

இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றான வாரணாசியில் உள்ள ஒவ்வொரு கோவிலும் தனக்கென ஒரு முக்கியதுவத்தை கொண்டுள்ளன. அந்த வகையில், அங்குள்ள சங்கட தேவி கோவிலும் மிகவும் போற்றப்படும் ஒன்றாகத் திகழ்கிறது.
வாரணாசியின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த சங்கட தேவி கோவிலில், தேவியை, துன்பம் மற்றும் துரதிர்ஷ்டத்திலிருந்து நிவாரணம் பெறுவதற்காக பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
சங்கட மாதா கோவிலின் தோற்றம், புராணக்கதைகள் மற்றும் வரலாறு நிறைந்ததாக கருதப்படுகிறது.
'சங்கட' என்ற சொல்லுக்கு 'துன்பம்' அல்லது 'சிரமம்' என்று பொருள். ஆகவே சங்கட தேவி என்றால் துன்ப காலங்களில் தடைகளை நீக்கி நம்மை காக்கும் தேவி என்பதாகும்.
இந்த தேவி தொடக்கத்தில் ஒரு பழங்கால நாட்டுப்புறத் தாய் தெய்வமாக இருந்தாள், பின்னர் சிவனின் துணைவியாகப் புராணத்தில் கூறபட்டாள், மேலும் பக்தர்கள் அவளை அசுரர்களை அழித்தவள் என்றும் போற்றினார்கள். இந்த தேவி சண்டி தேவியின் வெளிப்பாடுகளில் ஒன்றாகவும், வைஷ்ணோ தேவியின் சகோதரியாகவும் கருதப்படுகிறாள். இக்கோவில் 18 ஆம் நூற்றாண்டில் பரோடா மன்னரால் கட்டப்பட்டது, அதே நேரத்தில் தான் சங்கதா காட் கட்டப்பட்டது.
இந்த கோவிலின் கட்டிடக்கலைப் பாணி, பாரம்பரிய வட இந்தியக் கோயில்களின் பாணியைப் போலவே உள்ளது. நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சுவர்களும், சங்கட தேவியின் சிலையைத் தாங்கிய கருவறையும் இதில் அடங்கும்.
இந்த கோவிலில் இருக்கும் அவளுடைய சிற்பம், மகா தேவியுடனான அடையாளத்தை உறுதிப் படுத்துகிறது. அவள் தோற்கடிக்கப்பட்ட அசுரனின் மீது தன் பாதத்தை வைத்திருப்பது போலவும், அவனது உடலில் இருந்து காளையின் தலை துண்டிக்கப்பட்டிருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. சங்கட தேவி வளாகத்திற்குள் நுழைந்தால், ஒரு பெரிய முற்றம் தென்படுகிறது. அதன் மையத்தில் ஒரு பழமையான அத்தி மரம் உள்ளது, அதன் வேர்களின் அடர்ந்த பகுதியில் பல சிறிய சன்னதிகள் பின்னிப் பிணைந்துள்ளன. கருவறைக்குள், நெடுங்காலத்திற்கு முன்பு தோன்றிய, ஒன்றரை மீட்டர் உயரமுள்ள சங்கதா தேவியின் சிலை வழிபடப்படுகிறது. வெள்ளி முலாம் பூசப்பட்ட தேவியின் சிலைக்கு இருபுறமும் அனுமான் மற்றும் பைரவர் சிலைகள் உள்ளன. சங்கட தேவி கோவில் வளாகத்திற்குள் ஒரு பெரிய சிவலிங்கம், விநாயகர், ஒன்பது கிரகங்களின் சன்னதி மற்றும் ஒரு புனிதமான ஆலமரம் ஆகியவையும் வழிபடப்படுகின்றன.
கோவிலின் வாயில்களில் சிங்கச் சிலை ஒன்று காவல் காக்கிறது. வளாகத்தின் ஒரு மூலையில் தேவியின் சன்னதிக்கான நுழைவாயில் உள்ளது. வாயிலுக்கு அருகில் சாகரேஸ்வரர் மற்றும் சங்கடேஸ்வரரின் லிங்கங்கள் உள்ளன. பிரதான வாயிலின் இருபுறமும் ஸ்ரீ யந்திரத்தின் புனிதமான பிரபஞ்ச வரைபடம் அமைந்துள்ளது . கருவறை இருண்டு காணப்படுகிறது, பலிபீடத்தில் உள்ள எண்ணெய் விளக்குகளால் மட்டுமே சன்னதி ஒளியூட்டப்படுகிறது.
கோவில் வளாகத்திற்குள் ஒரு பிரம்மாண்டமான சிங்கச் சிலை உள்ளது. பலிபீடத்தில் மூன்று மாடங்கள் உள்ளன: முதலாவது மாடத்தில் தெய்வீகக் காவலர்களும் ( துவாரபாலர்கள் ), கடைசி மாடத்தில் அனுமானையும் நடுவில் உள்ள மாடத்தில் வெள்ளி முகமூடி அணிந்த சங்கட தேவியின் திருவுருவத்தையும் வைத்திருக்கிறார்கள். வேறு எந்த அம்மன் கோவிலும் இல்லாத விசேஷம் இங்கு இருக்கிறது. அதாவது, பக்தர்கள் தேவியின் பாதங்களைத் தொட அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், இந்த சங்கட தேவி கோவிலுக்கு அருகில் ஒன்பது கிரகங்களைக் கொண்ட ஒன்பது கோவில்களும் உள்ளன. புராணங்களின் படி, மகாபாரதத்தின் வீரமிக்க பாண்டவ சகோதரர்கள் வனவாசத்தின் போது இந்தக் கோயிலின் மூல தேவியை வழிபட்டதாகவும் கூறப் படுகின்றன.
பண்டிகைகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது, அதிகபட்ச பக்தர்கள் விழாக்களில் கலந்து கொள்ள வருகிறார்கள். இவற்றில் மிக முக்கியமானது நவராத்திரி ஆகும். இந்த நாட்களில், சிலைகளைச் சுற்றி மலர்கள், விளக்குகள் மற்றும் அலங்காரங்கள் சூழ, கோவில் முழுவதும் துடிப்பாகவும் வண்ணமயமாகவும் காட்சியளிக்கிறது.
நவராத்திரியின் போது சிறப்புச் சடங்குகளும் பிரார்த்தனைகளும் செய்யப்படுகின்றன.
இந்த கோவிலை பொறுத்த வரையில் சங்கட சதுர்த்தி மற்றொரு முக்கியமான நாளாகும். இது தேய்பிறையின் நான்காம் நாளில் வருகிறது. இந்நாளில், பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் சங்கட தேவியை வழிபடுகிறார்கள்.
வாரணாசியின் மையத்தில் அமைந்துள்ள இந்த சங்கட மாதா தேவி மந்திர் ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமல்லாமல், பக்தர்களுக்கு ஆறுதலையும், வலிமையையும், வழிகாட்டுதலையும் வழங்கும் ஒரு புகலிடமாகவும் திகழ்கிறது.
இந்த பதிவை வாசிப்பதன் மூலம், உங்கள் வாழ்வில் ஏற்படும் தடைகள் மற்றும் கஷ்டங்களை நீக்கக்கூடிய காசி சங்கட தேவியின் முழுமையான அருளையும், கோவிலின் வழிபாட்டு முறைகளையும் அறிந்து, ஆன்மீக பலத்தையும் தெளிவையும் பெறுவீர்கள்.