
சாபம் காரணமாக, பார்வதி தேவியும், நந்தி பகவானும் பூலோகத்தில் குஸீம ஸ்ரேஷ்டி - குஸீமாம்பிகை தம்பதியினருக்கு குழந்தைகளாக பிறந்தனர். விருபாக்ஷன் என்கிற பெயருடன் நந்தியும், வாசவாம்பா என்கிற பெயருடன் பார்வதியும் வளர்ந்தனர். வாசவாம்பா, வாசவியென்று அழைக்கப்பட்டார். இவர்கள் பூலோகத்தில் பிறந்த காரணம் என்ன?
ஒரு சமயம் கையிலாயத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் மெய்மறந்து சிறப்பாக நடனம் ஆடினர். நடனம் முடிந்தபின், நந்தி பகவான் மிகவும் மகிழ்ந்து, சிவபெருமானின் காலில் மட்டுமே விழுந்து வணங்கினார். இதைக் கண்டு கோபமடைந்த பார்வதிதேவி, நந்தியை பூலோகத்தில் பிறக்கும்படி சாபமிட்டார்.
நந்தி பகவானுக்கும் கோபம் வர, பார்வதி தேவியும் பூலோகத்தில் பிறந்து, கன்னியாக வாழ்ந்து அக்னி பிரவேசம் செய்ய வேண்டுமென்று எதிர் சாபமிட்டார். இதுவே பார்வதி தேவி, நந்தி பகவான் அவர்களின் பூலோக விஜய பின்னணி விபரம். இதற்கு மேலே நடந்தவைகள்...
வாசவாம்பாவாக பிறந்த பார்வதி தேவி திருமணப் பருவமடைந்தாள். வாசவியைக் கண்ட சித்திரகாந்தன் எனும் அரசன் அவள் மீது காதல் கொண்டு, வாசவியைத் தனக்கு மணமுடித்து தரும்படி, அவளுடை தந்தை குஸீமஸ்ரேஷ்டியிடம் கேட்டார். ஆனால் அவரோ, தனது இனத்து மக்களிடம் கேட்க வேண்டுமென்றார்.
18 நகரங்களைக் கொண்டது பெனுகோண்டா ஆட்சி. இங்கே வாழ்ந்து வந்த 714 கோத்திரங்களைச் சேர்ந்த வைஸ்யர்களின் சபையில் குஸீம ஸ்ரேஷ்டி, தனது மகள் வாசவி - சித்திர காந்தன் திருமணம் பற்றிக் கூறினார். 612 கோத்திரத்தினர் இதற்கு சம்மதம் தெரிவிக்க, மீதி 102 பேர்கள் குலப்பெருமை காக்க வேண்டி, சம்மதிக்கவில்லை. கருத்து வேறுபாடு ஏற்பட, இரு பிரிவுகளாக பிரிந்தனர்.
தன் திருமணம் காரணம், குடும்பத்தார் சண்டையிடுவது கண்டு வாசவி மனம் வருந்தினாள். குலப்பெருமையைத் தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டுமென்று எண்ணினாள். பெரிய அக்னி குண்டம் ஒன்றை அங்கிருந்த கோவிலின் முன்பு வளர்த்து, அதில் வாசவி அக்னி பிரவேசம் செய்தாள். பிறகு, வாசவி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியாக தோன்றி அங்கிருந்த அனைவருக்கும் அருள் புரிந்து மறைந்தாள்.
வாசவியைக் கொண்டாடும் வகையில், "வாசவி ஜெயந்தி" கொண்டாடப் படுகிறது. சித்திரை மாத வளர்பிறை தசமியன்று வரும் "வாசவி ஜெயந்தி" யை (இந்த வருடம் 07/05/2025) அனைவரும் கடைப் பிடிக்கின்றனர்.
வாசவி ஜெயந்தியன்று பெண்கள், குறிப்பாக நல்ல கணவன் மற்றும் மாங்கல்ய பலம் வேண்டுமென்றும் விரதம் இருந்து வாசவி (பார்வதி) அம்மனை வழிபடக் கூடிய ஒரு சிறப்பு நாளாகும். வாசவி கலியுகத்தில் அவதரித்த ஆதி பராசக்தியின் அம்சமென நம்பப்படுகிறது. வாசவி ஜெயந்தியன்று, அதிகாலையில் நீராடி, விளக்கேற்றி, விரதமிருந்து வாசவி அம்மனை வழிபடவேண்டும். அம்மன் படத்தினைப் பூக்களால் அலங்கரித்து, பூஜை செய்ய வேண்டும். நீர்மோர், பானகம், பாயாசம் போன்றவைகளை நிவேதனம் செய்து அனைவருக்கும் விநியோகிப்பது பலனைத் தரும். வாசவியை நாமும் வணங்கி வழிபடுவோம்.