
நம் எல்லோருக்கும் விசுவாமித்திரர் பற்றி தெரியும். அவர் மனம் நோகும்படி நடந்தால் கோபம் ஆகி சாபம் விடுவார்.
ஒருநாள் வசிஷ்டர், விஸ்வாமித்ரிடம், தன் முன்னோர் திவசத்திற்கு தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு அழைத்தார்.
அதற்கு விஸ்வாமித்ரர், 'வருகிறேன், ஆனால் 1008 வகை காய்கறிகளை செய்து படைக்க வேண்டும்' என்றார்.
விஸ்வாமித்திரர் தன்னை அவமானப்படுத்தவே இப்படிச் செய்கிறார் என்பதை அறிந்த வசிஷ்டரும், '1008 வகை காய்கறிகள் தானே தாராளமாக படைக்கலாம். அருந்ததியிடம் ஏற்பாடு பண்ண சொல்லுகிறேன்,' என்றார்.
ஒருவழியாக திவசம் கொடுக்கும் நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் சாப்பிட அமர்ந்தார். அப்போது அவருக்கு முன் ஒரு வாழை இலையில் பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத்துவையல் என அந்த இலையில் எவ்வளவு வைக்க முடியுமோ அவ்வளவு பரிமாறப்பட்டது...
ஆனால் விஸ்வாமித்திரர் கேட்ட படி அதில் 1008 காய்கறிகள் இல்லாததால், அவர் கோபத்துடன் வசிஷ்டரைப் பார்த்து, '1008 காய்கறிகள் எங்கே?' என்றார்.
வசிஷ்டரோ, தான் அருந்ததியிடம் ஏற்கனவே சொல்லிவிட்டதாகக் கூறி, 'நீங்கள் அவளிடம் கேளுங்கள்' என்று தப்பித்துக் கொண்டார்.
நடப்பதை அறிந்த அருந்ததி, “ஸ்வாமி நான் நீங்கள் கேட்டுக்கொண்டபடி 1008 காய்கறிகள் பரிமாறி உள்ளேன்,” என்றாள்.
'என்ன விளையாடுகிறாயா?' என்று கோபமாக கேட்டார் விஸ்வாமித்திரர்.
ஆனால் அருந்ததியோ துளி கூட கோபப்படாமல் மிகவும் புன்னகையுடன்,
"காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம் பனஸம் ஷட் ஸதம்சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே"
என்ற ஸ்லோகத்தை கூறிவிட்டு, 'இதற்கான அர்த்தம் உங்களுக்கு புரிந்திருக்குமே! நான் பதில் அளித்த விதம் திருப்திதானே?' என்று விஸ்வாமித்திரரிடம் கேட்டாள் அருந்ததி.
இதனைக் கேட்ட விஷ்வாமித்திரர் வாய் அடைத்துப்போனார். பின் அவர் எதுவும் பேசாமல் சாப்பிட்டு வாழ்த்திவிட்டுச் சென்றார்.
அருந்ததி பாடிய பாடலுக்கான அர்த்தம்:
பொதுவாகவே திதி அன்று சமைக்கப்படும் உணவில் பாகற்காய் 100 காய்களுக்கும், பிரண்டைத்துவையல் 300 காய்களுக்கும், பலாப்பழம் 600 காய்களுக்கும் சமம் ஆகும். இவற்றுடன் வாழைக்காய் சேர்த்தால் 1008 ஆகும்.
இதுவே அப்பாடலுக்கான அர்த்தமாகும். இதனால்தான் விஸ்வமித்தனர் வாயடைத்துப் போனார்.
எனவேதான் நாம் ஸ்ரார்த்தம் செய்யும் போது, பாகற்காய், வாழைக்காய், பிரண்டை, மற்றும் பலா பழம் போன்றவற்றை படைத்து முன்னோர்களுக்கு திதி கொடுக்கிறோம்.