
ஸ்ரீவில்லிபுத்தூர், வடபத்ரசாயி திருக்கோயில் 1,300 ஆண்டுகள் பழைமையானது. திவ்ய தேச கோயிலில் ஒன்றான இதனை, ஆண்டாள் கோயில் என்றால்தான் பலருக்குத் தெரியும். பெருமாள் கோயில்களில் வேறு எங்கும் காண முடியாத ஓர் அதிசயத்தை இங்கு காணலாம். பொதுவாக, தாயார் சன்னிதி தனியாகத்தான் இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும்தான் பெருமாளுடன் தாயாரும் ஒரே சன்னதியில் இருப்பார்கள். எல்லா பெருமாள் கோயில்களிலும் கருடாழ்வார் பெருமாளுக்கு எதிர்ப்புறம் இருப்பார். இங்கு பெருமாள், தாயார், கருடாழ்வார் மூவருமாக இருக்கிறார்கள். எல்லா கோயில்களிலும் ஒரு விமானம்தான் உண்டு. இந்தக் கோயிலில்தான் கருவறையில் இரண்டு விமானங்கள் இருக்கின்றன.
இக்கோயில் ஆண்டாள் கிளி மிகவும் விசேஷமானது. ஆண்டாள் ரங்கனை மணப்பதற்காக மூன்று பேரை தனித்தனியாக தூது அனுப்புகிறார். முதலில் மழையை தூதாக அனுப்புகிறார். மழை பெருமாளின் பேரழகைப் பார்த்ததும் பொழிந்து, சொல்ல வந்த விஷயத்தை மறந்துவிடுகிறது. அடுத்ததாக, வண்டை தூது அனுப்புகிறார். வண்டு, பெருமாளின் மாலையில் இருக்கும் தேனை அருந்திவிட்டு, அங்கேயே மயங்கிக் கிடந்து விடுகிறது. அடுத்ததாகத்தான் கிளியை தூது அனுப்புகிறார் ஆண்டாள் நாச்சியார். ‘சொன்னதைச் சொல்லுமாம் கிளி. ’கிளி தவறாமல் ஆண்டாள் சொன்னதைச் சொல்ல, ரங்கமன்னர் ஆண்டாளின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கிறார். அதனால்தான் இங்குள்ள ‘ஆண்டாள் கிளி’ மிகவும் விசேஷம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் தோளில் வைப்பதற்காக, தினம் தினம் ஒரு புதுக் கிளி தயார் செய்யப்படும். முதல் நாள் கிளியை, மறுநாள் கோயிலுக்கு வரும் உபயதாரர், முக்கிய பிரமுகர் மற்றும் பக்தர்களுக்கு என்று கொடுப்பது வழக்கம். ஆண்டாள் தோளில் 3 மணி நேரத்துக்கும் மேல் இந்தக் கிளி இருப்பதால், அதை புனிதப் பொருளாக பக்தர்கள் கருதி வாங்கி மகிழ்வது வழக்கம். இந்தக் கிளியை வாங்கி வீட்டில் வைத்து பூஜித்தால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் இதை வாங்க பலத்த போட்டி நிலவுகிறது.
அந்தக் கிளியைச் செய்வதற்கு 5 மணி நேரம் ஆகும் என்கிறார்கள். இலை, நார், பூ, மூங்கில் குச்சி இவற்றைக் கொண்டு செய்யப்படுவதுதான் இதன் சிறப்பாகும். கிணறு வெட்டும் இடங்களில் கிடைக்கும் காக்காபொன் கற்சில்லுகளை வைத்துக் கிளியின் கண் தயாராகும். பனை ஓலை, நந்தியாவட்டை இலை, செவ்வரளி இலை வைத்து இறக்கை கட்டப்படும். அவற்றையே பயன்படுத்தி வால் தயாராகும். கால்களுக்கு மூங்கில் குச்சிகள்; கிளியை நிற்க வைக்க பூச்செண்டு, நந்தியாவட்டை பூ, செவ்வரளி பூக்களைக் கொண்டு செய்யப்படுகிறது.
சாயரட்சை பூஜையின்போது இந்தக் கிளி சென்று ஆண்டாள் தோளில் அமரும். அர்த்தஜாம பூஜை வரை அங்கு அமர்ந்துவிட்டு, பூமாலை முதலியவை களையப்படும்போது அகற்றப்பட்டு, மறுநாள் கோயிலுக்கு வரும் ஒருவருக்கு இது கொடுக்கப்படும். இந்தக் கிளியை பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் செய்து தருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரின் நடுவே திருமுக்குளம் என்ற குளம் உள்ளது. இக்குளத்தில் சக்கரத்தாழ்வார் கோயில் இருக்கிறது. மார்கழி மாதம் இந்தக் குளத்தில்தான் ஆண்டாள் நீராடி கண்ணனை நினைத்து பாடுவார். அதனை நினைவு கூறும் வகையில் தற்போதும் இந்த குளத்தில் இருந்துதான் தண்ணீர் எடுத்துச் சென்று ஆண்டாளுக்கு அபிஷேகம் செய்கின்றனர். ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் அருகில் இருக்கும் மைய மண்டபத்தில் இருக்கிறது ‘கண்ணாடி கிணறு.’ இதற்கு ஏன் இந்த பெயர்? இன்றைக்கு முகம் பார்க்க விதவிதமான கண்ணாடிகள் உள்ளன. ஆனால், அந்தக் காலத்தில் அது ஏது? அப்போது ஆண்டாள் தன்னை அலங்கரித்து பூ வைத்துக் கொள்ள கை கொடுத்தது இந்தக் கிணறுதான்.
தெளிந்த நீரை கொண்ட இந்தக் கிணற்று நீர் கண்ணாடியைப் போல மாசுமருவற்ற முகத்தை ஆண்டாளுக்குக் காட்டி வந்ததாம். தினந்தோறும் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆண்டாள், பெருமாளுக்கென கட்டிய மாலையை சூடி இந்தக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து சரி செய்வாராம். இந்த அலங்கார வரலாற்று கிணற்றை கோயில் நிர்வாகம் கண்ணாடிக் கூண்டு போட்டு பாதுகாத்து வருகிறது.
வில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள், தான் காதல் கொண்ட கண்ணனை மணப்பதற்காக மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்தாள். அதன் பயனாக அவளது காதலும் கைகூடியது. பெருமாளையே மணந்தார். இதனாலேயே அந்த மாதத்தில் பாவை நோன்பு என்கிற நோன்பை கன்னிப்பெண்கள், விரும்பும் கணவனை அடைய கடைப்பிடிக்கிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் திருக்கோயிலில், மார்கழி மாதம் நடைபெறும் ஆண்டாள் எண்ணெய்க் காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழு படி எண்ணெய் விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலு படி தைலம் கிடைக்கும். மார்கழி மாத ஆண்டாள் எண்ணெய்க் காப்பு உத்ஸவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்தத் தைலமே சாத்தப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக இந்தத் தைலப் பிரசாதம் தரப்படுகின்றது. நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் பக்தர்களால் நம்பப்படுகின்றது.