
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது வேங்கடம்பேட்டை ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில். இத்தலத்தில் பெருமாள் நின்ற, அமர்ந்த மற்றும் கிடந்த ஆகிய மூன்று திருக்கோலங்களில் காட்சி தருகிறார். ஷடமர்ஸனர் என்ற மகரிஷியின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ‘என்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்க, மகரிஷியின் விருப்பப்படி உலகைக் காக்க நின்ற, அமர்ந்த, கிடந்த கோலங்களில் காட்சி தந்து அருளும்படி வேண்ட, அதன்படியே பெருமாள் அருளுவதாக புராணம் கூறுகிறது.
செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் (கி.பி. 1464 - 1478) காலத்தில் இக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு செழிப்புடன் விளங்கியது. தெலுங்கு மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்த வேங்கடம்மாள் என்ற பெண்மணியின் நினைவாக இந்த ஊர் வேங்கடம்மாள் பேட்டை என்று அழைக்கப்பட்டது. பிறகு மருவி வேங்கடம்பேட்டை என்று ஆனது.
இக்கோயில் சுமார் 30,000 சதுர அடியில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. வாயிலில் முன் கருட மண்டபம் காணப்படுகிறது. கோயிலருகே பலி பீடத்தில் அபூர்வ கோலத்தில் கருடாழ்வார் சன்னிதி உள்ளது. கைகட்டி வணங்கி நிற்கும் தோற்றத்திற்கு பதிலாக பத்மாசன கோலத்தில் கருடன் இங்கு காட்சி தருகிறார். நாகம் இவரது தொடை மீது படமெடுத்தபடி உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு அபூர்வ கோலத்தில் கருடன் காட்சி தருகிறார். கருடனின் மேனியில் 12 நாகங்கள் காணப்படுகின்றன. கருட பஞ்சமியன்று இவருக்கு திருமஞ்சனம் செய்து வழிபட, நாக தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அமர்ந்த கோலப் பெருமாள் ஐந்து தலை நாகத்தின் கீழ் வீற்றிருந்து காட்சி தருகிறார். சங்கு, சக்கரம் ஏந்தி ஆறடி உயரத்தில் புல்லாங்குழல் ஊதி வலது காலை சற்றே மடித்து பெருவிரல் தரையில் பட நின்றபடி இன்னொரு கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். இவருக்கு இருபுறமும் ருக்மிணி, சத்யபாமா உள்ளனர். தாயார் செங்கமலவல்லிக்கு தனிச் சன்னிதி உள்ளது. தாயார் இரு கைகளிலும் தாமரை மலர் ஏந்தி வரத, அபய முத்திரையுடன் காட்சி தருகிறார்.
இக்கோயிலில் 18 அடி நீள பாம்பணையில் ஸ்ரீராமபிரான் துயில் கொள்ளும் காட்சி அனைவரையும் பரவசப்படுத்துகிறது. சப்த நாகங்களான கார்கோடகன், மகாபத்மன், பத்மன், சங்கபாலன், குளிகன், தேவதத்தன், தனஞ்செயன்ஆகிய ஏழு பேர் ஏழு தலைகளுடன் பெருமாளை தாங்கி உள்ளனர். மற்றும் பெருமாள் மார்பில் திருமகளும், திருவடியில் சீதா பிராட்டியும், வீர ஆஞ்சனேயரும் காட்சி தருகின்றனர். ஆண்டு தோறும் ஆவணி மாதம் இருபத்தைந்தாம் நாளிலிருந்து ஆறு நாட்களும் காலை ஆறு மணிக்கு சூரியன் தனது ஒளிக்கதிர்களால் மூலவரை வணங்குகின்றார். அதேபோல், புரட்டாசி மாதம் பௌர்ணமி முன்னும் பின்னும் தலா மூன்று நாட்கள் கழித்து சந்திரன் தனது ஒளிக்கதிரால் செங்கமலவல்லித் தாயாரை வணங்குகிறார். இது ஒரு அதிசய நிகழ்வாகும்.
கோயில் எதிரே 50 அடி உயரத்தில் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இங்குள்ள தூண்களில் குதிரை வீரர்களின் உருவம், நரசிம்மர், பிரகலாதன், ஹிரண்ய வதம் மற்றும் நாயக்க மன்னர் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஊஞ்சல் மண்டபத்தின் வடகிழக்கில் திருமால் தனது சக்கரத்தை ஏவி உருவாக்கிய சக்கர தீர்த்தம் கிணறு வடிவில் உள்ளதாக புராண வரலாறு கூறுகிறது.