
‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற சொற்றொடரை அடிக்கடி நாம் கேட்டிருப்போம். இந்த சொற்றொடர் எப்படி பிறந்தது என்பதை இந்தப் பதிவில் காண்போம். வல்லவனுக்குக் கிடைக்கக்கூடிய சிறு துரும்பைக் கூட அவனுடைய வல்லமை காரணமாக சிறந்த ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்பதுதான் இதன் பொருள். இந்த சொற்றொடர் பிறந்ததற்கான காரணங்கள் ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் சொல்லப்படுகிறது.
பாண்டவர்களும் கௌரவர்களும் சிறுவர்களாக இருந்தபொழுது பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பந்து அருகிலிருந்த கிணற்றில் விழுந்து விட்டது. கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முயற்சித்தனர். அவர்களால் எடுக்க முடியவில்லை. அந்த வழியே வந்த துரோணர், ‘அம்பெய்து பந்தை எடுக்கலாமே’ என்று கூற, ‘அம்பு எய்தால் பந்து உடைந்து விடுமே’ என்று தர்மன் கூறினான்.
அதற்கு துரோணாச்சாரியார் சிரித்துக்கொண்டே பந்தை விட மெல்லிய தர்ப்பைப் புல் அம்புகளை செய்து அவற்றில் ஒன்றை பந்தின் மேல் எய்தார். பின்னர் மற்ற அம்புகளை வரிசையாக அம்புகள் மேல் எய்து கயிறு போல மாற்றி விட்டார். கைக்கெட்டும் தொலைவிற்கு கயிறு வந்ததும் மெல்ல அதை இழுத்தார். பந்து மேலே வந்து விட்டது. சிறுவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.
‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற சொற்றொடர் பிறந்தது இதன் மூலம்தான். குருகுலத்தில் படித்தபொழுது அவருடைய நண்பன் துருபதன் கொடுத்த வாக்குறுதியை நம்பி ஏமாந்தவர் துரோணர். பிற்காலத்தில் கஷ்டப்படும் சமயம் அவருக்கு செல்வம் வழங்குவதாக உறுதியளித்திருந்தான் துருபதன். ஆனால், மன்னனான பிறகும் துருபதனுக்கு அந்த உதவியை செய்ய மனமில்லை. இதனால் வெகுண்ட துரோணர், தானும் மன்னர் போல வாழ வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.
பீஷ்மர், துரோணரைப் பற்றி ஏற்கெனவே அறிந்து வைத்திருந்ததால் அவரை தன்னுடைய பேரன்களுக்கு குருவாக்கினார். துரோணர் ராஜகுருவாகி தன்னை ஏமாற்றிய நண்பன் துருபதனுக்கு நிகராகி விட்டார்.
அடுத்ததாக, ராமாயணத்தில் ராமரும் சீதையும் காட்டில் வனவாசத்தில் இருந்தபொழுது அவர்களுக்குத் தேவையான உணவினை சேகரிக்க இலக்குவன் போயிருந்த சமயம், ஒரு மரத்தடியில் ஸ்ரீராமர், சீதா தேவி மடியில் தலை சாய்த்து படுத்திருந்தார்.
இப்படி சித்திரக் கூடத்தில் ஓய்வெடுத்து கொண்டிருந்தபொழுது அங்கு வந்த இந்திரனின் மகனான ஜயந்தன் சீதையின் அழகைக் கண்டு மயங்கி அவளை அடைய வேண்டும் என்ற ஆசையுடன் காக்கை வடிவம் எடுத்து மரத்தில் அமர்ந்திருந்தான். காற்றில் அவளது மார்புச் சேலை விலக, ஜயந்தன் காக்கை உருவத்தில் மார்பில் கொத்தினான்.
அப்போது ஸ்ரீ ராமனது அருகில் வில் மட்டும் இருக்க அம்பு இல்லை. உடனே தரையில் இருந்த புல்லைக் கிள்ளி வில்லில் மாட்டி எய்தினார். இதனால் ஜயந்தனின் ஒரு கண் பறிபோனது. ஜயந்தனும் சட்டென மறைந்து போனான். சீதை, ஸ்ரீராமரிடம் ‘அம்பில்லாமல் எப்படி எய்தீர்கள்?’ என்று கேட்க, ராமரோ 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்று கூற சீதைக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. இதுவே பின்பு பழமொழி ஆயிற்று என்று சொல்லப்படுகிறது.