ஒரே நாளில் 9 நவகிரக ஆலய தரிசனம்: பலன்களும் வழிபாட்டு முறைகளும்!

கும்பகோணம் நவகிரக தலங்களை ஒரே நாளில் சுலபமாக தரிசித்து தோஷங்கள் நீக்கும் எளிய வழிகாட்டி.
நவகிரக தரிசனம் - Kumbakonam Navagraha Tour
நவகிரக தரிசனம் - Kumbakonam Navagraha Tour
Updated on

ம் செயல்களும் வாழ்க்கை முறைகளும் நவக் கிரகங்களின் சுழற்சிக்கு ஏற்ப அமையும் என்று முன்னோர்கள் வகுத்துள்ளனர். நவக்கிரகங்களின் இடமாற்றத்துக்கு ஏற்ப, மனித மனமும் மாற்றத்தைக் காண்கிறது. நம் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு நவகிரக தரிசனம் அதிகாரியாக இருந்து நம்மை செயல்படுத்துகிறது என்று ஆன்மீகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி நம் வாழ்வோடு இயைந்துள்ள நவக்கிரகங்களை நம் வழிபாட்டு முறையிலும் இணைத்துள்ளனர் நம் முன்னோர்கள். அதனால் நம் மனம் அமைதியின்றித் தவிக்கும்போதோ, வாழ்வில் சிக்கல்களைச் சந்திக்கும் போதோ, தடைகளால் தவிக்கும்போதோ நவக்கிரக வழிபாடு நமக்கு ஒரு ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது. அதற்கேற்றாற்போல் ஒவ்வொரு கோளுக்கும் ஒவ்வொரு ஆலயம், அவற்றுக்கான வழிபாட்டு முறை, பரிகார முறை என வகுத்துள்ளனர் பெரியோர்கள்.

நவகிரகங்களுக்கான ஆலயங்கள்:

இப்போது அநேகமாக எல்லா ஊர்களிலும் நவக்கிரகத்திற்கான ஆலயங்கள் அமைந்திருந்தாலும், மிகவும் பழமை வாய்ந்த நவக்கிரகத் தலங்களைத்தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம். இவை அனைத்தும் கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் அமைந்துள்ள பழமையான வழிப்பாட்டுத்தலங்கள்.

சூரியன் – சூரியனார் கோவில்

சந்திரன் – திங்களூர்

செவ்வாய் – வைத்தீஸ்வரன் கோவில்

புதன் - திருவெண்காடு

குரு – ஆலங்குடி

சுக்கிரன் – கஞ்சனூர்

சனி – திருநள்ளாறு

ராகு – திருநாகேஸ்வரம்

கேது – கீழப்பெரும்பள்ளம்

சூரியன் - சூரியனார் கோவில்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருமங்கலக் குடியில் அமைந்துள்ள சூரியனார் கோவில் நவக்கிரகத் தலங்களில் முதன்மையான தலமாக விளங்குகிறது. குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம், பின் விஜயநகர மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டது. மற்ற நவக்கிரக ஸ்தலங்களைப்போல் அல்லாமல் இந்த ஆலயத்தில் சூரியனார்தான் முதன்மையான கடவுளாக அருள்கிறார். இங்கு சூரியனார் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில், இரு கரங்களிலும் தாமரை மலர்களோடு, இடப்புறம் உஷாதேவியுடனும், வலப்புறம் பிரத்யுஷாதேவியுடனும் திருமணக் கோலத்தில் அருள்கிறார்.

மனிதனின் ஆத்ம பலத்தை நிர்ணயிக்கக் கூடியவர் சூரிய பகவான். நம் வாழ்வில் தலைமைப் பதவி, அரசியல் யோகம், நல்வாழ்க்கை, ஆகியவற்றிற்குக் காரணமானவர் சூரியன்.

இவருக்கு உரிய நிறம் சிவப்பு. தானியம் கோதுமை. ஞாயிற்றுக்கிழமை மற்றும் சூரிய ஹோரைகளில் சூரியனாருக்கு அர்ச்சனை செய்து, சிவப்பு நிற மலர்கள் சாற்றி, கோதுமை, மற்றும் சிவப்பு வஸ்ததிரத்தை தானம் செய்து பரிகாரம் செய்யலாம்.

சந்திரன் - திங்களூர் கைலாசநாதர் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திங்களூர் கைலாசநாதர் ஆலயம். நவக்கிரங்களில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் சந்திரன். மனித உடலும் மனமும் சந்திரனின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக விஞ்ஞானமும் சொல்கிறது. பௌர்ணமி நாட்களில் கடல் அலைகளில் ஏற்படும் மாறுதல் பரவலாக நாம் அறிந்த ஒன்று.

