சுவாமி ஐயப்பனை மனித வடிவில் மட்டுமே தரிசித்திருப்போம். ஆனால், வெள்ளித்தடி வடிவில் எங்கும் தரிசிக்க வாய்ப்பில்லை. அக்கோலத்தில் காண விரும்பினால் கேரள மாநிலம், எர்ணாகுளம் மஞ்ஜப்புரா அம்பாடத்து மாளிகை கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் இவரை ஒரு நிமிடம் நினைத்தாலே மனத்துயர் அனைத்தும் தீரும்.
சுவாமி ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளராஜா. இவருக்கு உதயணன் என்னும் திருடனால் தொந்தரவு இருந்தது. இதை அறிந்த ஐயப்பன், அந்தத் திருடனை எதிர்த்து போருக்குச் சென்றார். அம்பலப்புழா ஆலங்காட்டு ராஜாக்கள் இவருக்கு உதவியாகச் சென்றனர். அன்று முதல் இந்தக் குடும்பங்கள் ஐயப்பனின் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.
சுவாமி ஐயப்பன் தான் பூமிக்கு வந்த கடமைகள் நிறைவேறியதும் சபரிமலையில் கோயில் கொள்ள முடிவெடுத்தார். இதற்காக எருமேலியிலிருந்து சபரிமலைக்கு செல்லும் பாதையை சீரமைக்கும்படி அக்குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அம்பலப்புழா குடும்பத்தினர் பாதையை சீரமைக்க துணை நின்றனர். இதுவே பெரிய பாதை எனப்படுகிறது.
இதன் பிறகு ஐயப்பனும் அம்பாடத்து மாளிகை குடும்பத்தினரும் சபரிமலை சென்றனர். அங்கு பரசுராமர் ஸ்தாபித்த சிலையில் ஐயப்பன் ஜோதி சொரூபமாக ஐக்கியமானார். அம்பாடத்து மாளிகை குடும்பத்தைச் சேர்ந்த கேசவன் பிள்ளை ஆண்டுதோறும் சபரிமலை சென்று வந்தார்.
வயதான பிறகு சபரிமலைக்குச் செல்லும் வழியில் இவர் அந்தணர் ஒருவரை சந்தித்தார். அவர் கேசவனிடம் வெள்ளி முத்திரையுடன்கூடிய தடி, விபூதிப்பை, கல் ஆகியவற்றை கொடுத்து, ‘சிறிது நேரத்தில் வருகிறேன்’ எனச் சொல்லி விட்டுச் சென்றார். ஆனால், கூறியபடி அவர் வரவில்லை.
ஐயப்பனை தரிசித்து விட்டு கேசவன் ஊர் திரும்பும் வழியில் மீண்டும் அந்த அந்தணரை சந்தித்தார். ‘நான் கொடுத்த மூன்று பொருட்களையும் நீங்கள் பூஜித்து வந்தால் நன்மை பெறுவீர்கள்’ என்று சொல்லி மறைந்தார். அந்தணராக வந்தவர் சுவாமி ஐயப்பனே என்பதை உணர்ந்த அம்பாடத்து மாளிகை குடும்பத்தினர், சுவாமி ஐயப்பனுக்கு ஒரு கோயில் கட்டினர். கருவறையில் இந்தப் பொருட்கள் தர்ம சாஸ்தாவாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.
நோய், குடும்பப் பிரச்னை, மனக்கஷ்டம் தீர பக்தர்கள் இக்கோயில் ஐயப்பனை வழிபட்டு பலன் பெறுகின்றனர். சனி தோஷத்தால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் இந்த ஆலய வழிபாட்டால் விலகுவதாக பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். சபரிமலை வழிபாடு காலங்களில் மட்டுமே இந்த ஆலயம் திறக்கப்பட்டாலும் இங்கு பெண்களும் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்படுகின்றனர்
எர்ணாகுளத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் காலடி. அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் எர்ணாகுளம் மஞ்ஜப்புரா அம்பாடத்து மாளிகை கோயில் உள்ளது.