடைக்கிறதோ, அங்கேதான் பிராட்டி இருக்கிறாள் என்று அர்த்தம்” என்றார் அனைத்தும் அறிந்த பெருமாள்.

விரோசனன் இருக்கும் பாதாள உலகிற்கு சென்று அவனிடம் போரிட்டு வைர கிரீடத்தை அவனிடமிருந்து பெற்று, வைகுண்டம் நோக்கி பறந்து வந்து கொண்டிருந்த கருடனின் மனதில், ‘தாயாரை இன்னும் காணவில்லையே’ என்ற குழப்பம் அப்படியே இருந்தது. தம் கையில் வைர கிரீடத்தை எடுத்து பறந்து வந்து கொண்டிருந்த கருடனின் கண்களில் கீழே பூலோகத்தில் செவ்வக வடிவில் இருந்த ஒரு குளம் தென்பட்டது. அந்தக் குளத்தில் தண்ணீர் மிகவும் தெளிவாக இருந்தது.

அந்தக் குளத்தின் அழகில் சற்று லயித்துவிட்டு பறந்த கருடன் தம் கையில் இருந்த கிரீடத்தில் ஒரு முத்து இல்லாமல் இருப்பதைக் கண்டு கவலை கொண்டார். ‘எங்கேயோ முத்து விழுந்து விட்டதே’ என்று எண்ணியவாறே மீண்டும் தான் வந்த பாதையிலேயே பறந்து செல்ல, அப்போது அந்த தெளிந்த குளத்தில் கிரீடத்திலிருந்து விழுந்த முத்து கருடனின் கண்களுக்குத் தென்பட்டது.

இதையும் படியுங்கள்:
திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
Vaiyagam Potrum Vairamudi Sevai!

தொலைத்த முத்து மீண்டும் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் அந்த முத்தை திரும்பவும் அந்த வைர கிரீடத்தில் பதித்து விட்டு கருடன் பறந்து வந்து கொண்டிருந்தபோது பூலோகத்தில் நிறைய பசுக்கள் சூழ்ந்திருக்க தாமரை மலர் போன்ற கண்களை கொண்ட ஒரு சிறுவன் புல்லாங்குழல் இசைப்பதைப் பார்த்தார். அந்த சிறுவன் சாட்சாத் நாராயணன் (கிருஷ்ணன்)தான் என்பதை அறிந்து கொண்டு தனது கையில் இருந்த அந்த வைர கிரீடத்தை அந்தக் குழந்தையில் தலையில் அவர் பொறுத்த, அந்த கிரீடம் அப்படியே அக்குழந்தையின் தலையில் பொருந்தி விட்டது.

அந்தக் கண்ணனால் ஆராதிக்கப்பட்ட பெருமாள்தான் இன்றும் மேல்கோட்டையில் திருநாரயணராக சேவை தந்து கொண்டிருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணரால் அன்று சூட்டப்பட்டதுதான் வைரமுடி என்று அழைக்கப்படும் அந்த வைர கிரீடம். அன்று கருடனால் கொண்டு வரப்பட்ட வைர கிரீடத்தைத்தான் இன்றளவும் தான் சூட்டிக்கொண்டு கருடன் மீது அமர்ந்தபடி இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை வைரமுடி சேவையில் நமக்கெல்லாம் காட்சி கொடுக்கிறார், செல்வப்பிள்ளையான அந்தத் திருநாராயணர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com