நவகிரக தரிசனம் - Kumbakonam Navagraha Tour
நவகிரக தரிசனம் - Kumbakonam Navagraha TourAI Image

இத்தலத்தில் கைலாசநாதராக சிவபெருமானும், பெரியநாயகியாக அன்னையும் அருள்கின்றனர். தனி சந்நிதியில் மேற்கு நோக்கி சந்திரன் அருள்கிறார். ஜாதகத்தில் சந்திரனின் நிலை சரியில்லாதபோது, சந்திர தோஷம் ஏற்படுகிறது. சந்திர திசை மற்றும் சந்திர தோஷம் நீங்க இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம். சந்திர

பகவானுக்கு திங்கள்கிழமை மற்றும் பௌர்ணமியில் அபிஷேகம், வெண்பட்டு மற்றும் வெண்ணிற மலர்கள் சாத்துதல், அன்னம் மற்றும் வெள்ளை நிறப் பொருட்களை தானம் வழங்குதல் ஆகியவை பரிகாரமாகும். மன அமைதி, தாயின் உடல்நலம் மற்றும் கல்வியில் சிறக்க இங்கு பரிகாரம் செய்வது நல்லது.

செவ்வாய் – வைத்தீஸ்வரன் கோவில்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது சுமார் இரண்டாயிரம் ஆண்டு பழமையான வைத்தீஸ்வரன் கோவில். இங்கு சிவபெருமான் வைத்தியநாதசுவாமி என்ற பெயருடனும், முருகன் செல்வமுத்துக்குமார சுவாமியாகவும் அன்னை தையல்நாயகியாகவும் அருள்கின்றனர். சிவபெருமானின் அம்சத்தில் உருவான அங்காரகன் இத்தலத்தில் நீராடி, தன் நோய் நீங்கப்பெற்றதால், இங்கு அவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

அங்காரகன் (செவ்வாய்) ஈசனை வழிபட்டு பிணி நீங்கப்பெற்றதால், நோய் தீர்க்கும் தலமாக இது விளங்குகிறது. செவ்வாய் தோஷப் பரிகாரத்தலம் என்பதால், செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் இங்கு வந்து முருகனுக்கும் அங்காரகனுக்கும் சிறப்புப் பூஜை செய்கிறார்கள்.

வியாதிகள் குணமாக, மன அமைதி, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு, திருமணத்தடை, குழந்தைப்பேறு எனப் பல தோஷங்களை நிவர்த்தி செய்யும் திருத்தலமாக வைத்தீஸ்வரன் கோவில் திகழ்கிறது. சிவப்பு அரளி மாலை, சிவப்பு வஸ்திரம் சாத்தி இறைவனை வழிபட்டால் தடைகள் நீங்கும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் துவரை அன்னம் நிவேதனம் செய்து வழிபடுகிறார்கள். வெல்லம், உப்பு, மிளகு ஆகியவையும் இங்கே தோஷ நிவர்த்திக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இத்தலத்தில் பிரசாதமாக வழங்கப்படும் திருச்சாந்துருண்டை நோய்களைத் தீர்க்கும் மருந்தாக விளங்குகிறது.

புதன் – திருவெண்காடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியில் அமைந்துள்ள திருத்தலம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம். ஈசன் சுவேதாரண்யேஸ்வரராகவும், அன்னை பிரமவித்யாம்பிகையாகவும்

அருளும் இத்தலம் புதன் பரிகாரத்தலமாக விளங்குகிறது. இங்கு புதனுக்கு தனி சந்நிதி உள்ளது. புதன்கிழமைகளில் மற்றும் புதன் ஹோரைகளில் பச்சைப்பயறு தானம் செய்யலாம். கல்வி மற்றும் வியாபாரத்தில் சிறந்து விளங்கவும், பித்ரு பரிகாரம் செய்யவும், நரம்பு சம்பந்தமான நோய்கள் குணமாகவும் இத்தலத்தில் புதனுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி, வெண்காந்தள் மலர் சாத்தி, பாசிப்பருப்பில் செய்த நிவேதனம் அளித்து பதினேழு தீபம் ஏற்றி வலம் வந்து வழிபடுகிறார்கள்.

நவகிரக தரிசனம் - Kumbakonam Navagraha Tour
நவகிரக தரிசனம் - Kumbakonam Navagraha Tour

குரு – ஆலங்குடி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் குரு பகவானுக்கான தலமாக விளங்குகிறது. இங்கு ஈசன் ஆபத்சகாயேஸ்வரராகவும், அன்னை ஏலவார் குழலியாகவும் அருள்கின்றனர்.

இங்கு அருளும் தட்சிணாமூர்த்தியே குரு பகவானாக, நவக்கிரக தோஷம் நீக்குபவராக அருள்கிறார். இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, வெண் முல்லைப் பூக்களால் அர்ச்சனை செய்து, கொண்டைக்கடலை சுண்டல் செய்து வழிபட, குருவின் பார்வை வாழ்வை வளமாக்கும்.

