
கடவுள்களிலேயே மிகவும் எளிமையான கடவுள்கள் ஆஞ்சனேயரும், விநாயகரும்தான். இவர்களை எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து வழிபட்டாலே அவர்களின் அருளைப் பெற்று விடலாம். ஆஞ்சனேயர் அஞ்சனைக்கும் வானர மகாராஜா கேசரிக்கும் பிறந்தவர். சிவபெருமானின் அம்சமாக போற்றப்படுபவர். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், வீரம், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுர்யம் போன்ற அனைத்தையும் ஒருங்கே பெற்றவர் அனுமன். இவரை வழிபடுகின்றவர்களுக்கு மேற்குறிப்பிட்ட அனைத்து நன்மைகளையும் அருள்பவர்.
சீதா தேவியால் சிரஞ்சீவி என்ற பட்டம் பெற்றவர். இவர் பிறந்த தினமே அனுமத் ஜயந்தியாக கொண்டாடப்படுகிறது. இவர் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். வட மாநிலத்தவர்கள் பங்குனி மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் அனுமத் ஜயந்தி கொண்டாடுகிறார்கள்.
எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயர் வீற்றிருப்பார். அனுமனின் அருளை எளிதில் பெற ராம நாம ஜபம் ஒன்றே எளிய வழி. அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன், ராம தூதன் என அழைக்கப்படும் அனுமனை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம் என்கிறார்கள். சிவனின் அம்சமாகத் தோன்றிய அனுமனை வழிபட சனி தோஷம் நீங்கும்.
ஆஞ்சனேயரை எல்லா கிழமைகளிலும் வணங்கலாம். ஆனால், செவ்வாய் கிழமையும், சனிக்கிழமையும் இவரை வழிபட கூடுதல் சிறப்பு. துளசி மாலை சாத்தி வழிபட சனி பகவானின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலை சாற்றி வழிபட எண்ணியது நிறைவேறும். வட இந்தியாவில் ஜாங்கிரி மாலை சாத்தி வழிபடுகின்றனர்.
பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன்தான் அனுமனுக்கு முதன் முதலாக வால் வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது. அனுமனின் வாலில் நவகிரகங்கள் இருப்பதாக ஐதீகம். எனவே, வாலின் நுனியிலிருந்து சந்தனம், குங்குமம் 48 நாட்கள் தொடர்ந்து வைத்து துளசி மாலை சாத்தி, அனுமன் சாலீஸா பாராயணம் செய்ய நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. சுந்தர காண்டம் படிப்பதும், வடைமாலை சாத்தி வழிபடுவதும் வழக்குகளில் வெற்றி கிட்டச் செய்யும் என்பதும் நம்பிக்கை.
இலங்கையிலிருந்து சீதையை வணங்கி அனுமன் விடைபெற்றபோது மகாலட்சுமியின் அம்சமான சீதாதேவி தனது அருகில் இருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து ஓர் இலையைக் கிள்ளி அனுமன் தலையில் போட்டு வாழ்த்தியதால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து அவரது ஆசியை, அருளைப் பெறலாம். வெற்றிலை மாலை சாத்தி இவரை வழிபட தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.
அனுமனுக்கு வெண்ணைக் காப்பு சாத்தி வழிபட்டு வந்தால் கஷ்டங்களும் வெண்ணை உருகுவது போல் உருகிவிடும் என்பது பெரியோர் வாக்கு. ராம சேவைக்காக தனது உடம்பை புண்ணாக்கிக் கொண்டவர் அனுமன். போர்க்களத்தில் அவர் பட்ட காயத்தின் வேதனை குறைய அனுமனுக்கு வெண்ணை சாத்தும் பழக்கம் வந்தது. நாமக்கல் ஆஞ்சனேயருக்கு கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும். வெண்ணைக்காப்பு சாத்தி வழிபட குழந்தை பாக்கியம் கிட்டும்.
அனைத்து கடவுள்களுக்கும் பிடித்த மந்திரங்கள் என சில உண்டு. ஆனால், ஆஞ்சனேயரைப் பொறுத்தவரை அவர் ராமரை வழிபடுவதையே உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். எனவே அவரின் அருளைப் பெற ‘ஸ்ரீ ராம ஜயம்’ என்ற ராம மந்திரம் உச்சரிப்பதே சிறந்த வழி. நங்கநல்லூர் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர், உலகப் புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர், லஸ் ஆஞ்சநேயர் மயிலாப்பூர், யோக ஆஞ்சநேயர் சோளிங்கர், விஸ்வரூப அனுமன் சுசீந்திரம், வியாச ராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காக்களூர் வீர ஆஞ்சனேயர், பஞ்சவடி ஆஞ்சனேயர் போன்றவை சில பிரசித்தி பெற்ற அனுமன் ஆலயங்களாகும்.