சுக்கிரன் – கஞ்சனூர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயம். இங்கு ஈசனும் அம்மையும் அக்னீஸ்வரர் மற்றும் கற்பகாம்பிகை என்னும் திருநாமத்தோடு அருள்கின்றனர். இங்கு சிவபெருமானே சுக்கிரனாக அருள்வதால் சுக்கிரனுக்கு தனி சந்நிதி கிடையாது. இங்கு வெள்ளிக்கிழமைகளில் வெண்பட்டாடை சாத்தி, வெள்ளைத் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி, மொச்சை தானியத்தை தானமாகவோ, நிவேதனம் செய்தாலோ பொருளாதார சிக்கல்கள் தீர்ந்து வாழ்க்கை வளமாகும். திருமணத்தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை பெருகும்.

இதையும் படியுங்கள்:
விதி மாறும் திருத்தலம்! திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்வது எப்படி?
நவகிரக தரிசனம் - Kumbakonam Navagraha Tour

சனி – திருநள்ளாறு

காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் சனீஸ்வரனுக்கு உரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் பிராணேஸ்வரி அருளும் இத்தலத்தில் நள தீர்த்தத்தில் நீராடி, சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி, கருங்குவளை மலர் சாத்தி வழிபட்டால், ஜன்மச் சனி, அஷ்டமத்து சனி, கண்ட சனி, ஏழரை சனி ஆகியவற்றால் ஏற்படும் இன்னல்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.

இதையும் படியுங்கள்:
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சிறப்புகள் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்!
நவகிரக தரிசனம் - Kumbakonam Navagraha Tour

ராகு – திருநாகேஸ்வரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருநாகேஸ்வரம் எனும் ஊரில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் ராகு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இறைவன் நாகேஸ்வரர், இறைவி பிறையணிநுதலாள். இங்கு நாகவல்லி மற்றும் நாககன்னி என இரு தேவியருடன் மங்கள ராகுவாக ராகு பகவான் அருள்கிறார். ராகு தோஷம் நீங்கவும், கல்வி கற்பதில் ஏற்படும் தடைகள் விலகவும் ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து உளுந்தை தானமாக வழங்கினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

கேது – கீழப்பெரும்பள்ளம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கீழப்பெரும்பள்ளம் என்னும் ஊரில் அமைந்துள்ள நாகநாதர், சவுந்தரநாயகி அருளும் நாகநாதர் ஆலயம் கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்கு கேது பகவான் தனி சந்நிதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்கிறார். வேலைவாய்ப்பு கிடைக்கவும், நரம்பு சார்ந்த வியாதி நிவர்த்திக்கும், பணப்பற்றாக்குறை நீங்கவும், கொள்ளு தானம் அளித்து, பலவண்ண மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள இந்த நவக்கிரகப் பரிகாரத் தலங்களை ஒரே நாளில் தரிசித்து பலன் பெற, தமிழக அரசுப் போக்கு வரத்துக்கழகம் பேருந்து வசதி செய்துள்ளது.

நாம் தனிப்பட்ட முறையில் காரிலும் ஒரே நாளில் சென்று வரலாம். கும்பகோணத்தில் அதிகாலை காரில் அல்லது பேருந்தில் கிளம்பினால், கீழ்க்கண்ட வரிசையில் சென்றால் ஒன்பது ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்.

* சந்திர பரிகாரத்தலம் திங்களூர்

* குரு பரிகாரத்தலம் ஆலங்குடி

* ராகு பரிகாரத்தலம் திருநாகேஸ்வரம்

* சூரிய பரிகாரத்தலம் சூரியனார் கோவில்

* சுக்கிர பரிகாரத்தலம் கஞ்சனூர்

* செவ்வாய் பரிகாரத்தலம் வைத்தீஸ்வரன் கோவில்

* புதன் பரிகாரத்தலம் திருவெண்காடு

* கேது பரிகாரத்தலம் கீழப்பெரும்பள்ளம்

* சனி பரிகாரத்தலம் திருநள்ளாறு

இதையும் படியுங்கள்:
நெல்லையில் மூன்று வரங்களை அள்ளித்தரும் 'கெட்வெல் ஆஞ்சநேயர்' ஆலயம்!
நவகிரக தரிசனம் - Kumbakonam Navagraha Tour

கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்ப நம் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களை சங்கடங்களின்றி கடந்து வரும் மன வலிமையையும், துணிவும் பெற, இந்த நவக்கிரகப் பரிகாரத்தலங்களைத் தரிசித்து பலன் பெறுவோம்.

இந்தக் கட்டுரையைப் படிப்பதன் மூலம் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள 9 புகழ்பெற்ற நவகிரகத் தலங்களையும் எவ்விதக் குழப்பமுமின்றி ஒரே நாளில் தரிசித்து முடிப்பதற்கான தெளிவான பயணப் பாதையையும், ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏற்ற எளிய பரிகார வழிபாட்டு முறைகளையும் அறிந்து கொண்டு, வாழ்வில் ஏற்படும் தடைகளை நீக்கி அமைதியும் வளமும் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com